Thursday, February 24, 2011

சமாதி = படிக்கும் அறை... புதிய அகராதி!


முன் குறிப்பு: 
இது முற்றிலும் நகைச்சுவைக்காக எடுத்த முயற்சியே தவிர,  தாய் தமிழைக் கொச்சைப் படுத்துவதற்காக அல்ல, அல்ல, அல்லவே அல்ல!


சற்றே வித்தியாசமாகச் சிந்தித்தால் சில சொற்களுக்குப் புதிய பொருள் கிடைக்கும். இதோ சில உதாரணங்கள்:


கல்லறை = படிக்கும் அறை (கல் = படி!)

நிலவியல் = நிலவைப் பற்றிப் பேசும் துறை (நிலவு + இயல்)

உளவியல் = துப்பறியும் துறை (உளவு + இயல்)

களவியல் = களம் பற்றிய துறை (களம் = இடம்; ஆடுகளம், போர்க்களம்)


வேதியல் = வேதம் பற்றிய துறை (வேத + இயல்)


கற்பியல் = ஆசிரியத் துறை (கற்பி + இயல்)


எண்ணியல் = எண்ணங்களைப் பற்றிய துறை (எண்ணு + இயல்)


இந்தச் சொற்களுக்கு உண்மையான பொருள் (வழக்கில் இருப்பது):

கல்லறை = சமாதி

நிலவியல் = பூமி பற்றிப் பேசும் துறை (நிலம் + இயல்)

உளவியல் = மனம் பற்றிய  துறை (உளம்  + இயல்)

களவியல் = மணக்கும் முன் காதல் பற்றிய துறை (களவு + இயல்)


வேதியல் = இரசாயனத்  துறை (வேதி + இயல்)


கற்பியல் = (பெண்களின்?!) கற்பைப் பற்றிப் பேசும்  துறை (கற்பு + இயல்)

எண்ணியல் = கணிதம் ( எண் + இயல் )

இங்கே என் கைவரிசை முடிகிறது!

உங்கள் கற்பனைக் குதிரையைத் தட்டி எழுப்புங்கள்! அது எங்கெல்லாம் இழுத்துச் செல்லுகிறது பாருங்கள் உங்களை! முடிந்தால் எனக்கும் சொல்லுங்கள்!

- மனம் திறந்து... (மதி)

பின் குறிப்பு: 
 1. கல்லறை என்ற சொல்லை இப்படி வித்தியாசமாகப் பார்த்தவள், என் அண்ணாவின்  பத்து வயதுப் பெயர்த்தி, இனியை.  
 2. அந்த மாறுபட்ட சிந்தனை தான் இந்தப் பதிவுக்கே  உயிரூட்டியது!
 3. இது முற்றிலும் நகைச்சுவைக்காக எடுத்த முயற்சியே தவிர,  தாய் தமிழைக் கொச்சைப் படுத்துவதற்காக அல்ல, அல்ல, அல்லவே அல்ல!


Monday, February 21, 2011

தமிழ்மணம் மணக்கிறதா? நாறுகிறதா? வளருமா? அழியுமா?


இந்தப் பதிவை நான் எழுதக் காரணமாக இருந்த அன்பர் ஜீவன் சிவம் எழுதிய தமிழ் இணையதள நிர்வாகிகளுக்கு ஒரு வேண்டுகோள்..!  எனும் பதிவு அனைத்துப் பதிவர்களும் அவசியம் படிக்க வேண்டிய ஒன்று என்றே நான் நினைக்கிறேன்! (நீங்கள் இன்னும் படிக்கவில்லை என்றால் முதலில் அதைப் படித்து விட்டு என் பதிவைப் படிப்பதே நல்லது! மறக்காம திரும்பி வந்துடுங்க.....அப்பிடியே போய்டாதீங்க!)

