Tuesday, April 19, 2011

லேனா தமிழ்வாணன் காரணமில்லாமலே கோபித்துக் கொண்டாரே... ஏன்? எதற்காக?


ஒரு ஞாயிறு பிற்பகல், வழக்கம் போல், அண்ணா நகர் சாந்தி காலனியில் உள்ள என் நண்பன் அரவிந்தனின் வீட்டில் பேசிக் கொண்டிருந்த போது, அவர் திடீரென்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார் பாருங்கள்:   "லேனாவுக்கு உன்மேல் கோபம்" என்று,  ரொம்பவும் கூலாக! கேட்ட நானோ அதிர்ந்து போனேன்! ஏன்? எதற்காக? எப்படி? எப்போது நடந்தது இது? என்று ஆயிரம் கேள்விகள் என் மண்டைக்குள் சுற்றிச் சுற்றி சூறாவளியாய்  உருவெடுத்தன, சுனாமி போலவே தலைமுடி வேர்களில் வந்து மோதித் தாக்கின! தலையே வெடித்து விடும் போலிருந்தது எனக்கு!

"நீ என்னவோ அவரிடமிருந்து விலகிச் செல்கிறாயாமே, அவரைக் கண்டு கொள்வதில்லையாமே?" இது தான் அவர் கோபத்துக்குக் காரணம் என்றார் என் நண்பர். மேற்கொண்டு துருவிக் கேட்டதற்கு, இவ்வளவு தான் எனக்குத் தெரியும் இதற்குமேல் என்னைக் குடையாதே என்று அலுத்துக் கொண்டார் நண்பர். என்னடா இது நிலைமை இவ்வளவு மோசமாகி விட்டதே என்று நொந்து போன நான், சரி கிளம்பு, ஒரு எட்டு போய் அவரைப் பாத்துப்  பேசிட்டு வந்திடலாம்னு சொன்னேன்! நண்பனின் வீட்டில் இருந்து கூப்பிடு தூரத்தில் தான் லேனாவின் வீடு. உடனே கிளம்பினோம்!

நல்ல காலம், நாங்கள் போன போது அவர் வீட்டில் இருந்தார்! அப்பாடா...என்று நானும் என் மனதைத் தேற்றிக் கொண்டேன்! விவரிக்க முடியாத ஒரு ஆச்சரியம் அவர் முகத்தில் தெரிந்தது! அப்போது, அங்கே எங்களை அவர் நிச்சயம் எதிர் பார்க்கவில்லை! ஆனாலும், அவருக்கே உரிய வாஞ்சையான,  இன்முகத்துடன் எங்களை வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றார் லேனா! 

முறையான முதல் அடுக்குப் பரிமாற்றங்கள் நடந்தேறின! குசல விசாரிப்புகள், நண்பர் நலன்கள் சினிமாப் பட டைட்டில்ஸ் மாதிரி ஓடி ஓய்ந்தன! அடர்த்தியான, அருமையான, சுவை நிரம்பிய பழச்சாறு மூன்று தடித்த கண்ணாடி தம்ளர்களில் வந்து இறங்கியது முக்காலியின் மேல் எங்களுக்காக! 

நான் வீடு தேடி வந்ததையே மிகவும் ஆச்சரியமாகப் பார்த்தும், நினைத்தும் கொண்டிருக்கும் லேனாவிடம் மெதுவாகப் பேச்சை ஆரம்பித்தேன், பழச் சாற்றைப் பதம் பார்த்துக் கொண்டே! எதோ என்மேல் கோபமாக இருக்கிறீர்களாமே, அரவிந்தன் இன்று தான் சொன்னார் என்றேன், நண்பனைக் காட்டி. அடடே, அது ஒண்ணும் இல்லைங்க என்று முதலில் மழுப்பினார், லேனா. 

