Monday, March 14, 2011

PASSWORD புதையல்! வாங்க... வாங்க... அள்ளிட்டுப் போங்க!


வாங்க, வணக்கம்! என்னது? பிரபல "கத்தரிக்காய்" பதிவரோட  கடவுச் சொல் (PASSWORD) வேணுமா? அட இருங்க,  இப்படி ஒரேயடியா அவசரப் பட்டா எப்படி? மொதல்ல இதக் கேளுங்க! மத்தவங்க கடவுச் சொல்லைத் தெரிஞ்சிக்கறதுக்கு முன்னாலே, உங்க கடவுச் சொல் எப்படிப் பட்டது, உங்களையும், உங்க ரகசியங்களையும், சொத்தையும், சுதந்திரத்தையும்  அது காப்பாற்றுமா என்று  பார்க்க வேண்டாமா? கணினி மயமான இன்றைய உலகத்திலே, கடவுச் சொல் பலமானதாக இல்லேன்னா, அந்தக் கடவுளே வந்தாக்கூட உங்களைக் காப்பாத்த முடியாதுங்களே!  நிறையப் பேர்  இதுக்காக மெனக்கெட்டு, முறையான கடவுச் சொல் உருவாக்கப் பெரிய புதையலே  சேர்த்து வச்சிருக்காங்க! அதைப் பத்தித்தான் பேசப் போறோம் இப்போ! அப்புறமா உங்க மேட்டருக்கு வருவோம்! சரியா?

வந்தவர்: "ஹூம்! சரி சார்! சொல்லித் தொலைங்க! (மனதுக்குள்: நான்  இன்னைக்கி முழிச்ச முகம்  சுத்தமா சரியில்ல...அதுமட்டும் நல்லாத் தெரியுது!)"

(எச்சரிக்கை: கொஞ்சம் நீளமான பதிவு இது.  நிதானமாகப் படிக்க வேண்டியது! அவசரமான வேலை  இருந்தா, போயிட்டு  அப்புறமா  வாங்க! ஆனா, மறக்காம  வாங்க !)

சரி,  "கடவுச் சொல்" நல்லாவே தெரியும் உங்களுக்கு. ஆனா, உங்கள் கடவுச் சொல் உங்களுக்கு மட்டுமே தெரிந்ததாகவும், மற்றவர்களால் வெகு எளிதில் கண்டு பிடிக்க முடியாத அளவுக்குக் கடினமானதாகவும், மறைபொருள் உள்ளதாகவும் இருக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியுமா?! தெரிந்திருந்தாலும் கூட, அப்படிப் பட்ட கடவுச் சொற்களைத் தான் நீங்கள் பயன் படுத்துகிறீர்களா? இந்தக் கேள்விகளுக்குப்  பெரும்பாலோர் ( >80%) அளிக்கும் பதில் கொஞ்சம் கூடத் திருப்திகரமானதாக இருக்காது என்பதே உண்மை! abc123, abc123$, gopal123, sheela234, ram@home,  password, nopassword, iloveyou, ihatehim, surya143, 243katrina போன்றவை தான் பரவலாக வழக்கிலிருக்கும் கடவுச் சொற்கள் என்று ஆராய்ச்சியாளர்கள்   கூரை மேல் ஏறிக் கூவிக்கொண்டு இருக்கிறார்கள், உலகெங்கும்! இப்படிப்பட்ட கடவுச் சொற்கள் எளிதில் தகர்க்கப்பட்டு, உங்கள் வங்கிக் கணக்குகள்,  மின்னஞ்சல் பெட்டிகள், பதிவுலகப் பட்டறை  போன்றவை,  சூறையாடப்படும்  சாத்தியக்கூறுகள்  மிக, மிக, மிக  அதிகம் என்பதே நிதர்சனமான, ஆனால் வயிற்றில் புளியைக் கரைக்கும் உண்மை! இந்தச் சமுதாய சேவையைச் செய்பவர்கள், பெரும்பாலும், வேறு யாருமல்ல! உங்களை நன்றாக  அறிந்தவர்கள்  அல்லது உங்கள் எதிரிகள் தான் என்பது மேலும் அதிர்ச்சி தரும் தகவல் மட்டுமல்ல, சுடும் நிஜம் கூட!

