Monday, April 4, 2011

"தோனி ஒரு முட்டாள்!" ஆங்கிலேயரின் அடாவடிப் பேச்சு!


பதினோரு முட்டாள்கள் விளையாடுவதை பதினோராயிரம் முட்டாள்கள் உட்கார்ந்து பார்ப்பதுதான் கிரிக்கெட்டு என்று இவர்தான்  மிகக் கேவலமாகச் சொன்னாராம்!

கொளுத்தற வெயில்ல
மேட்ச் பாக்கறது
இவ்ளோ கஷ்டமா
இருக்கேங்கிற கோவத்திலதான்
இப்படிப் பொசுக்குன்னு
சொல்லிப்புட்டீங்களோ?!  
 
என்ன தைரியம் இவருக்கு? இவரைச் சும்மா விடலாமா? கொஞ்சம் குறுக்கு விசாரணை செய்யலாம் வாங்க!

பெரியவரே!
நீங்கள் சொன்னது உண்மையென்றால், இறுதிப் போட்டியில், கோப்பைக்காக ஆடிய இரண்டு அணிகளில், அதிக முட்டாள்கள் இருந்த அணிதானே வெற்றி பெற்றிருக்க வேண்டும்? அப்படியா நடந்தது?!

குறைந்த பட்சம், 
போட்டியிட்ட இரண்டு அணித்தலைவர்களில் யார் பெரிய,  வடிகட்டின முட்டாளோ, அவரது அணியாவது வெற்றி பெற்றிருக்க வேண்டும்? அப்படியா நடந்தது?

எழுந்து நடக்கும்
குழந்தை முதல் எழுந்திருக்கக்கூட முடியாத முதியவர் வரை,   நூற்றுப் பத்து கோடிக்கும் மேற்பட்ட இந்தியர்கள் சனிக்கிழமை இரண்டு மணிக்கு மேல் உலகத்தையே மறந்து, உலகக் கோப்பையை மட்டுமே பார்த்தார்களே,  அவர்கள் அனைவருமே முட்டாள்களா?

செல்வாக்கு
மிக்க, செல்வத்தலைநகராம், பரபரப்பான, தூங்காமாநகர்  மும்பைக்கு அரசு விடுமுறையே அறிவித்தார்களே,  அவர்கள் முட்டாள்களா?

தலைபோகிற வேலையெல்லாம்
கூட அப்புறம் பாத்துக்கலாம் என்று ஒத்திப் போட்டுவிட்டு, நம்பளை ஆளை வச்சு அடிக்கிற பாகிஸ்தான் பிரதமரையே அன்போடு அழைத்துப் பக்கத்தில் வைத்துக் கொண்டு ஆனந்தமாய் அரையிறுதி ஆட்டத்தைப் பார்த்தாரே மன்மோகன் சிங்,  அவர்
கடவுள்... பிரசாதம்... பக்தன்!
22 வருட வேண்டுதல் ...இல்லீங்களா?      
என்ன முட்டாளா?  {2G ஊழல் விஷயத்திலே வேணும்னா அவர் கொஞ்சம் அப்படித்தான்னு  நினைக்கறதிலே தப்பே இல்லைன்னு கூட சொல்லலாம்:( }!

சினிமாவுக்கு வருபவர்களிடம், கிரிக்கெட்டைக் காண்பிப்போம் என்று சொல்லி அடிவாங்காமல், அமோக ஆதரவு பெற்றார்களே அந்தத் திரையரங்கு முதலாளிகள், அவர்கள் முட்டாள்களா?

பரிவே
உருவாகி, சற்றும் சளைக்காமல், சமையலறைக்கும் நடுக்கூடத்துக்குமாய் (ஹால்) நடந்து நடந்து மோர், தேநீர், குளிர் பானங்கள், நொறுக்குத் தீனி, காப்பி, பஜ்ஜி, பல்சுவை உணவு என்று தன் வீட்டாருக்கும், கூடிக் கொண்டாட வந்த நண்பர் கூட்டத்துக்கும் கொடுத்த வண்ணமே இருந்தார்களே அன்புத் தாய்மார்கள், அவர்கள் முட்டாள்களா?