நான் விடாமல் வற்புறுத்தியதின் பேரில் தொடர்ந்து பேசினார்: அது ஒண்ணும் பெரிசா இல்லீங்க....போன வாரம், கல்லூரியில் உங்களைப் பார்த்துக் கை அசைத்தேன், சிரித்தேன், நீங்கள் கண்டு கொள்ளாமலே போய்விட்டீர்கள், அது எனக்கு மிகவும் வருத்தத்தைத் தந்தது, என்றார்! மேலும் சற்று விவரங்கள் கேட்டறிந்த பிறகு நான் என் நிலையை விளக்கினேன்: நான் உங்களை உண்மையிலேயே கவனிக்கவில்லை! வேறு நண்பர்களோடு பேசிக் கொண்டு போனதில் உங்களைப் பார்க்காமலேயே சென்று விட்டிருக்கிறேன்! இது தான் உண்மை! இல்லா விட்டால் உங்களை நான் அலட்சியம் செய்ய வேண்டிய காரண காரியம் எதுவுமே இல்லையே, என்னை நம்புங்கள் நண்பரே என்றேன்! நானும் அப்படித்தான் நினைத்தேன், ஆனாலும் என்னவோ,  நீங்கள்  என்னிடமிருந்து விலகிப் போக விரும்பியதாக உணர்ந்து கவலைப் பட்டேன், ஆதாரமில்லாமல், என்றார் லேனா. 

உண்மையைப் புரிந்து கொண்ட பின் அவர் தூக்கிப் போட்டது தான் மிகப் பெரிய குண்டு! நான் ஏதோ அரவிந்தனிடம் இப்படிச் சொன்னதை நீங்கள் இவ்வளவு சீரியசாக எடுத்துக் கொண்டு, என் வீடு தேடி வந்து நிலைமையை விளக்கி நட்பை நிலை நாட்டுவீர்கள் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை...நீங்கள் உண்மையிலேயே மிக உயர்ந்த மனிதர் தான்....  A True Gentleman! என்றாரே பார்க்கலாம்! எனக்கோ கையும் ஓட வில்லை, காலும் ஓடவில்லை! நண்பரே, ஏன் இதை இவ்வளவு பெரிசு படுத்துகிறீர் என்று அவரைச் செல்லமாய்க் கடிந்து கொண்டு, மேலும் கொஞ்ச நேரம் அளவளாவி மகிழ்ந்து பின் லேனாவிடமிருந்து பிரியா விடை பெற்றோம், நானும் அரவிந்தனும்! 

இது நடந்தது:  நாங்கள் பச்சையப்பன் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது,  எழுபதுகளில்! அவர் தமிழ் இலக்கியமும், நான் ஆங்கில இலக்கியமும் படித்துக் கொண்டிருந்த காலம்!  பசுமையான, நெஞ்சை விட்டு நீங்காத இனிய நினைவுகள், என் பிரிய வாசகர் ஒருவர் உபயத்தில் இன்று மேலே வந்தன  நீர்க்குமிழிகள்  போல!

லேனா இன்று எழுதுவது எல்லாம் இவ்வாறு வாழ்ந்தும்,  உணர்ந்தும், சுவைத்தும், தெளிந்தும் பதப்படுத்தப்பட்ட வாழ்க்கை நெறிகளும், வாழும் வழிகளும்,  வெற்றிப் படிகளும் தானேயன்றி  வியாபாரத்துக்காக அச்சிடப்படும் வெறும் வார்த்தைகள் அல்ல என்பதை  அவரை அறிந்தவர்கள் அறிவார்கள்!

Lena is a True Gentleman to the Core in every sense of the term!

- மனம் திறந்து... (மதி). 

இலவச  இணைப்பு:

  1. என் வாசக நண்பர் ஒருவர், மின்னஞ்சல் மூலம் எதேச்சையாகப் பேசிக்கொண்டிருக்கும் போது, லேனாவை ஒரு நிகழ்ச்சியில் பேச அழைக்கப் போவதாகச் சொன்னார். அவருக்கு எழுதிய பதிலாக ஆரம்பித்தது தான் இந்தப் பதிவு. 
  2. மிகப் பெரிய விஷயம் ஒன்றும் இல்லை! ஆனால் சுவையான அனுபவம் தானே, நிறையப் பேர் ஆவலோடு படிப்பார்களே என்று தான் இங்கேயே பகிர்ந்து விட்டேன்!
  3. தான் தமிழ்வாணன் மகன் என்பதை மறந்தும், மறைத்தும், லக்ஷ்மணன் ஆகவே எங்களுடன் இயல்பாகப் பழகினார் லேனா என்பதே இப்பதிவின் அடிநாதம்! வேறு எந்த விதமான உள்நோக்கமும் இல்லை, இல்லை, இல்லவே இல்லை!
  4. ஒரு  சிறிய முடிச்சை வைத்து ஒரு சுவையான பதிவை(?!) எழுதுவது எப்படி என்று நான் கற்றுக் கொள்ள உறுதுணையான முயற்சி  என்று வேண்டுமானால் சொல்லலாம்!
  5. பொதுவான செய்தி: வாழ்க்கையில் உயர்பவர்கள் பெரும்பாலும் திடீரென்று முளைப்பதில்லை! ஒரு நீண்ட நெடும் பயணத்தில், தங்களைத் தயார் செய்து கொண்டு, பலவாறான இடர்களையும், பரிசோதனைகளையும், தனிமனித வாழ்வின் சுக, துக்கங்களையும் கடந்து, பல்வேறு நிலைகளிலும், வகைகளிலும்  சமுதாயம் இவர்களைப் பதம் பார்த்துப் பரீட்சை செய்த பிறகு, இவர்கள் நமக்குத் தேவையானவர்கள் என்று உணர்ந்து,  தட்டிக் கொடுத்துத் தளமும், தடமும் அமைத்துக் கொடுக்கும் வரையிலும் பொறுத்திருந்து,   தம் தேடலை அணையா விளக்காக அடைகாத்து,  உயிரூட்டி வளர்ப்பதால் மட்டுமே இது சாத்தியமாகிறது என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை!
  6.  Lena's Photo, courtesy: http://www.tamilvanan.com/

47 comments:

Chitra said...

லேனா இன்று எழுதுவது எல்லாம் இவ்வாறு வாழ்ந்தும், உணர்ந்தும், சுவைத்தும், தெளிந்தும் பதப்படுத்தப்பட்ட வாழ்க்கை நெறிகளும், வாழும் வழிகளும், வெற்றிப் படிகளும் தானேயன்றி வியாபாரத்துக்காக அச்சிடப்படும் வெறும் வார்த்தைகள் அல்ல என்பதை அவரை அறிந்தவர்கள் அறிவார்கள்!


.....வாவ்! அருமையான கருத்து. லேனா சார் பற்றி நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டோம். பகிர்வுக்கு நன்றிங்க.

Porkodi (பொற்கொடி) said...

ஆஹா.. நீங்க லேனா தமிழ்வாணனுக்கே நண்பரா? பின்றீங்க மதி! நான் அவரோட ஒரு பக்க கட்டுரைகள் படிச்சுருக்கேன்!

மோகன் குமார் said...

சின்ன சஸ்பென்ஸ் உடன் சுவாரஸ்யமாக சொல்லி உள்ளீர்கள்

Anonymous said...

லேனா இன்று நாடறிந்த எழுத்தாளராக இல்லாவிட்டாலும் இப்பதிவு வந்திருக்குமா என்ற கேள்விக்குப் பதிலளிக்க இயலுமா?

:))

Dubukku said...

ஆஹா நீங்க லேனா நண்பரா...:))
//நானும் லேனாவும் பச்சையப்பன் கல்லூரியில், எழுபதுகளில், படித்துக் கொண்டிருந்த போது!//

ahem ahem ....அண்ணே...பெரியண்ணே...உங்க வயதும் அனுபவமும் தெரியாம எதாவது பேச்சு வாக்கில உளறியிருந்தா மாப்பு கேட்டுக்கிறேன் :)

மனம் திறந்து... (மதி) said...

Chitra: வாங்க... நன்றிங்க!

மனம் திறந்து... (மதி) said...

Chitra: வாழ்க்கையில் உயர்பவர்கள் பெரும்பாலும் திடீரென்று முளைப்பதில்லை! ஒரு நீண்ட நெடும் பயணத்தில், தங்களைத் தயார் செய்து கொண்டு, பலவாறான இடர்களையும், பரிசோதனைகளையும், தனிமனித வாழ்வின் சுக, துக்கங்களையும் கடந்து, பல்வேறு நிலைகளிலும், வகைகளிலும் சமுதாயம் இவர்களைப் பதம் பார்த்துப் பரீட்சை செய்த பிறகு, இவர்கள் நமக்குத் தேவையானவர்கள் என்று உணர்ந்து, தட்டிக் கொடுத்துத் தளமும், தடமும் அமைத்துக் கொடுக்கும் வரையிலும் பொறுத்திருந்து, தம் தேடலை அணையா விளக்காக அடைகாத்து, உயிரூட்டி வளர்ப்பதால் மட்டுமே இது சாத்தியமாகிறது என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை!