அவரது பதிவையும், தொடர்ந்த பின்னூட்டங்களையும் படித்துவிட்டு நான் மிகவும் உணர்ச்சி வசப்பட்டேன். பலரும் அவருடன் ஒத்துப் போனார்கள்...சிலர் மாற்றுக் கருத்தையும் முன் வைத்தார்கள். நானும் ஒரு பின்னூட்டம் போடத்தான் ஆரம்பித்தேன். நான் சொல்ல வந்த செய்திகளைத் தாங்க ஒரு தனிப் பதிவே தேவைப்படும் என்று எழுதத் தொடங்கிய பிறகு தான் உணர்ந்தேன். இப்படிப் பிறந்ததே இப்பதிவு!

ஜீவன் சிவம் அவர்களே, 
உங்கள் ஆதங்கம் எனக்குப் புரிகிறது. நீங்கள் வைக்கும் குற்றச்சாட்டுகள் எல்லாம் மிகவும் வலுவானவை மட்டுமல்ல, உண்மையானவையும் கூட! ஆனாலும், இங்கே மாற்றுக் கருத்தைப் பதிய விழைகிறேன்! பாரபட்சமில்லாமல் பரிசீலிப்பீர்கள் என்று நம்புகிறேன்!

//அண்மைய காலமாக வெளிவரும் பதிவுகளில் சில குறிப்பாக வாசகர் பரிந்துரையில் பதிவர்களின் ஓட்டுகளின் அடிப்படையில் இடம்பெறும் பதிவுகள் ஒன்றுக்கும் உதவாத குப்பைகள் தான்.....பரிந்துரைக்க வேண்டிய பதிவு என்பதற்கு நீங்கள் என்ன அளவுகோல் வைத்திருகிறீர்கள்.//

நம் பாராளுமன்றம் மற்றும் மாநில சட்டப்பேரவைகள் நிலை என்ன? எத்தனை உறுப்பினர்கள் அப்பழுக்கற்றவர்கள்? கொலைக் குற்றம் சாட்டப்பட்டவர்கள்?  ஊழல் குற்றம் சாட்டப்பட்டவர்கள்? நாட்டை ஆள்பவர்களும், சட்டம் இயற்றுபவர்களும் எந்த அளவுகோல் வைத்துப் பதவி ஏறுகிறார்கள்? படிப்பு, சுயமாகச் சிந்திக்கும் ஆற்றல், பேராண்மை, நேர்மை, கண்ணியம், சுத்தமாகவும், தெளிவாகவும் பேசும் ஆற்றல், தேசத்துக்கு ஆற்றிய தொண்டு ஆகிய பரிமாணங்களை வைத்தா அவர்களைத் தேர்ந்தெடுக்கிறோம்? அவர்களை விடவும் நல்லவர்கள், தூய்மையானவர்கள், அனுபவசாலிகள், அறிவாளிகள் நாட்டில் இல்லையா? இவர்கள் ஏன் பதவிக்கு வருவதில்லை?

//அரசியல் தலைவர்களை குறைந்தபட்சம் மரியாதை கூட இல்லாமல் விமர்சனம் செய்வது //

இது அநாகரிகம் தான். ஒப்புக் கொள்கிறேன்! அவசியமாய்த்  தவிர்க்க வேண்டியதே! [ஆனால், அதைப் பற்றி அவர்களே கவலைப் படாதபோது நீங்களும் நானும் ஏன் கவலைப் பட வேண்டும்? இதற்கெல்லாம் கவலைப்படுபவன் அரசியல்வாதியாக முடியுமா? ஆவானா?:)))))))))] இவ்வளவு  ஏன்?  மகாத்மா காந்தியைக் கொன்றது யார்? சர்வ வல்லமை படைத்த ஆங்கில அரசாங்கமே செய்யத் துணியாத, நினைக்காத, முடியாத இந்தக் கொடுஞ்செயலைச் செய்து முடித்தவன்  இந்தியன் தானே?