ஒட்டு மொத்த இந்தியாவே, அந்தப் பதினோரு பேருக்காக - சாதி, இன, மத, மொழி மற்றும் பல்வேறு பிரிவினைப் பிசாசுகளை ஓர் அறையில் அடைத்து வைத்துவிட்டு   - ஒரே ஜீவனாய்,
தோனி உயர்த்தியது இந்தக் கடைசிப்  பந்தை மட்டுமா?
இல்லை,  இல்லை...  நம் நாட்டையே தானே!
 இந்தியனாய் மண்டியிட்டுப் பிரார்த்தனை செய்ததே, அது மகா முட்டாள்தனமா?

கோடானுகோடி மக்கள்,
தன் ஒவ்வொரு அசைவையும், நினைப்பையும், முடிவையும், தீர்மானத்தையும் பெரிய பூதக்கண்ணாடியைக் கையிலெடுத்துக் கொண்டு அணு அணுவாகத் தோண்டித் துருவிப் பார்த்துக் கொண்டிருக்கிறார்களே என்ற பயம் கொஞ்சமும் வெளியில் தெரியாதவாறு, இத்தனை வீரத்துடனும், விவேகத்துடனும் தன் குழுவை வழி நடத்தி வெற்றியும் பெற்ற, தோனியா முட்டாள்?

தலைமைப்
பொறுப்பில் இருக்கும் போது, தான் என்ன செய்ய வேண்டும் என்று மற்ற எல்லோரும் எதிர்பார்க்கிறார்களோ அதையே செய்தால், தோல்வியே அடைந்தாலும் கூட அடிவிழாமல் தப்பிக்கலாம் என்று கோழைபோல் சிந்திக்காமல்; எந்த நேரத்தில் எப்படிச் செயல் பட வேண்டும் என்று தீவிரமாக ஆராய்ந்து, முறையான கலந்தாலோசனையும் செய்தபின், முடிவெடுத்து நிறைவேற்றி, முன்னேறி,  "செய் அல்லது செத்து மடி" என்று தனக்குள்ளேயே வீர முழக்கமிட்டு, தன் முறை வரும் முன்பே களத்தில் இறங்கி மிக நிதானமாகவும், படுசாதுர்யமாகவும் போரிட்டு, வெற்றி குவித்துக் கோப்பை கொணர்ந்த,  உலகம் போற்றும் உன்னதத் தலைவன், தோனி முட்டாளா?

கோப்பையைக்
 கொண்டுவந்து குழுவினரிடம் கொடுத்துவிட்டு, கொண்டாடுங்கள் தோழர்களே, இது உங்களால்தான் சாத்தியமானது என்று சொல்லாமல் சொல்லி, விலகி நின்று வேடிக்கை பார்த்தாரே, எங்கள்  தோனி,  இவரா முட்டாள்?

இதையெல்லாம் விட்டுத் தள்ளுங்கள்! கல்லூரிப் படிப்பையே கூட முடிக்க முடியாமல் போன  இந்தக் காவியத் தலைவன், உலகப்  பிரசித்தி  பெற்ற மேலாண்மை, வியாபார  மேற்படிப்புக்  கல்லூரிகள்  மற்றும் பல்கலைக்  கழகங்களில் பணியாற்றும், ஆளுமைத்துறையில் 
உலக நாயகனான நம் நாட்டு நாயகன்!
அனைத்தையும் கரைத்துக் குடித்த, பேராசிரியர்களுக்கே கூட,  தலைமை  என்றால்  என்ன? தலைவன் எப்படி இருக்க  வேண்டும்? முதலில் அவன் எப்படித் தன்னையே தயார் செய்து கொள்ள வேண்டும்? மற்றவர்களிடம் எப்படி நடந்து  கொள்ள  வேண்டும்?  பல  மனிதர்கள் அடங்கிய ஒரு குழுவை, ஒரே பார்வையும்,  குறிக்கோளும், அணுகுமுறையும் கொண்ட  தனிமனிதன்  போலவே  மாற்றியமைக்கும் மந்திரவாதியாவது எப்படி? பலவிதமான ஆசைகளையும், பயங்களையும், தவிப்புகளையும், எதிர்பார்ப்புகளையும் வைத்துக் கொண்டு வளரத் துடிக்கும் தன் குழுவினரைக் கட்டுக் கோப்பாக வைத்திருப்பது எப்படி? அவர்களை உரசலில்லாமல், குதறித் தள்ளாமல் வெற்றியை  நோக்கி  வழி நடத்திச்  செல்வது  எப்படி?  என்றெல்லாம் உலகளாவிய, திறந்தவெளிப் பல்கலைக் கழகத்தில் நேருக்கு நேர் (Live) விரிவுரையாற்றிப் புரிய வைத்திருக்கிறாரே இன்று, இந்த உலக நாயகன் தோனியைப் பார்த்து, முட்டாளென்று சொல்ல மனமோ, தைரியமோ வருமா உங்களுக்கு?
I Support Jan Lok Pal Bill