அச்சச்சோ! என்னங்க இது!  உங்களுக்கு ஏன் இப்படி ஒரேயடியா வேர்த்துக் கொட்டுது? உடம்பெல்லாம் நடுங்குது!? அடடே, இந்தாங்க கொஞ்சம் 'ஐஸ்வாட்டர்' குடிங்க, அதுலயே முகத்தையும் கொஞ்சம் கழுவிக்கோங்க... அதோ இருக்கு பாருங்க 'வாஷ்பேசின்', (நான் கைத்தாங்கலா பிடிச்சிக்கிட்டு வர்றேன்) வாங்க... வாங்க! இந்தாங்க  டவல்...தொடைச்சுக்குங்க! பக்கத்து ரூம்ல "ஏசி" போட்டிருக்கு, அங்கே போய் உக்காந்து ஆசுவாசம் பண்ணிக்கிட்டு அப்புறமா பேசலாம்! வாங்க....மெதுவா... மெதுவா ... பாத்து வாங்க! 

(பத்து நிமிடம் கழித்து...) இப்பப் பரவால்லியா? மேல பேசலாமா...? சரி! அப்படியானால், முறையான, வலுவான மற்றும் பாதுகாப்பான கடவுச் சொல் எப்படி இருக்க வேண்டும்? இதோ, சம்பந்தப்பட்ட  வல்லுனர்கள்  சொன்ன சில விதி முறைகள்:
  1. போதுமான நீளம் வேண்டும் :  குறைந்தது 8 குறியீடுகள் இருக்க வேண்டும்.
  2. பெயர்/கள் (தன், உற்றார், உறவினர், நண்பர்கள், எதிரிகள்  பெயர்/கள் ) அதில் இருக்கக் கூடாது.
  3. அர்த்தமுள்ள முழு வார்த்தைகள் அடங்கியிருக்கக் கூடாது.
  4. எண்களும் எழுத்துக்களும் கலந்திருக்க வேண்டும். 
  5. பெரிய மற்றும் சிறிய எழுத்துக்கள் கலந்து இருக்க வேண்டும் (Upper and Lower Case, in English: A, a, B, b போல)
  6. சிறப்புக்  குறியீடுகள் (Special characters: ^ < @  #  :  *  $ ! ; போன்றவை)  இடம் பெற்றிருக்க வேண்டும்.
வந்தவர்(மீண்டும் கொதிப்படைந்து...): "யோவ், உமக்கென்ன  பைத்தியமா பிடிச்சிருக்கு? இப்பேர்ப்பட்ட கடவுச் சொல்லை கண்டு பிடிப்பது அவ்வளவு சுலபமா என்ன? அப்படியே, ராப்பகலா தூங்காம,  மண்டையப் போட்டு உருட்டி,  கசக்கிப் பிழிந்து  கண்டு பிடிச்சாலும்,  அதை ஞாபகம் வைச்சுக்க  ஒரு முழுநேர உதவியாளரை   வேலைக்கு  வைக்கணுமே, அவருக்குச் சம்பளம் நீங்கதானே  குடுக்கப் போறீங்க?" என்று (உடம்பில் தெம்பில்லாவிட்டாலும் கூட) குரலில் அனல்பறக்கக்  கேட்கிறார்!

அதான் இல்லே! நீங்க நினைக்கிற மாதிரி இது ஒண்ணும் பெரிய கம்ப சூத்திரம் இல்லை என்று அடித்துச் சொல்லத்தான் வந்தேன்! அதுக்குள்ள அவசரப் பட்டுட்டீங்களே! அட, நீங்க  வேற, பாவம் உங்களை இல்லீங்க, மேசையைத்தான் அடித்துச் சொல்றேன்! ஆனா, நீங்க மட்டும் பதட்டப்படாம, கொஞ்சம்... பொறுமையாக் கேக்கணும் !  புரிஞ்சுதா ...?