//சம்பந்தமே இல்லாத தலைப்புகளை கொடுத்து ஒன்றுக்கும் உதவாத பதிவுகளை தருவது, பிரபல பதிவராவது எப்படி என்று குறுக்கு வழிகளை புதிய பதிவர்களுக்கும் அறிமுகபடுத்தி அவர்களின் எழுத்தார்வத்தை முளையிலேய அளித்து அவர்களையும் உப்புமா பதிவர்களக்கிவிடுவது போன்றவை தொடருமானால் விரைவில் தமிழ்மணம், Indi, தமிழ் பெஸ்ட் போன்ற இணையதளங்கள் வெறும் குப்பை தொட்டியாகதான் காட்சி தரும். //

நிஜ வாழ்க்கையில் எவ்வளவு நேர்மை, நாணயம் இருக்கிறது தற்போது? சம்பந்தமே இல்லாத தலைப்புகளை அட்டையில் கொடுத்து ஒன்றுக்கும் உதவாத தகவல்களை உள்ளே வைத்து எத்தனை தின, மாலை, வார, மாத, சிறப்பு இதழ்கள் பிழைப்பு நடத்திக் கொண்டு இருக்கின்றன? பணம் பறித்துக் கொண்டு இருக்கின்றன? உங்கள் தெரு, ஊர், நகரம், மாநிலம், நாடு எவ்வளவு சுத்தமாக இருக்கிறது? குப்பை நிரம்பி  வழியவில்லையா? கைக்குட்டை இல்லாமல் வெளியில் நடமாட முடிகிறதா கொஞ்ச தூரம்?

//வெறும் ஓட்டு போடுவதற்காக மட்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள ப்ளாக்குகள் எத்தனை என்று கணகெடுத்து பாருங்கள். உண்மை புரியும்.//

நம் நிஜ உலகத் தேர்தலில் கள்ள ஓட்டை முழுவதுமாக ஒழிக்க முடிந்ததா நம்மால்? இன்றும் எத்தனை பேர் ஓட்டுப் போடுவதற்காகவே வளர்க்கப் படுகிறார்கள்? உயிர் வாழ்கிறார்கள்? வறுமையில் அடைக்கப் பட்டிருக்கிறார்கள்? தெரியாதா உங்களுக்கு?

//மிகபெரும் வரவேற்ப்பை பெரும் என்று மாங்கு மாங்கென்று எழுதிய பதிவிற்கு ஒரு பின்னூட்டம் கூட வருவதில்லை. நடிகைகளின் பெயரில் வரும் பதிவுகள் ஓட்டுகளை அள்ளுகின்றன... இணையதளத்தை உபயோகபடுத்துபவர்களால் ஒரு நாட்டின் அரசாங்கமே மாறிகொண்டிருக்கும் நிலையில் வெறும் உப்புமா பதிவுகளுக்கு ஆதரவு கொடுத்து ஒரு சில நல்ல பதிவுகளை புறக்கணிக்காதிர்கள்.// 

புகழின் உச்சியில் இருக்கும் இயக்குனர்களையும், பாடலசிரியர்களையும், இசை அமைப்பாளர்களையும்...ஏன் எந்தப் படைப்பாளியை வேண்டுமானாலும் கேளுங்கள்: நீங்கள் மெனக்கெட்டு உழைத்த போதெல்லாம் வெற்றி கண்டீர்களா? உங்கள் வெற்றிப் படைப்புகள் எல்லாம் அவ்வாறு உருவானவைதானா? உங்கள் சிறந்த படைப்புகளைப் படைக்கும் போதே "இது மாபெரும் வெற்றி பெரும்" என்று நீங்கள் நிச்சயமாகத் தீர்மானிப்பீர்கள்தானே? அவர்கள் பதிலில் நிதர்சனமான உண்மை வெளி வரும்!

//வாசகர் பரிந்துரை என்பதை மாற்றி இனிமேல் நிர்வாகிகளின் பரிந்துரை என்று இருக்கவேண்டும்.//

"தமிழ் மணத்தின்" ஆதரவு இருந்தால் படிப்பவர் அனைவரையும் நம் "தரமான" பதிவால் விலைக்கு வாங்கிவிட முடியுமா? 

