Sunday, January 27, 2013

நம்மை உலுக்கி எழுப்பும் உலகநாயகனின் விஸ்வரூபம்!


நூறாண்டு கண்ட வெள்ளித்திரையில் விஸ்வரூபம் எடுத்து தமிழ்த் திரையுலகம் தொழில்நுட்பத்தில் சதம் அடித்து விட்டது என்றே சொல்லலாம்! நிலவில் காலடி வைத்த Neil Armstrong பாணியில் சொல்வதானால்: This is one small step for Kamal, one giant leap for Tamil Cinema.


ஒரு ஆங்கிலப் படம் போன்ற ஆரவாரமில்லாத ஆரம்பக் காட்சிகள். கதக் நாட்டியக் காட்சிகள் கமல் எனும் மகா கலைஞனின் மேல் நமக்குள்ள காதலுக்கு வலுவூட்டி நம்மைக் காற்றில் மிதக்க வைக்கின்றன, பரவசத்தில். குரல், பேச்சு, நடை, உடை, பாவனை, நளினம் எல்லாம் ஒரு சேர நம்மை அசத்துகிறார் கமல். இங்கே ஆண்ட்ரியாவும்  நம்மைக் கவர்கிறார்!


அடுத்த அரை மணிக்குள்ளாகவே, கமலின் இரண்டாவது முகம் வெளிப்படும்  CLIMAX க்கு நிகரான காட்சியில் விமானம்...மன்னிக்கவும், படம் take-off ஆகிறது. அரங்கமே அதிர்கிறது இந்தக் காட்சியில்... பல ஆண்டுகளுக்குப் பிறகு நான் என்னை மறந்து கை தட்டினேன், திரை அரங்கில்!

ராகுல் போஸ் அதிரடியாக அறிமுகம் ஆகிறார். படம் முழுவதும் அசத்துகிறார் தம் அமைதியான வில்லன் தாண்டவத்தில். இந்தத் தாலிபான் தளபதி, அமெரிக்க உளவுத்துறை இணையத்தையும், அதிரகசிய ஆவணங்களையும் அனாயாசமாகப் பயன்படுத்துகிறார், தன் கணினி மூலமாகவே!

பின்பு, கமல் தன் மூன்றாவது முகத்தைக் காட்டிப் படிகளில் இறங்கி வரும் போது மயங்கி விழுவது கதாநாயகி பூஜா மட்டுமில்லை, ஒட்டு மொத்த அரங்கமே தான்... ஆண்கள் உள்பட.

ஆப்கானிஸ்தான் காட்சிகள் அசத்துகின்றன. அல் கொய்தாவை ஊடுருவி, அவர்கள்  பயிற்சியில் பங்கு பெற்று, தாலிபன் தரப்பிலான வாதங்களையும், அவர்களின் அப்பட்டமான, அளவு கடந்த வன்முறை கலந்த ஏற்பாடுகளையும், தீர்ப்பாடுகளையும்  அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பு கலாச்சாரத்தையும் தத்ரூபமாக  நம்   கண்முன்னே படைக்கிறார் இயக்குனர். ஒளிப்பதிவாளரும், கலை இயக்குனரும் மிகவும் மெனக்கெட்டு இயக்குனரின் கனவை நனவாக்கியுள்ளனர் இந்தக் காட்சிகளில்.

நமக்கெல்லாம் புறா என்றாலே போர்நிறுத்தம் தானே நினைவுக்கு வரும்! தாலிபான்களுக்கும் அப்படித்தான், ஆனால் வழக்கம் போல் தலைகீழாக!

படம் முடியும் போது நான் நிறைவேற்றிய தீர்மானம்: வீட்டில் பரண்மேல் இருக்கும்  Periodic Table ஐ எடுத்து, தூசு தட்டிப் படிக்க வேண்டும்..  அடுத்து வரப்போகும் கமல் படங்களை எளிதில் புரிந்து கொள்ளவும், நன்கு ரசிக்கவும் பெரிதும் உதவியாக இருக்கும். ஏனென்றால், தசாவதாரத்தில் வில்லனின் கொடூர வைரஸ் வீச்சிலிருந்து உலகமே தப்ப உதவிய ஆயுதம் NaCl (Sodium Chloride), விஸ்வரூபத்தில்  வில்லனால் கையாளப்படுவது Cs (Caesium).


கமலின் வழக்கமான  குறும்புகளும், "அக்மார்க்"  நகைச்சுவையும் படத்தின் முதல் பாதியில் ஆங்காங்கே மிளிர்கின்றன.


பூஜா குமார் (கமலின் மனைவியாக) ரொம்பவே தெளிவான, தன்னலம் மிக்க, கணவனை ஒரு  (அடையாளச்) "சாவி"யாகவும், (அமெரிக்க) "விசா"வாகவும் மட்டுமே பார்க்கும், பாரதி கண்ட புதுமைப் பெண்ணின் விபரீத விஸ்வரூபமாக வலம் வருகிறார். ஒரு "நீயா நானா" நிகழ்ச்சியில் மாதம் ரூ.50000/- pocket money கேட்ட கல்லூரி மாணவியை நமக்கு நினைவூட்டுகிறார்.

என்னைக் கேட்டால், விஸ்வரூபம் சமீபத்தில் வெளியான James Bond படத்தைத் தூக்கிச் சாப்பிட்டு விட்டது  என்றே சொல்லுவேன். அதற்கு ஆதாரமாக,  பட முடிவில், கமல்  James Bond போலவே  பூஜா குமாருடன் படுக்கையில் காட்சி தருகிறார்.

முத்தாய்ப்பாக: கமல் ரசிகர்களுக்குப்  பொங்கலும் தீபாவளியும் ஒன்றாய்ச் சேர்ந்த மாபெரும் அதிசயப் பண்டிகை விஸ்வரூபம்!

- மனம் திறந்து... (மதி).


பின் குறிப்பு:

1. இப்பதிவின் தார்மீகத் தலைப்பு, தமிழகத்தில் படம் வெளியிடப்படும் முன் (சனவரி 27 அன்று) வைத்தது -  "விஸ்வரூபம்: வெந்த புண்ணில் வேல்...?" : இந்த அரிய படத்தைப் பார்க்க முடியாமல் கோடானு கோடி திரைப்பட ரசிகர்கள்  தமிழ்நாட்டில்  தவிக்கும்  போது, நான் மட்டும் முதல் நாள் முதல் காட்சியே  இங்கே ஹைதராபாத்தில் பார்த்ததோடு மட்டுமின்றி அதைப் பற்றி இவ்வளவு சிலாகித்து அசை போடுவது, எழுதுவது.

2. இப்பதிவு, விஸ்வரூபம் படத்தின் ஒரு முழுமையான அல்லது திறமையான  விமர்சனம் அல்ல. மிகச் சிறந்த, வழக்கம் போல் சர்சைக்குள்ளான,  ஒரு கமல் திரைப்படத்தைப் பார்த்த சாதாரண ரசிகனின்  மன  உணர்வுகளின் பகிர்வு. அவ்வளவே!