சரி, இப்போ  ரகசியப் புதையலைக் (அதாங்க, கடவுச் சொல் புதைந்து கிடக்கும் சொற்குவியல்!) கண்டுபிடிக்கறது எப்படி, பிறகு அதிலேர்ந்து நல்ல கடவுச் சொல்லைத் தோண்டி எடுக்கிறது எப்படீன்னும் பார்ப்போம்! நாம் தேடும் இந்தப் புதையல் ஏறக்குறைய கடவுள் மாதிரி தாங்க! தூணிலும் இருக்கும்,  துரும்பிலும் இருக்கும் :)))). அதனாலே, கண்டு பிடிக்கறது ரொம்ப சுலபங்க! நமக்குப் பிடித்த, எளிதில்  மறக்க  முடியாத, கவர்ச்சிகரமான சொற்றொடர்கள், பழமொழிகள், பொன்மொழிகள்,   பாடல் வரிகள், நீண்ட தலைப்புகள்  போன்றவை தான்  இந்தப் புதையல்கள் !
  1.  தங்கமாளிகையில்  பார்த்த  வெங்காயம் இப்போ நடைபாதையிலேயே  கிடைக்குதே ! - இது ஒரு ரகசியப் புதையல் (நல்ல உதாரணம்... இல்லே! ஆமாம்...! நானேதான் சொல்லிக்கணும்...! வேற வழி?! நீங்கதான்  shock  அடிச்சா  மாதிரி பாக்கறீங்களே!  சரி, சரி... போனாப் போறது, விட்டுத் தள்ளுங்க! இப்படி வித்தியாசமா சிந்திக்கிறது நல்லதுங்க! ஆனா நல்லா கவனிங்க... இப்பத்தான் கதையே சூடுபிடிக்கப் போவுது! ). 
  2. இந்தப் புதையலில் உள்ள  வார்த்தைகளின் முதல் எழுத்துக்களை மட்டும் எடுத்துக் கொள்வோம்: Tpvink (எல்லா  நுழைவாயில்களிலும் ஆங்கிலக் கடவுச் சொற்களை உபயோகிப்பது எளிது என்பதால் வார்த்தைகளின் ஒலிவழி மொழி மாற்றம் செய்து கொள்வது அவசியமாகிறது)!
  3. அடுத்ததாக,  எண்ணைச் சேர்க்க வேண்டும். வெங்காயம் 65 ரூபாய் வரை விற்றதால் அதையே கூட எடுத்துக் கொள்ளலாமே! ஆக: 6Tpvink5
  4. இந்தப் புதையல் ஆச்சரியக்  குறியில்  முடிவதால் அதையே  நமக்குத்  தேவையான  சிறப்புக்  குறியீடாகச்  சேர்த்துக்  கொள்ளலாமே! அதை  எங்கே  சேர்க்க  வேண்டும்  என்பதும்  நாமே  தீர்மானிக்க  வேண்டிய விஷயம் தானே! அவ்வளவுதான்!  நமக்குத் தேவையான வலுவான கடவுச் சொல் கிடைத்து விட்டது பாருங்கள்: 6Tpvi!nk5 (ink என்ற முழு வார்த்தையை சிதைக்க அதன் இடையில் ! சேர்த்து விட்டேன், சரிதானே!)
  5. நாம் கண்டுபிடித்த  கடவுச் சொல் - 6Tpvi!nk5 - சட்டதிட்டத்துக்கு உட்பட்டதுதானா என்று நீங்களே பாருங்களேன்! (சட்டதிட்டமா, அப்படீன்னா...?! போச்சுடா...துக்குள்ள மறந்துட்டீங்களா... மொதல்ல சொன்ன ஆறு விதிகள் தாங்க அது! ஹூம்! ஆண்டவா...! இப்படியே போச்சுன்னா,   கிழிஞ்சுடும் லம்பாடி லுங்கி! ) 
ஆக, எளிதில் நினைவில் வைத்துக் கொண்டு பயன்படுத்தக் கூடிய, முறையான, வலுவான, பாதுகாப்பான   கடவுச் சொல் தயாரிக்க, நீங்கள் செய்ய வேண்டியது (தெரிந்து கொண்டது) இவ்வளவு  தான்: 