 //உங்களால் தேர்ந்தெடுக்கப்படும் பதிவுகள் தரமானதாக இருக்கும் என்று நம்புகிறோம்// 

உங்கள் தீர்வு முழுமையானதாகவும், இறுதியானதாகவும் இருந்தால்,
என்று நம்புகிறோம்  என்ற இரண்டு வார்த்தைகளை சேர்க்காமலே விட்டிருக்கலாமே? ஏன் அப்படிச் செய்யவில்லை?

சரி இவ்வளவு தெளிவாகப் பேசுகிறீர்களே? உங்கள் தீர்வு என்ன என்றா கேட்கிறீர்கள்? அதைத்தான் சொல்ல முற்பட்டேன் இப்போது, அதற்குள் நீங்களே கேட்டு விட்டீர்கள்!

தமிழ்மணம், தமிழ் இணையதளம் எல்லாமே வலையுலகம், பதிவுலகம் தானே! நம் நிஜ உலக அனுபவத்தை வைத்து உருவாக்கப் பட்டவை தானே! மனிதர்களால் உருவாக்கப் பட்டு, மனிதர்களால் பயன்படுத்தப் படுபவை தானே! மாநில, மத்திய அரசுகளால் மக்கள்  கட்டுப்படுத்தப்பட்டு திட்டமிட்டபடி வளர்ச்சியும், வளமும் பெருகி இருந்தால் தீவிரவாதம், வறுமை, கொலை, கொள்ளை, சுரண்டல், ஊழல், பொருளாதார மேடு பள்ளங்கள் எல்லாம் இருந்திருக்காதே? தமிழ்மணம் (இணையதள) நிர்வாகிகள் மட்டும் என்ன சர்வ வல்லமை பொருந்தியவர்களா? அனைத்துப் பதிவர்களையும், படிப்பவர்களையும் கட்டி  மேய்த்து ஒழுங்கு படுத்த? பாவம், இவர்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? அது எவ்வளவு தூரத்துக்குச் செல்லும்?

மனிதனால் உருவாக்கப்பட்டவை அனைத்தும்  ஒரு நிலையில் மனிதக் கற்பனைக்குள்ளும், கட்டுப்பாட்டுக்குள்ளும் அடங்காமல் போனது அல்லவா சரித்திரமும், விஞ்ஞானமும் நமக்குச் சொல்லிக் கொடுப்பது?

ஆக, நாம் செய்ய வேண்டியதெல்லாம் இது தான்! நிஜ உலகைப் போலவே, பதிவுலகிலும் நல்ல நண்பர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். நம்மையும், நம் சுற்றுச் சூழலையும் சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளப் பாடுபட வேண்டும்! நம்முடைய "வட்டத்தை" மிகவும் கவனமாக வளர்க்க வேண்டும், அதுவும் தேவைப்பட்டால் மட்டுமே! சேரிடம் அறிந்து சேர் என்று தெரியாமலா சொல்லிவிட்டுப் போனார்கள்?

நம் நிஜ உலகம் எவ்வளவு நல்லதோ, அவ்வளவு நல்லதே தமிழ் மணமும் மற்ற இணையங்களும். நம் நிஜ உலகம் எவ்வளவு மோசமானதோ அதே அளவு மோசமானதே பதிவுலகும்! இரண்டும் இப்படித்தான் இயங்கும், வளரும்... அவசியமானால் அழியும்!

நீங்கள் உங்களுக்குப் பிடித்ததை செய்யுங்கள்! நல்லவராக இருங்கள்! மற்றவர்களிடமிருந்து வரும் எதிர் பார்த்த அல்லது எதிர் பாராத தாக்குதல்களில் இருந்து உங்களைக் காத்துக் கொள்வது எப்படி என்று தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள், அந்த உத்தியை அடிக்கடி தூசி தட்டித் தயார் நிலையிலும் வைத்திருங்கள்! 