சொல்லுங்கள் பேரறிஞர் பெர்னார்ட் ஷா அவர்களே! சொல்லுங்கள்! அடடே, அவர் நம்முன் தோன்றி பதில் சொல்ல மாட்டாரோ  ...! அப்படியானால்,  அவர் சொன்னது சரிதான் என்று மனப்பூர்வமாக நம்பி, இன்றும் கூட அவருக்காக வாதாடத் தயார் என்று சொல்லி முன்வரக்கூடிய, அறிஞர் பெருமக்கள் யாராவது இருந்தால், அவர்களாவது அன்பு கூர்ந்து பதில் சொல்வார்களா!

- மனம்திறந்து ...(மதி).

பின் குறிப்பு:
  1. எது எப்படி இருந்தாலும், ஏப்ரல் மாத ஆரம்பத்திலே முட்டாள்களைக் கொண்டாடுவதிலோ, அவர்களைப் பற்றிப் பேசுவதிலோ அல்லது நமக்கே தெரியாமல் நம்முள் புதைந்து கிடக்கும் முட்டாள்தனங்களைச் சுய பரிசீலனை செய்யத் தூண்டுவதிலோ தப்பே இல்லீங்களே!
  2. கொஞ்சம் கூட முட்டாள்தனமே இல்லாத மனித வாழ்க்கை நிஜமானதாகவோ,முழுமை பெற்றதாகவோ அல்லது சுவை நிறைந்ததாகவோ அமைந்ததாக   சரித்திரமே இல்லீங்கோ! ஹையா....ரொம்பவே சந்தோஷப் படறீங்க போல... இதுக்குத்தானே இங்கே வாங்க, வாங்கன்னு கூரைமேலேறிக் கூவிக் கூப்பிட்டேன்! ஆனா நீங்க என்னவோ ரொம்ப யோசனை பண்ணிட்டு மெதுவாத்தானே வந்தீங்க, அதுக்கு நான் என்ன பண்றது? :))) சரி, இனிமேலாவது நம்ம பதிவின் சுட்டியை எங்கே பார்த்தாலும் உடனே சொடுக்கிட்டு,  ஓடி வந்துடுங்க... நம்ம கடைக்கு! 
  3. அறிஞர் பெருமக்களுக்கு நான் விடுத்த சவாலான வேண்டுகோளைத் தன்னை அறியாமலே ஏற்றுக்கொண்டு, ஒரு உதவிப் பேராசிரியர் அவர் தரப்பு வாதங்களை அழுத்தம் திருத்தமாக முன்வைத்திருக்கிறார்.  இதில் ஆச்சரியம் என்னவென்றால், அவருக்குத்  தமிழ் தெரியாது!  அவர் என்னுடைய வாதங்களைப் படித்திருக்க வாய்ப்பில்லை! ஆனாலும், நன்றாகவே  வாதாடி இருக்கிறார், இதோ, ஆங்கிலத்தில்: Cricket unites, but is there no world beyond?
  4. இந்தப்  பதிவு  எழுதி  சரியாக மூன்று வாரம் கூட முடியவில்லை.  ஆனால் இதற்குள்ளாகவே, என்னுடைய கருத்தை அமோகமாக ஆதரித்துள்ள  உலகப் புகழ் பெற்ற அமெரிக்கப் பத்திரிகையான TIME, மிகவும் உணர்ச்சி வசப்பட்டு, இன்னும் ஒருபடி மேலே போய்,  "அமெரிக்க அதிபர் ஒபாமாவைக் காட்டிலும்  தோனி செல்வாக்கு மிக்கவர்(சக்தி வாய்ந்தவர்)!"  என்று உலகின் கூரை மேல் ஏறி உரக்கச் சொல்லி இருக்கிறது பாருங்களேன், இதோ: Dhoni more influential than Obama: Time magazine. இதற்கு மேல் என்ன அங்கீகாரம் வேண்டும் இந்தப் பதிவுக்கு...? இல்லை... எனக்கு? இல்லை...இல்லை... இந்தியர்களாகிய நமக்கு?!
  5. Images Courtesy:- World Cup: http://www.espncricinfo.com Bernard Shaw: http://lib-1.lse.ac.uk/archivesblog/?p=82

33 comments:

சக்தி கல்வி மையம் said...