  1. முதல் வேலை: உங்களுக்கு எளிதில் நினைவில் நிற்கக் கூடிய, வித்தியாசமான, ரகசியப் புதையலைக் (கடவுச் சொல் புதைந்து கிடக்கும் சொற்குவியல்) கண்டு பிடிப்பது .
  2. அந்தப் புதையலில் இருந்து  கடவுச் சொல்லை வெளிக்கொணர   நீங்கள் கைப்பிடிக்கும் தெளிவா விதிமுறை  வகுப்பது. எல்லா வார்த்தைகளிலிருந்தும் முதல் எழுத்து அல்லது, முதல் வார்த்தையிலிருந்து முதல் எழுத்து, இரண்டாம்  வார்த்தையிலிருந்து  இரண்டாம் எழுத்து, கடைசி வார்த்தையிலிருந்து கடைசி எழுத்து... என்று எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்! உங்களுக்குப் புரியும்படியும், நினைவில் நிற்கும்படியும் இருந்தால் போதும் (இருப்பது அவசியம்)!
  3. கடவுச் சொல்லில் கலப்பதற்கான எண்ணை  / எண்களைத்  தேர்ந்தெடுப்பது! எவ்வாறு? ஏன்? எப்படி நினைவில் வைத்துக் கொள்வது? (மாதம், வருடம், தேதி, விலை, 63 இடங்கள், கதவிலக்கம், ஆழ்வார்கள், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு, திருக்குறள்....கணக்கிலடங்காது!)
  4. கடவுச் சொல்லில் சேர்க்க வேண்டிய சிறப்புக் குறியீடு/கள் பற்றி முடிவு செய்வது! எது?  எவை? எத்தனை? ஏன்? எதனால்? எங்கே, எதற்காக? என்ன பொருள்? ( ? ! * ^ < # $ @ & ) 
அவ்வளவு தான்! பயன் தரும், பயம் போக்கும், பலத்த,  மனம் குளிரும்  கடவுச் சொல் தயார்! 

இனிமேல், அடடா! கடவுச் சொல் மறந்து போச்சே என்கிற கவலையே வராது உங்களுக்கு! அப்படியே வந்தாலும், புதையலைத் தோண்டினால் புன்முறுவல் எட்டிப் பார்க்குமே! ஐயோ...ஐயய்யோ,  புதையலையே மறந்து விட்டால் என்ன செய்வது என்றா கேட்கிறீர்கள்? பூதத்தின் உதவியைத் தான் நாட வேண்டியிருக்கும், தயாராக இருங்கள்!  அப்படீன்னா கவலையே இல்லையா?! ஏன்?  ஓ! உங்கள் மாமனார் பெயர் மாத்ருபூதமா?....அய்யா, சாமி! ஆளை விடுங்க! இப்பேர்ப்பட்ட மருமகனை/ளை அலாவுதீன் பூதம் வந்து,  அலாக்காய்த் தூக்கிக் கொண்டு போய்  (தசாவதாரம் பாணியில்) பெரிய்ய கல்லுடன் கட்டி,  நடுக்கடலில் தான் போட வேண்டும்...! நான் அம்பேல்! 