ஒரு மாமேதை  சொன்ன அறிவுரையுடன் இந்த நீண்ட பதிவினை நிறைவு செய்கிறேன்: உலகம் நம்மைப் புரிந்து கொள்ளவில்லையே என்று வருந்துவதில் சற்றும் பயனில்லை; உலகை நாம் புரிந்து கொள்ளவில்லையே என்று வருந்துவதிலும், ஆராய்வதிலும் தான் நம் வாழ்க்கையின் எல்லாக் கேள்விகளுக்கும் விடைகள் கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது!

- மனம் திறந்து...(மதி)

பின் குறிப்புகள் : 
 1. தேவைக்கு அதிகமாப் பேசிட்டா மாதிரி தான் தெரியுது!
 2. இனி நான் சொல்லி நீங்க எதையும் கேக்கப் போறது இல்லை!
 3. சரி....ஸ்டார்ட் மீசிக்....பட்டயக் கெளப்புங்க! கும்முங்க! கும்முங்க! 
 4. இந்தப் பதிவினால் எனக்குப் பெருமை சேர்ந்தால் அது முழுவதுமாக உங்களையே சாரும், ஜீவன் சிவம் அவர்களே!
 5. கிடைக்கும் பழி, பாவம் அனைத்தையும் நானே மூட்டை கட்டி என் வீட்டுக்குக் கொண்டு செல்கிறேன், நீங்கள் அஞ்ச வேண்டாம்! 

Wednesday, February 16, 2011

ரமேஷ் பிரபாவை சந்தித்த வேளையில்...ஒரு அலசல்!

ரமேஷ் பிரபா கலைஞர் தொலைக்காட்சியின் முதுகெலும்பில் முக்கிய பகுதி என்று சொல்வது, சன் தொலைக்காட்சியை வளர்த்தவர்,  அவர்களால் வளர்க்கப் பட்டவர் என்பது எல்லாம் நான் சொல்லித் தெரிந்து கொள்ளும் நிலையில் நீங்கள் இல்லை! ஆனால், அவர் கலைஞர் தொலைக்காட்சியில் காலையில் வழங்கி வரும் சந்தித்த வேளையில் எனும் நேர் காணல் நிகழ்ச்சியைப் பற்றி சில விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நான் ஆசைப்படுவதால், கேட்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் நீங்கள் இருக்கிறீர்கள்! இன்னைக்குக் காலைல முழிச்ச முகம் சரியில்லை போலிருக்கேன்னு தோணுதா? இருக்கலாம்...ஆனாலும், இவ்வளவு  தூரம் வந்தாச்சு...மேல படிக்காமலா போயிடப் போறீங்க!