ஆகா கலக்கல்..

Unknown said...

பகிர்வுக்கு நன்றி சகோ பதிவ போட்டு தாளிசிட்டீங்க போல ஹிஹி!

பொன் மாலை பொழுது said...

பெர்னாட்ஷா சொல்லவந்தது

இந்த விளையாட்டால் நேரும் கால விரயம் பற்றி என நினைக்கிறன்.

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ம்... சூப்பர் தல...

Yoga.s.FR said...

சரி!சரி!!கூப்பூட்டீங்கோ,வந்துட்டேன்.ஒரு குவாட்டர் கெடைக்குமா?(ஒரு டீயாவது?,,,,,,,,,,செந்தில் ஸ்டைலில் படிக்கவும்!)

வலிப்போக்கன் said...

அறிஞர் சொன்னது சரிங்கோ,நீங்க சொல்றது தப்புங்கோ.

மனம் திறந்து... (மதி) said...

வேடந்தாங்கல் - கருன்: வாங்க நண்பரே...நன்றி!

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

// கோப்பையைக் கொண்டுவந்து குழுவினரிடம் கொடுத்துவிட்டு, கொண்டாடுங்கள் தோழர்களே, இது உங்களால்தான் சாத்தியமானது என்று சொல்லாமல் சொல்லி, விலகி நின்று வேடிக்கை பார்த்தாரே, எங்கள் தோனி,//
Honestly, that quality was great about this guy... well deserved post as captain...

Super round up post... thoroughly enjoyed... same way enjoyed the final match... good one... and we won.....................:))

மனம் திறந்து... (மதி) said...

விக்கி உலகம்: வாங்க சகோ ! வருகைக்கும், கருத்துக்கும் ரொம்ப நன்றி! சமையல் நுணுக்கம் எல்லாம் இங்கே சுத்தி சுத்திப் பாத்துக் கத்துகிட்டது தாங்க! :)))

மனம் திறந்து... (மதி) said...

கக்கு - மாணிக்கம்: வாங்க சகோ! வருகைக்கும், கருத்துக்கும் ரொம்ப நன்றி!

முதலில் உங்களைப் பற்றி: உங்கள் பின்னூட்டங்களைப் பல இடங்களில் பார்த்து வருகிறேன்! உங்கள் சிந்தனையும், அதைப் பாங்குடன் பகிரும் விதமும் பலமுறை என்னை வெகுவாகவே கவர்ந்திருக்கின்றன! தொடருங்கள் உங்கள் நற்பணியை, வாழ்த்துகள்!

நீங்க சொன்னதும், அவர் சொல்ல வந்ததும் அதே தாங்க! அது உண்மையும் தான்! அந்த வகையில் பார்த்தால் வாழ்க்கையின் பல விஷயங்களில் வெவ்வேறு விதமாக நம் நேரம் வீணாகிறதென்னவோ உண்மை தான்!

என்னுடைய ஒரே வாதம்: இப்படி ஒரு நாடே ஒன்று கூடிப் பார்த்து உணர்ச்சி வசப்படும், உச்ச நீச்சங்களைத் தொடும் ஒரு நிகழ்வை நேர விரயம், முட்டாள்தனம் என்று அவ்வளவு சுலபமாக ஒதுக்கித் தள்ள முடியுமா என்பதுதான்! வேறொன்றுமில்லை!

மற்றபடி அந்த மாமேதையுடன் வம்புக்குப் போகும் தகுதியோ, அறிவோ, ஆற்றலோ எனக்கில்லையே! நான் ஆங்கில இலக்கியம் (இளங்கலை, முதுகலை இரண்டுமே) படித்தவன்! அதனால் தான் அவரைப் பற்றி எள்ளளவும் தவறாகப் பேசவில்லை என் பதிவில்!

மனம் திறந்து... (மதி) said...

வலிபோக்கன்: வாங்க அன்பரே ! அறிஞருக்காக வலிந்து வாதாட யாரும் வரவில்லையே என்ற என் ஏக்கத்தையும், மன வலியையும் போக்க வந்த வலிபோக்கன் உங்களுக்கு மனமார்ந்த நன்றி!

மேலே நண்பர் கக்கு-மாணிக்கம் அவர்களுக்கு அளித்த விரிவான விடையே உங்களுக்கும் போதுமானதே! இருந்தாலும் ஒன்றைச் சொல்ல வேண்டும் உங்களுக்கு!