மனம் திறந்து... (மதி) said...

பொற்கொடி: வாங்க, வாங்க....ரொம்ப நாளைக்கு அப்புறம் நம்ம கடைப் பக்கம் வந்திருக்கீங்க! மிக்க நன்றி! பெரு மகிழ்ச்சியும் கூட!

இதுவும் அவரோட "ஒரு பக்க" கதை தானே! என்ன... உண்மைக் கதை! :)))

மனம் திறந்து... (மதி) said...

பொற்கொடி: எனது தளத்தில் நிறையவே "Backlog" வைத்திருக்கிறீர்கள்! உடல், மனம், நேரம் எல்லாம் ஒத்துழைத்தால் மெதுவாகப் படித்துப் பார்த்துக் கருத்துரை இடுங்களேன், வழக்கம் போல! :)))

மனம் திறந்து... (மதி) said...

மோகன் குமார்: நண்பரே, வாங்க!
//சின்ன சஸ்பென்ஸ் உடன் சுவாரஸ்யமாக சொல்லி உள்ளீர்கள்//
நீங்களே சொன்னப்புறம் "அப்பீலே" இல்லீங்கோ! நன்றிங்க!

மனம் திறந்து... (மதி) said...

Anonymous said: //லேனா இன்று நாடறிந்த எழுத்தாளராக இல்லாவிட்டாலும் இப்பதிவு வந்திருக்குமா என்ற கேள்விக்குப் பதிலளிக்க இயலுமா?//

உங்கள் கேள்வி நியாயமானதே! அது மட்டுமில்லை, உங்கள் கேள்வியிலேயே பதிலும் அடங்கி இருக்கிறதே! வேறொரு சாதாரண மனிதரைப் பற்றி நான் எழுதியிருக்கக் கூடும், ஆனால் நீங்கள் இங்கே வந்து, இந்தக் கேள்வியைக் கேட்கும் வாய்ப்பு வெகுவாகக் குறைந்திருக்கும் அல்லவா? :)))

உண்மையில் நான் உங்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்க விரும்பிகிறேன்! வழக்கமாக நான் பின் குறிப்பு என்ற பெயரில் ஒரு குட்டிப் பதிவே எழுதுவேன், ஒவ்வொரு பதிவுடனும்! இம்முறை அதைச் செய்ய வில்லை, நேற்று.

ஆனால், நீங்கள் எழுப்பிய சந்தேகத்தை நிவர்த்தி செய்யும் வகையில் அந்த வழக்கத்தையும் நிறைவேற்றி விட்டேன் இப்போது. அது மட்டுமல்ல, ஒரு முழு பதிவே எழுதக் கூடிய கருப்பொருளை பொதுச் செய்தி என்று சொல்லிப் பின் குறிப்பில் வைத்து அழகாக(?!) நிறைவு செய்திருக்கிறேன்! இந்தப் பெருமை எல்லாம் உங்களையே சாரும்! மீண்டும் இந்தப் பக்கம் வந்தால் படித்துப் பாருங்கள்! நன்றி, வணக்கம்!

சென்னை பித்தன் said...

மறக்க முடியாத நினைவுதான்!இன்றும் நட்பும்,சந்திப்பும் தொடர்கிறதல்லவா?

மனம் திறந்து... (மதி) said...

Dubukku: //அண்ணே...பெரியண்ணே... உங்க வயதும் அனுபவமும் தெரியாம எதாவது பேச்சு வாக்கில உளறியிருந்தா மாப்பு கேட்டுக்கிறேன் :)//

தல...வாங்க! வழக்கம் போல வம்புக்கு இழுக்க ஆரம்பிச்சுட்டீங்க நம்பளை? இந்த மாதிரி வம்பெல்லாம் வரக் கூடாதுன்னு தான் என்னைப் பத்தின தகவல்கள் எதுவும் தராமல் புனை பெயரிலேயே எழுதிக் கொண்டிருக்கிறேன்!

பதிவுலகப் பரிமாற்றங்களில் எழுத்து, சிந்தனை, நடை, பார்வை, பகிர்தல், அணுகுமுறை என்ற பல்வேறு மதிப்பீடுகளுக்கே ஒருவருக்கொருவர் மரியாதையும், முன்னுரிமையும் கொடுக்க வேண்டும் என்று எதிர் பார்க்கிறேன், திடமாக நம்புகிறேன்!