ரமேஷ் பிரபா இந்த நிகழ்ச்சியைப் படைத்து அளிக்கும் விதம் பாராட்டும்படி இருக்கிறது! காரணங்கள் இதோ:
 • பலதரப்பட்ட, வெளிச்சத்துக்குக் கொண்டு வர வேண்டிய மனிதர்களை நமக்கு அறிமுகப் படுத்தி வைப்பது.
 • வெகு இயல்பான நேர்காணல் முறை, பின்புலம்...பல நேரங்களில் நேர் காணல் என்ற நினைவே எழாமல் நாம் மூன்று பேரும் உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துவது. 
 • வெகுவாய்ப் பாராட்ட வேண்டிய அளவுக்கு மெனக்கெட்டு ஒவ்வொரு சந்திப்புக்கும் தன்னைத் தயார் படுத்திக் கொள்வது (இதில் அவருடைய குழுவின் பங்களிப்பு கொஞ்ச நஞ்சமல்ல!)
 • தயார் செய்து வைத்த கேள்விகளையே கேட்கிறார் என்ற உணர்வை உருவாக்கி உறுத்தாமல் இருப்பது. நேர்காணலின் போக்குக்கு ஏற்ப இயல்பான, மிகவும் தேவையான, நாமே கேட்க நினைத்த கேள்விகளைச் சமயோசிதமாகக் கேட்பது.
 • விருந்தினரிடமிருந்து வெளிக்கொண்டு வர வேண்டிய தகவல்கள் மீது அக்கறை காட்டி, கவனம் தவறாது செய்து முடிப்பது. விருந்தினர் இந்த சங்கடத்தை உணராமல் இருக்கும்படி அவரை இயல்பாக வழி நடத்திச் செல்வது.
 • எல்லாப் பிரமுகர்களையும் பாமரனிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று மூர்க்கத்தனமாக முயற்சி செய்யாதது. அதே நேரத்தில் அடித்தட்டு மக்களுக்கும் சேர வேண்டிய செய்தி இருப்பின், அதைத் தவறாமல் வரவழைப்பது.
 • நேர் காணலை ஒரு ஆயுதமாக்கி, கட்சித் தொலைக்காட்சியை கலகத் தொலைக்காட்சியாக மாற்றி விடாதது.
 • கழகத் தொலைக்காட்சி என்ற காரணத்துக்காக கட்சி மற்றும் கட்சியைச் சார்ந்த நபர்களையே விருந்தினர்களாக முன் நிறுத்தாதது. (உணர்ந்து கொள்ள முடியாத ஒரு  இட ஒதுக்கீடு இருக்கத் தான் செய்கிறது)!
 • சென்னையில் தற்போது மழையா வெயிலா என்ற வானிலைத் தகவலையும் நமக்கு இலவசமாகத் தருவது.
சில குறைகள்:
 • வேலைக்குப் போக வேண்டுமே என்ற எண்ணம் கூட இல்லாமல், முகசவரம் செய்து கொண்டே, முழுவதுமாய்ப் பார்க்க வைத்து விட்டு, தினமும் தாமதமாகச் சென்று,  சவரம் செய்த முகத்தையேகூட மேலதிகாரியிடம் காட்ட முடியாத தர்ம சங்கடத்துக்கு நம்மை உள்ளாக்கி, அவர் கொதிப்படைந்து நம் 'அப்ரைசலில்' கைவைக்கும் அளவிற்கு நம் தனிமனித வாழ்வாதாரத்தை அசைத்துப் பார்ப்பது.
 • காலை நிகழ்ச்சி முடிவில் ஒரு பெண்மணி " .....இன்றைய நிகழ்ச்சி பல புதிய (அரிய) தகவல்கலைத் தெரிந்து கொல்ல வாய்ப்பாக இருந்திருக்கும்....." என்று சொல்லிக் கொல்லுவார் பாருங்கள் நம்மை, அதுவும்...'ஒன்றே சொல் நன்றே சொல்' நிகழ்ச்சி முடிந்த உடனே ....ஆஹா! ...அதைக் கண்டு கொள்ளாமலே விட்டு விட்டது.
 • யார் யாரோ வராங்கோ! நீங்களும் இருக்கீங்களே...ஹூம்...என்ன பிரயோஜனம்... என்று என் வீட்டுப் பெண்மணி என்னை உசுப்பேத்த, காலையிலேயே எங்கள் குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்துவது!  
 • நாளைக்கு வரும் விருந்தினர் யார் என்று முன் கூட்டியே இவர் சொல்லித் தொலைக்க, அவர் நமக்குப் பிடித்தவராக இருக்க, ஆனால், தவிர்க்க முடியாத காரணத்தால் மறுநாள் பார்க்க முடியாமல் போக, நாம் வருந்த வேண்டி இருப்பது!
இதெல்லாம் சரி, நீங்கள் சொல்ல வேண்டிய விஷயத்தைச் சொல்லாமலே போயிட்டீங்களேன்னு யாரோ கேக்கற மாதிரி இருக்கே? ஹலோ...! பதிவு முடிஞ்சு போச்சுங்கோ.....!

சரி! ஒரு வழியா நான் முடிச்சிட்டேன் ...நீங்க ஆரம்பிங்க... கும்மியை :))))

- மனம் திறந்து...(மதி)