இருப்பவர்களையே சண்டை போட்டுச் சாகடிக்கும் இந்தக் காலத்தில் இறந்த மாமேதையுடன் மல்லுக் கட்டி, வீண் வம்பு செய்து, வித்தியாசமாக விளங்க வேண்டும் என்ற விபரீத ஆசை எனக்கில்லை!

ஆனாலும், காலப் போக்கில் கருத்துகள் மறுபரிசீலனைக்கு உட்படுத்தப் படவேண்டியவை என்பது மறுக்க முடியாத உண்மை தானே! அதுதானே இந்தப் பதிவின் சாரமும்!

மனம் திறந்து... (மதி) said...

கவிதை வீதி,சௌந்தர்: வாங்க, ரொம்ப நன்றி!

மனம் திறந்து... (மதி) said...

Yoga.s.FR: வாங்க, வாங்கண்ணே! உங்களுக்கு இல்லாததா! உள்ளே, அந்த ரூமிலே போய் உக்காருங்க, தா....ரெண்டு நிமிஷத்திலே கவுண்டமணி அண்ணனும் வந்திடுவாரு... அப்புறமென்ன... குவாட்டரா, டீயா, உங்களுக்கு இன்னால்லாம் வோணுமோ அம்புட்டும் கெடைக்குமுங்கோவ்வ்வ்வவ்! :)))

மனம் திறந்து... (மதி) said...

Yoga.s.FR: ஆங்...சொல்ல மறந்துட்டேனே! நம்ப கடையிலே டீ, காப்பி மட்டும் தாங்க கிடைக்கும்! குவாட்டர், அண்ணன் கொண்டாருவாறு...அதை வாங்கிக் காலி பண்ணிப்புட்டு, பாட்டில்லே வழக்கம் போல வேற எதையாவது ஊத்திக் குடுத்திட்டு அண்ணன் கிட்டே செமத்தியா வாங்கிக் கட்டிக்கங்க! இல்லியா...அடி ஒதை வாங்காம குவாட்டர் போடணும்ம்னா , பிரபா ஒயின்ஷாப் கொஞ்ச நாளைக்கப்புறம் இப்பத்தான் திருப்பியும் தொறந்திருக்காங்களாம்! ஒரு வாரத்துக்கு அங்கே வர்ற எல்லாருக்கும் ஒரு குவாட்டரு இலவசமாத் தராங்களாம்! (இதுக்குப் பேர் போன ஒரு கட்சி தலைவர் தான் இதை sponsor பண்றாரோ என்னவோ? அதெல்லாம் நமக்கு எதுக்குங்க?) நீங்க போய் உங்க வேலைய முடிச்சிக்குங்க... சீக்கிரம்...போங்க! :)))

மனம் திறந்து... (மதி) said...

அப்பாவி தங்கமணி: வாங்க, ரொம்ப நன்றி! இன்னும் கூடக் கொஞ்சம் மேட்டர் இருக்கு, ரவுண்டு கட்டி அடிக்கலாம்னு தான் நெனச்சேன்... ஆனா வாங்கடே மைதானம் மாதிரியே ரொம்ப சின்ன இடத்துலதான் விளையாடணும்கிற நெருடல் இருந்ததால, "எய்ட்டர், டென்னர்" லாம் வேணாம்னு, கொஞ்சம் அடக்கி வாசிச்சு, தோனி மாதிரியே (?!) கடைசீல ஒரு சிக்ஸர் அடிச்சி முடிச்சிட்டேங்கோ!

மனம் திறந்து... (மதி) said...

வர வர வலைப்பூவெல்லாம் கூட தேர்தல் பிரசாரக் கூட்டம் மாதிரியே ஆகிப் போச்சுங்க! எக்கச் சக்கமா கூட்டம் வருது....! ஆனா வாயைத் தொறந்து நாலு வார்த்தை...நல்ல வார்த்தை சொல்லாம, நெறையப் பேர் அப்படியே அம்பேலாயிடறாங்களே! என்ன செய்யலாம்? ஏதாவது உருப்படியா யோசனை இருந்தா சொல்லுங்க...!

நிரூபன் said...

வணக்கம் சகோதரம், சிறப்பான ஒரு விடயத்தை, விவாதத்திற்காக கையில் எடுத்துள்ளீர்கள்.

நிரூபன் said...