இந்தக் குறிப்புகள் இல்லாமல் இப்பதிவு நிறைவு பெறாது என்ற நிர்ப்பந்தம் என்னை உங்களிடம் காட்டிக் கொடுத்து விட்டது! :)))

நான் உங்கள் சிஷ்யன் என்பதில் மாற்றம் எதுவும் இல்லை, இல்லை, இல்லவே இல்லை! :)))

மனம் திறந்து... (மதி) said...

சென்னை பித்தன்: வணக்கம், வாங்க! நட்பு நிலைக்கிறது...தொடர்பு மிகக் குறைவே! பிசிராந்தையாருக்காக கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்தான்! நான் வடக்கே இருக்கிறேன்! அவ்வளவு தான் வித்தியாசம்!

thirukkannapurathaan said...

i know very well about lena sir. he is complete gentelman.
i meet lena 3 times officealy. he spoke and action all are true!
-devarajan, dinamalar

மனம் திறந்து... (மதி) said...

தேவராஜன்: வாங்க...வாங்க, வணக்கம்! நீங்க வந்து என் வயித்திலே பால் வார்த்தீங்க! இங்கே சில பேர், நான் ஏதோ வாய்க்கு வந்த படி பேசிக்கிட்டிருக்கேன்னும், என்னோட ப்ளாக் வியாபார வளர்ச்சிக்காகவும் தான் இப்படி அவரை மிஸ்யூஸ் பண்ணிக்கிட்டேன்னும் சொல்லாம சொல்லிக்கிட்டு இருக்காங்க!

நீங்கள் இப்படி பளிச்சுன்னு உண்மையைப் போட்டு உடைச்சது மூலமா நல்ல பேரு வந்தது உங்களுக்கும் எனக்கும் மட்டும் இல்லீங்க! தினமலருக்கே கூடன்னு தான் நான் சொல்லுவேன்! ஏன்னா, தினமலர்ல வர்றது எல்லாம் உண்மை என்று சொல்ல முடியாவிட்டாலும், தினமலர்ல வேலை செய்றவங்க உண்மையைப் பேசத் தயங்க மாட்டாங்கன்னு நிரூபிச்சிட்டீங்க பாருங்க, அதனால தான்! :))) நன்றிங்க!

ஆனந்தி.. said...

தங்களை பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டு இருக்கிறேன்.
http://blogintamil.blogspot.com/2011/04/blog-post_23.html

Rathnavel said...

நல்ல பதிவு திரு மதி.
திரு தமிழ்வாணன் எழுதியது நிறைய படித்திருக்கிறேன். அவரது தூய தமிழ் எனக்கு நிறைய பிடிக்கும்.
திரு லேனா தமிழ்வாணனின் எழுத்துக்களையும் தேடிப்படித்துக் கொண்டிருக்கிறேன்.
வாழ்த்துக்கள்.

மனம் திறந்து... (மதி) said...

ஆனந்தி: வாங்க ...மிக்க நன்றிங்க! இது என்ன ஆச்சரியம்! தோனி பற்றிய என் பதிவிற்கு உள்நாட்டுப் பத்திரிக்கை வலைச்சரத்திலும் வெளிநாட்டுப் பத்திரிக்கை TIME மூலமாகவும் ஒரே நாளில் அங்கீகாரம் கிடைத்திருக்கிறதே! :)))

மனம் திறந்து... (மதி) said...

Rathnavel: அய்யா, வாங்க ... வருகைக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்க !

அறிவன்#11802717200764379909 said...

||உண்மையில் நான் உங்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்க விரும்பிகிறேன்! வழக்கமாக நான் பின் குறிப்பு என்ற பெயரில் ஒரு குட்டிப் பதிவே எழுதுவேன், ஒவ்வொரு பதிவுடனும்! இம்முறை அதைச் செய்ய வில்லை, நேற்று.