மத்தவங்க  யாரும்  அனாவசியமா பயப்பட வேண்டாம்! "கடவுச் சொல்லை மறந்து விட்டீர்களா? இங்கே சொடுக்குங்கள்!"  என்று கூவுமே ஒரு சுட்டி, அதன் தலைமேல  ஒரு கல்லைத் தூக்கிப் போடுங்க, தானா வழி பிறக்கும்!!!

- மனம் திறந்து ...(மதி).

பின் குறிப்பு (குட்டிப் பதிவு!?):
  1.  இந்தப் பதிவு ஒரு குட்டி "Coaching Class" மட்டுமே. நீங்கள்  தேர்விலே வெற்றி  பெற ஆசைப்பட்டால் இங்கே செல்லவும்:  www.passwordmeter.com
  2. நாம்  உயிரைக் குடுத்துக் கண்டுபிடிச்ச 6Tpvi!nk5 அவங்ககிட்ட வாங்கின மதிப்பெண்  80% தாங்க !  :(((
  3. அதை 100% ஆக மாத்தறது எப்படீன்னு நீங்களே கண்டு பிடிச்சிடுவீங்க, நான் சொல்லித்தர வேண்டியதில்லை! :)))) 
  4. இந்தப் பதிவும் , வழக்கம் போல, கொஞ்சம் நீண்டு போச்சுங்க! குறைப்பது எப்படீன்னு தெரியலை! தெரிஞ்சா சொல்லுங்க!
  5. இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்ததா ? பயனுள்ளதா?  இன்னும் நிறையப் பேர் இதைப் படிக்கணும்னு நீங்க விரும்பறீங்களா? அப்போ, என்னவெல்லாம் பண்ணனும்னு உங்களுக்கே தெரியுமே! தவறாம பண்ணுங்க!
  6. எச்சரிக்கை: இந்தப் பதிவின் தொடர்ச்சி, மிகவும் பரபரப்பானது, சுவாரஸ்யமானது அப்படீன்னு ஏன் சொல்லலைன்னு நீங்க கேக்கக் கூடாது பாருங்க, அதான் சொல்லிப்புட்டேன்! நேரமும், மனசும் ஒத்துழைச்சா அதையும் படிங்களேன்:   தலைப்பு, மேட்டரு... தனிக்குடித்தனம்!

    19 comments:

    Arul Kumar P அருள் குமார் P said...

    நல்லா அருமையாக சொல்லி இருக்கீங்க மதி. நெட்வொர்க் டொமின் கம்ப்யூட்டர்ல நாங்க இப்படி தான் பாஸ் வோர்ட்ட செலக்ட் பண்ணுறோம். அதுவும் இல்லாமல் நீங்க சொன்ன விதிமுறை படி எண்களும், எழுத்துக்களும்,சிறப்புக் குறியீடுகள் இல்லாமல் இருந்தால் கடவு சொல் ஏற்க பட மாட்டது. ஆனால் நமது பர்சனல் கம்ப்யூட்டர்க்கு இப்படி ஒரு ரெஸ்ட்ரிக்சன் கிடையாது . அதுவும் இல்லாமல் நாம் "Administrator " ராக இல்லாமல் ஒரு " USER " ஆகா கம்ப்யூட்டர்இல் வேலை செய்தால் 90 % பிரச்சனைகள் காணாமல் போய்விடும். கண்ட கண்ட மென்பொருள்களை ஏற்றாமல் இருந்தாலே போதும். இதை பத்தி கொஞ்சம் கொஞ்சமாக என்னோட இன்னொரு வலை பதிப்பில் செய்து கொண்டு வருகிறேன். நேரம் இருந்தால் பொய் பார்க்கவும் . www.computer-n-security.blogspot.com

    கவிதை வீதி... // சௌந்தர் // said...

    உள்ளேன் ஐயா..

    கவிதை வீதி... // சௌந்தர் // said...

    உண்மையில் பயனுள்ள தகவல் தான்..

    அடுத்தில் சந்திப்போம்..

    cheena (சீனா) said...