குறைந்த பட்சம், போட்டியிட்ட இரண்டு அணித்தலைவர்களில் யார் பெரிய, வடிகட்டின முட்டாளோ, அவரது அணியாவது வெற்றி பெற்றிருக்க வேண்டும்? அப்படியா நடந்தது?//

இவ் இடத்தில் தோனியை பெரிய முட்டாள் எனச் சொல்ல வருகிறீர்களா சகோதரம்?
கிறிக்கட் கனவான்களின் ஆட்டம் என்று கூறுவார்கள். ஏனைய விளையாட்டுக்களுடன் ஒப்பிடும் போது கிறிக்கட்டிற்கு தான் அதிக நேரம் எடுக்கும் 8-09 மணித்தியாலங்கள் ஒரு போட்டியைப் பார்த்து ரசிப்பதற்கு மட்டும்.

அப்படியாயின் எல்லா மக்களையும் தன்னகத்தே கட்டிப் போடும், மக்களின் வேலை நேரம், பயனுள்ள நேரம் முதலிய 8 மணி நேரத்தைத் தன்னகத்தே கட்டிப் போடும் கிறிக்கட்டும் ஒரு முட்டாள் விளையாட்டு என்பதில் மாற்றமில்லைச் சகோ. இன்னொரு விடயம்... முட்டாள்கள் விளையாட்டை முட்டாள்களே விளையாடுவார்கள் எனும் கருத்தில் நியாயம் இருக்கிறது.

ஆனால் இவை எல்லாவற்றையும் கடந்து தேசிய ரீதியில் இவ் விளையாட்டை நோக்கும் போது நாட்டிற்கு பெருமை தேடித் தரும் நல்லதொரு விளையாட்டாகாவும் இது இருக்கிறது..

ஆகவே இவ் இடத்தில் ஒட்டு மொத்த மக்களையும் தன்னகத்தே கட்டிப் போடுவதால் கிறிக்கற்றை முட்டாள் விளையாட்டு என்று சொன்னாலும் தவறு, மக்களின் நேரத்தை கட்டுப்படுத்தி இப் போட்டிகளைப் பார்க்க வைப்பதால் கிறிக்கற் முட்டாள் விளையாட்டு எனச் சொல்வதும் சரியே!

இவ் இடத்தில் ஒரு பக்க விவாதத்தை முன்வைக்க முடியாது சகோதரம்.

இரு பக்கமும் சார்ந்து கழுவுற தண்ணீரில் நழுவுற மீன் போலத் தான் பதில் சொல்ல வேண்டும்.

மனம் திறந்து... (மதி) said...

நிரூபன்: வாங்க சகோ! வருகைக்கும், கருத்துக்கும் ரொம்ப நன்றி!
என் பதிலை ஏற்கெனவே பதிந்திருக்கிறேன், இங்கே! ஆனாலும், உங்களுக்காக இன்னொரு முறை இணைத்துத் தருகிறேன், இதோ:

நீங்க சொன்னதும், அவர் (பெர்னார்ட் ஷா) சொல்ல வந்ததும் அதே தாங்க! அது உண்மையும் தான்! அந்த வகையில் பார்த்தால் வாழ்க்கையின் பல விஷயங்களில் வெவ்வேறு விதமாக நம் நேரம் வீணாகிறதென்னவோ உண்மை தான்!

என்னுடைய ஒரே வாதம்: இப்படி ஒரு நாடே ஒன்று கூடிப் பார்த்து உணர்ச்சி வசப்படும், உச்ச நீச்சங்களைத் தொடும் ஒரு நிகழ்வை நேர விரயம், முட்டாள்தனம் என்று அவ்வளவு சுலபமாக ஒதுக்கித் தள்ள முடியுமா என்பதுதான்! வேறொன்றுமில்லை!

இருப்பவர்களையே சண்டை போட்டுச் சாகடிக்கும் இந்தக் காலத்தில் இறந்த மாமேதையுடன் மல்லுக் கட்டி, வீண் வம்பு செய்து, வித்தியாசமாக விளங்க வேண்டும் என்ற விபரீத ஆசை எனக்கில்லை!

ஆனாலும், காலப் போக்கில் கருத்துகள் மறுபரிசீலனைக்கு உட்படுத்தப் படவேண்டியவை என்பது மறுக்க முடியாத உண்மை தானே! அதுதானே இந்தப் பதிவின் சாரமும்!

மனம் திறந்து... (மதி) said...

நிரூபன்:
குறைந்த பட்சம், போட்டியிட்ட இரண்டு அணித்தலைவர்களில் யார் பெரிய, வடிகட்டின முட்டாளோ, அவரது அணியாவது வெற்றி பெற்றிருக்க வேண்டும்? அப்படியா நடந்தது?