ஆனால், நீங்கள் எழுப்பிய சந்தேகத்தை நிவர்த்தி செய்யும் வகையில் அந்த வழக்கத்தையும் நிறைவேற்றி விட்டேன் இப்போது. அது மட்டுமல்ல, ஒரு முழு பதிவே எழுதக் கூடிய கருப்பொருளை பொதுச் செய்தி என்று சொல்லிப் பின் குறிப்பில் வைத்து அழகாக(?!) நிறைவு செய்திருக்கிறேன்! இந்தப் பெருமை எல்லாம் உங்களையே சாரும்! மீண்டும் இந்தப் பக்கம் வந்தால் படித்துப் பாருங்கள்! நன்றி, வணக்கம்!||

அந்த அனானி நான்தான்..
பொதுவாக எந்த அறிமுகமற்ற பதிவிலும் நான் விமர்சனங்களைச் செய்வதில்லை.

மேலும் சிறிது துணுக்குறும் வண்ணம் கருத்தைச் சொல்ல நேர்ந்தாலும்,ஏன் அக்கருத்து சொல்லப் படுகிறது என்று சிந்திப்பதை விட யார் அக்கருத்தைச் சொல்கிறார்கள்,அவர்களது நிறம் என்ன,சுவை என்ன,திடம் என்ன என்று த்ரீ ரோசஸ் அனாலிசில் போல கருத்திடுபவர்களை ஆ(பீ)ராய்ந்து கிழிக்கும் வழக்கம் தான் பதிவுலகில் நான் பார்த்த உண்மை...

உங்களது பதிவின் தலைப்பு பதிவின் உள்ளடக்கத்தை மீறிய விளம்பரமாகப் பட்டதால் அப்படி ஒரு கேள்வியை எழுப்பினேன்.

ஆயினும் விமர்சனங்களுக்கு நீங்கள் முதல் வழியைத் தேர்ந்தெடுக்கும் நேர்முகப் பார்வை கொண்டிருக்கிறீர்கள் என்று தெரிந்ததார் இந்தப் பின்னூட்டம்..

ஆயினும் பெயரிலியாக வரும் கருத்துக்களெல்லாம் என்னுடையவை என்று நினைக்காதிருக்க எம்பெருமான் துணை செய்ய வேண்டும் !

:))

மனம் திறந்து... (மதி) said...

அறிவன்: வாங்க...வணக்கம்! உங்களை அறிஞர் என்று அழைப்பதே பொருத்தமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்!

//சிறிது துணுக்குறும் வண்ணம் கருத்தைச் சொல்ல நேர்ந்த... அந்த அனானி நான்தான்...//

1. எழுதியவரோ, அல்லது படிப்பவரோ ஒரு வலுவான முரண்பாட்டை நியாயப் படுத்த விழைகிறார் என்பதே அனானி வடிவில் பேசத் தூண்டும் அடிப்படைக் காரணம் என நான் ஆழமாக நம்புகிறேன்!

2. அதே காரணத்தினாலேயே, அந்தப் பதிவு ஆழமான தாக்கத்தை எதோ ஒரு வகையில் ஏற்படுத்தியிருக்கிறது என்பதும் ஒத்துக் கொள்ள வேண்டிய உண்மையாகிறது!

3. எனவே, அப்படிப்பட்ட கருத்துகள்/ உணர்ச்சி வெளிப்பாடுகள் தகுந்த மரியாதைக்கும், ஆழ்ந்த பரிசீலனைக்கும் உகந்தவையாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, கண்ணாடிக் குவளைகளைப் போல மிக்க கவனத்தோடு கையாளப் பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன்!

4. என் பதில், நமக்கே தெரியாமல், என்னை ராமராகவும் உங்களை அகலிகையாகவும் மாற்றிவிட்டது குறித்து மகிழ்ச்சி கொள்ளாமல் இருக்க முடியவில்லை! ஒரு வேளை அகலிகை வரலாற்றின் இன்னொரு பரிமாணம் இது தானோ? :)))

மனம் திறந்து... (மதி) said...

அறிவன்: //ஆயினும் பெயரிலியாக வரும் கருத்துக்களெல்லாம் என்னுடையவை என்று நினைக்காதிருக்க எம்பெருமான் துணை செய்ய வேண்டும் !//

என்ன கொடுமை சரவணா, இது! என் மகன் அருண் குமார் என்று நான் சொன்னால், எல்லா அருண் குமார்களும் என் மகன்கள் என்று எல்லோரும் நினைப்பார்களா என்ன? :)))

"காணொணாத் திருக்கோலம்" கொண்டு எம்பெருமான் என்றும் உங்கள் உடன் இருப்பார், கவலையே படாதீர்கள்! :)))

மனம் திறந்து... (மதி) said...