    அன்பின் மதி

    அரிய தகவல்கள் - தெரிந்திருந்தாலும் அவ்வப்பொழுது யாராவது நினைவுறுத்திக் கொண்டே இருக்க வேண்டும் - வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா

    shanmugavel said...

    நல்ல தகவல்கள் .வாழ்த்துக்கள்

    மனம் திறந்து... (மதி) said...

    வெட்டிப்பையன்...!: நன்றிங்க ! ஆமாம்...கொஞ்சம் ஜாக்ரதையா இருந்தா முக்கால்வாசிப் பிரச்சனைகள் வராமலே தப்பிக்கலாம்! ஓ, நீங்க தனியா நிறைய சொல்லிருக்கீங்களா இதப் பத்தி....?வர்றேன்....வந்து பாத்து நானும் தெரிஞ்சுக்கறேன்!

    மனம் திறந்து... (மதி) said...

    # கவிதை வீதி # சௌந்தர்: வாங்க...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி! அது சரி, Attendance எடுத்த உடனே, இப்படித்தான் நைசா நழுவிடறதா...இனிமே கிளாஸ் முடியும்போதுதான் எடுக்கப் போறேன்!நோ...நோ....நோ...this is FINAL!

    மனம் திறந்து... (மதி) said...

    cheena (சீனா): அய்யா! வாங்க...வருகைக்கும் கருத்துக்கும், வாழ்த்துக்கும், அன்புடன் நன்றி!

    மனம் திறந்து... (மதி) said...

    shanmugavel: வாங்க...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி! நேரம் கிடைக்கும்போது, பதிவுலகச் சண்டையைப் பற்றிய என் இந்தப் பதிவைப் படித்துப் பாருங்கள்: தமிழ்மணம் மணக்கிறதா? நாறுகிறதா? வளருமா? அழியுமா?

    Paavai said...

    Blogukku vandhu funny email addresses post panninadukku thanks.

    My only technique to remember complicated passwords is to write them somewhere and keep it ... I keep searching for the paper in which I wrote that's a different story.

    Most of the banks are considering closing my accounts since the number of times I ask for password reset is not funny :) Let me try some of the techniques you have mentioned like first word of proverb etc.

    மனம் திறந்து... (மதி) said...

    Paavai: Hi, Thanks for thanks (tit for tat?):)))

    //write them somewhere and keep it// it should be actually write them somewhere and lose it(the paper). But take heart, you are not alone, in this...the whole world, or at least the majority is with you.

    Thanks again...and all the best for your new experiments! :)))

    சென்னை பித்தன் said...

    பயனுள்ள தகவல்!நன்றி மதி!

    மனம் திறந்து... (மதி) said...

    சென்னை பித்தன்: வாங்க...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    sriram said...

    நல்ல பதிவு நன்றி மதி

    என்றும் அன்புடன்
    பாஸ்டன் ஸ்ரீராம்

    மனம் திறந்து... (மதி) said...

    Sriram: வாங்க...நன்றிங்க!

    ம.தி.சுதா said...

    ஃஃஃஅடடா! கடவுச் சொல் மறந்து போச்சே என்கிற கவலையே வராது உங்களுக்கு! ஃஃஃ

    கண்டிப்பாக வரவே வராது... ஹ..ஹ..ஹ..

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    வைரமுத்துவின் மறுபக்கமும் என் சந்தேகங்களும் தீர்த்து விடுங்களேன்.

    மனம் திறந்து... (மதி) said...

    ♔ம.தி.சுதா♔: வாங்க! நம்ம கடை விலாசம் கூட அப்பிடித்தானுங்களே ...மறக்க மாட்டீங்க இல்லே!

    அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

    நல்லா சொல்லி இருக்கீங்க... useful post...thanks..:)

    மனம் திறந்து... (மதி) said...

    அப்பாவி தங்கமணி: Thank you! :)

    Post a Comment

    ஆஹா! நீங்க மனம் திறந்து பேசவேண்டிய கட்டம் வந்தாச்சு!