//இவ் இடத்தில் தோனியை பெரிய முட்டாள் எனச் சொல்ல வருகிறீர்களா சகோதரம்?//

அடடா, அப்படியே தலைகீழாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்களே!
அப்படியா நடந்தது?
என்று தானே கேட்டிருக்கிறேன். அப்படித்தானே நடந்தது என்றா சொன்னேன்?

கிரிக்கெட்டில், இன்றைய நிலையில், நன்றாக ஆடத் தெரிந்தால் மட்டும் போதும், வெற்றி நிச்சயம் என்று சொல்ல முடியாது என்பதுதானே உண்மை! நிகரில்லாத் தலைமையும், அளப்பதற்கரிய முன்னேற்பாடும், கைமேல் பலன் தரக்கூடிய ஆட்டத் திட்டமும் (Game Plan) , அதிரடி முடிவுகளும், அசாத்திய சாதுர்யமும், அளவிட முடியாத மனோபலமும், பூவும் தலையும் யார் பக்கம் என்பதெல்லாம் தானே, வெற்றிக்கு வழி வகுக்கின்றன! இதிலே முட்டாள்தனத்துக்கு இடம் ஏது? எங்கே? எவ்வளவு? எப்போது? எப்படி?

Dubukku said...

//கொஞ்சம் கூட முட்டாள்தனமே இல்லாத மனித வாழ்க்கை நிஜமானதாகவோ,முழுமை பெற்றதாகவோ அல்லது சுவை நிறைந்ததாகவோ அமைந்ததாக சரித்திரமே இல்லீங்கோ! ஹையா....ரொம்பவே சந்தோஷப் படறீங்க போல... இதுக்குத்தானே இங்கே வாங்க, வாங்கன்னு கூரைமேலேறிக் கூவிக் கூப்பிட்டேன்! //

இது எனக்கான மேட்டரு :)


நல்லா எழுதியிருக்கீங்க. தோனியில் லெவெல் ஹெட்டெட்னஸ் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது !!

ம.தி.சுதா said...

ஃஃஃஃஃகொளுத்தற வெயில்ல
மேட்ச் பாக்கறது
இவ்ளோ கஷ்டமா
இருக்கேங்கிற கோவத்திலதான்
இப்படிப் பொசுக்குன்னு
சொல்லிப்புட்டீங்களோ?! ஃஃஃஃ

சரியாகத் தான் சொல்லியிருக்காரு.. ஹ..ஹ.ஹ..

மனம் திறந்து... (மதி) said...

Dubukku:வாங்க தல ! வணக்கம் நன்றி!

//இது எனக்கான மேட்டரு :)//

உங்களுக்கு ஆட்சேபணை இல்லேன்னா, ஒரு சின்ன திருத்தம்... இது நமக்கான மேட்டரு!!! ஏன்னா, உங்களை விட்டுப் பிரிஞ்சி ரொம்ப நாள்/நேரம் வேணுமானா இருப்பேங்க, ஆனா மதம் மாறுகிற உத்தேசம் துளிக்கூட இல்லையே, அதான் :)))


//தோனியில் லெவெல் ஹெட்டெட்னஸ் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது !!//

நிதானத்துலயும், தன்னடக்கத்துலயும் நீங்க மட்டும் என்ன கொறைஞ்சவரா என்ன! :))) (இப்பிடி பிட்டைப் போட்டா தானே என்னோட தளத்துல உங்க Backlog ஐ சீக்கிரம் கிளியர் பண்ணுவீங்க! ஹா ஹா... ஹா...!)

மனம் திறந்து... (மதி) said...

♔ம.தி.சுதா♔: வாங்க சகோ! நன்றி!

//சரியாகத் தான் சொல்லியிருக்காரு..
ஹ..ஹ.ஹ..//

:)))

Paavai said...

Dhoni's level 5 leadership is awesome and Sachin's capacity to surrender to this despite being a legend is equally terriffic.

About the quote, most of the quotes are said in a particular time and space. They may not hold at times, when things change. I am sure Bernard Shaw would not have thought of TV, color TV, the coverage the sport would get, the money involved in the sport, the ability of a common man to appreciate the nuances of the sport etc. Its also a possibility that he would have increased the number of fools to millions or billions :)

Arul Kumar P அருள் குமார் P said...

ஒரு கேப்டன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு முழு உதாரணம் தோனி

மனம் திறந்து... (மதி) said...