அறிவன்: விமர்சனம் பற்றிய என் பார்வை படிப்பதற்கு சுவாரசியமாக இருக்கலாம், உங்களுக்கு! இன்னும் சொல்லப் போனால் அதுதான் என் முதல் பதிவும் கூட! :)))

அறிவன்#11802717200764379909 said...

||என் பதில், நமக்கே தெரியாமல், என்னை ராமராகவும் உங்களை அகலிகையாகவும் மாற்றிவிட்டது குறித்து மகிழ்ச்சி கொள்ளாமல் இருக்க முடியவில்லை! ஒரு வேளை அகலிகை வரலாற்றின் இன்னொரு பரிமாணம் இது தானோ? :))) ||

ஜெய காந்தனின் சாபவிமோசனத்தில் நடப்பது நடக்காமல் இருந்தால்,நான் அகலிகையானதில் மகிழ்ச்சிதான்..!

:))

||உங்களை அறிஞர் என்று அழைப்பதே பொருத்தமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்!||

நன்னி...ஆனால் இதுல ஒன்னும் உள்குத்து இல்லையே ?!


||அறிவன்: விமர்சனம் பற்றிய என் பார்வை படிப்பதற்கு சுவாரசியமாக இருக்கலாம், உங்களுக்கு! இன்னும் சொல்லப் போனால் அதுதான் என் முதல் பதிவும் கூட! :))) ||

படித்தேன்..இனி நேரடித் தாக்குதல்கள்தான் ! :))

thanks again.

மனம் திறந்து... (மதி) said...

அறிவன்: நன்றிங்க! அடடா ... நான் சாப விமோசனம் படிக்க வில்லையே! முடிந்தால் மின்னஞ்சலில் (manamthirandhu@gmail.com) சுருக்கமாகச் சொல்லுங்கள்... தெரிந்து கொள்கிறேன்!

//நன்னி...ஆனால் இதுல ஒன்னும் உள்குத்து இல்லையே ?!//

கற்றாரைக் கற்றாரே(!?) காமுறுவர்! வேறு எந்த உள் குத்தும் இல்லை! :))

//படித்தேன்..இனி நேரடித் தாக்குதல்கள்தான் ! :))//

அந்தப் பதிவு இந்த அளவுக்கு வன்முறையைத் தூண்டி விடும் என்று நான் எதிர் பார்க்கவே இல்லையே! :)))

அறிவன்#11802717200764379909 said...

||ஜெய காந்தனின் சாபவிமோசனத்தில்||

நினைவுப் பிசகு...அது புதுமைப் பித்தனின் சாபவிமோசனம்.

தேடியாவது படித்து விடுங்கள்..தமிழின் உன்னத சிறுகதைகளில் எளிதாக இது முதல் 5 இடங்களுக்குள் வரும் !

சுருக்கமாக கீழேயே...ஆனாலும் சொல்கிறேன்,தேடியாவது படித்து விடுங்கள்.

சுருக்கம் இந்த சுட்டியிலிருந்து...