Paavai: வாங்க, நன்றி!

I feel it is level 5 leadership which helps him stay at the top vis-a-vis the team, selectors and the BCCI. But IMHO it is only his level 4 leadership that is predominantly responsible for all the record-breaking results we have seen so far and the rabbits he has produced from his hat!

"இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்." எனும் வள்ளுவர் வாக்கை நன்குணர்ந்து தலைமைப் பொறுப்பை எப்போதோ விட்டுக் கொடுத்தவர் தானே சச்சின். அவரைப் பற்றி ஒரு புத்தகமே எழுதலாமே! பொறுப்பை விட்டுக் கொடுத்தாரே ஒழிய பொறுப்பில்லாமல் நடந்து கொண்டதே இல்லையே அவர்! :)))

Your verdict is not only nice but interesting too (almost like a verdict on the Ayodhya dispute)! You are echoing Joseph Addison when you say: "Much might be said on both sides!"

மனம் திறந்து... (மதி) said...

வெட்டிப்பையன்: வாங்க, நன்றி!
//ஒரு கேப்டன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு முழு உதாரணம் தோனி//

:)))

Sh... said...

Mathi, nalla ezhuthi irukkeenga. Bernard shaw yaara vechu appadi sonnaro theriyadu. But namma aalungalukku rombave cricket paithiyam irukku. eduvume alavukku minjina nanju nnu naama purinjukkanum. Indians ippadi cricket, cinema rendu mela irukkara veriya korachale munneralam nu na nenaikkaren.

US-la NFL romba famous. ingayum makkal bayangara paithiyama alayaranga. Aana thothupoitta bottle veesaradu, theekulikkaradu, super star padam release aarappa paal abishekam pannara muttal thanangal illai. anda oru aspect la na BS sonnada aamodikkaren.

மனம் திறந்து... (மதி) said...

Sh...: Thank you for dropping by. Glad to see you here after a long time!
Appreciation: Recorded, with thanks.
Objection: Sustained, on merits.
:)))

மனம் திறந்து... (மதி) said...

அறிஞர் பெருமக்களுக்கு நான் விடுத்த சவாலான வேண்டுகோளைத் தன்னை அறியாமலே ஏற்றுக்கொண்டு, ஒரு உதவிப் பேராசிரியர் அவர் தரப்பு வாதங்களை அழுத்தம் திருத்தமாக முன்வைத்திருக்கிறார். இதில் ஆச்சரியம் என்னவென்றால், அவருக்குத் தமிழ் தெரியாது! அவர் என்னுடைய வாதங்களைப் படித்திருக்க வாய்ப்பில்லை! ஆனாலும், நன்றாகவே வாதாடி இருக்கிறார், இதோ, ஆங்கிலத்தில்:Cricket unites, but is there no world beyond?

மனம் திறந்து... (மதி) said...

இந்தப் பதிவு எழுதி சரியாக மூன்று வாரம் கூட முடியவில்லை. ஆனால் இதற்குள்ளாகவே, என்னுடைய கருத்தை அமோகமாக ஆதரித்துள்ள உலகப் புகழ் பெற்ற அமெரிக்கப் பத்திரிகையான TIME, மிகவும் உணர்ச்சி வசப்பட்டு, இன்னும் ஒருபடி மேலே போய், "அமெரிக்க அதிபர் ஒபாமாவைக் காட்டிலும் சக்தி வாய்ந்தவர் தோனி!" என்று உலகின் கூரை மேல் ஏறி உரக்கச் சொல்லி இருக்கிறது பாருங்களேன், இதோ: Dhoni more influential than Obama: Time magazine. இதற்கு மேல் என்ன அங்கீகாரம் வேண்டும் இந்தப் பதிவுக்கு...? இல்லை... எனக்கு? இல்லை...இல்லை... இந்தியர்களாகிய நமக்கு?!

மனம் திறந்து... (மதி) said...

இது என்ன ஆச்சரியம்! இந்தப் பதிவிற்கு உள்நாட்டுப் பத்திரிகை வலைச்சரத்திலும் வெளிநாட்டுப் பத்திரிகை TIME மூலமாகவும் ஒரே நாளில் அங்கீகாரம் கிடைத்திருக்கிறதே! :))) நன்றி ஆனந்தி அவர்களே !

Post a Comment

ஆஹா! நீங்க மனம் திறந்து பேசவேண்டிய கட்டம் வந்தாச்சு!