இரண்டாவது கதை சாப விமோசனம். அகலிகை, இராமனால் சாப விமோசனம் பெற்றபின் வாழ்ந்ததாகப் புதுமைப்பித்தனால் கற்பனை செய்யப்பட்ட வாழ்க்கையைப் பேசுகிறது இக்கதை. இதிகாசக் கதையாகவே, இதிகாசக் கதையின் நீட்சியாகவே இதனைப் படைக்கிறார் புதுமைப் பித்தன். சாப விமோசனம் புதுமைப்பித்தன் படைப்புகளில் தனிச்சிறப்புடையது, தமிழின் மிகச்சிறந்த சிறுகதைகளில் ஒன்றாகப் பேசப்படுவது. கதையைத் தொடங்குமுன்னே ‘ராமாயண பரிச்சய முள்ளவர்களுக்கு இந்தக்கதை பிடிபடாமல் (பிடிக்காமல் கூட) இருக்கலாம். அதை நான் பொருட்படுத்தவில்லை.’ ஆசிரியரின் இத்தனிக்கூற்று முன்னுரையாக இடம்பெற்றுள்ளது. அகலிகை இராமனால் சாப விமோசனம் பெறுவதில் கதை தொடங்குகிறது. இராமன் கால்துகள் பட்டுச் சிலை பெண்ணாகிறது. ‘நெஞ்சினால் பிழை செய்யாதவளை நீ ஏற்றுக் கொள்வதுதான் பொருந்தும்’ (மேற். நூ. ப.529) என்கிறார் விசுவாமித்திரர் கோதமனிடம். கோதமன் அகலிகை வாழ்க்கை மீண்டும் தொடங்குகிறது. அகலிகை மனதால் களங்கமற்றவள் என்பதை கோதமர் ஏற்றுக்கொள்கிறார். ஆனால் ஊர் உலகம் அவளைத் தூற்றுகிறது. ‘சாப விமோசனம் கண்டாலும் பாப விமோசனம் கிடையாதா? ‘ (மேற். நூ. ப.535) இராமாயணக் கதை நெடுகிலும் அகலிகைக் கதை தொடர்கிறது. சீதை சிறை மீட்புக்குப் பின் சீதையும் இராமனும் ஒருநாள் அகலியைக் காண வருகின்றனர். அகலிகை சீதை இவர்களின் தனித்த உரையாடலில் இலங்கையில் நடந்த சம்பவங்களைச் சீதை சொல்லிக்கொண்டிருந்தாள். சாப விமோசனம் கதையின் உச்சம் இப்பகுதி,அக்கினிப் பிரவேசத்தைச் சொன்னாள். அகலிகை துடித்துவிட்டாள்.அவர் கேட்டாரா? நீ ஏன் செய்தாய் என்று கேட்டாள்.அவர் கேட்டார், நான் செய்தேன் என்றாள் சீதை அமைதியாக.அவன் கேட்டானா? என்று கத்தினாள் அகலிகை, அவள் மனசில் கண்ணகி வெறி தாண்டவமாடியது. அகலிகைக்கு ஒரு நீதி, அவனுக்கு ஒரு நீதியா? ஏமாற்றா? கோதமன் சாபம் குடலோடு பிறந்த நியாயமா? இருவரும் வெகுநேரம் மௌனமாக இருந்தனர்.உலகத்துக்கு நிரூபிக்க வேண்டாமா? என்று கூறி மெதுவாகச் சிரித்தாள் சீதை.உள்ளத்துக்குத் தெரிந்தால் போதாதா? உண்மையை உலகுக்கு நிரூபிக்க முடியுமா? என்றாள் அகலிகை. வார்த்தை வறண்டது.நிரூபித்துவிட்டால் மட்டும் அது உண்மையாகிவிடப் போகிறதா, உள்ளத்தைத் தொடவில்லை யானால்? நிற்கட்டும், உலகம் எது? என்றாள் அகலிகை. (மேற். நூ. ப.539) மனதால் களங்கமற்று இருந்தாலே போதும் என்று அகலிகைக்கு பேசப்பட்ட அறம், சீதை விசயத்தில் உலகத்துக்கு நிரூபிக்க வேண்டாமா? என்றாகிறதே, ஏன்? அகலிகைக்கு ஒரு நீதி அவனுக்கு ஒரு நீதியா? ஊருக்கு உபதேசம் செய்துவிட்டுத் தன் மனைவி என்கிற போது நியாயம் ஏன் மாறுகிறது? எது மாற்றுகிறது? கோதமன் சாபம் குடலோடு பிறந்த நியாயமா? என்று கொதிக்கும் அகலிகை மீண்டும் கல்லாகிறாள்.

மனம் திறந்து... (மதி) said...

அறிவன்: மிக்க நன்றிங்க! இவ்வளவு சூடான விவாதத்தைச் சும்மா கொளுத்திப் போட்டுட்டுப் போயிருக்காரே புதுமைப் பித்தன்... பலே கில்லாடிதான் அவர் பெயருக்கேற்ப! இந்தக் கதையின் படியே நீங்களும் வேறு ஒரு பதிவரின் வலைப்பூவில் மீண்டும் அனானி ஆகப் போவது என்னவோ நிதர்சனமான உண்மை தானே! அங்கே மீண்டும் உயிர்த்தெழும் சாத்தியக் கூறுகள் எவ்வளவு என்பது அந்தப் பரமாத்மாவுக்கே வெளிச்சம்! :)))

ஊருக்கு உபதேசம், உனக்கில்லடி என்பது கூட, இது நாள் வரை யாரோ அரசியல்வாதி/ போலிச் சாமியார் சொன்னது என்றல்லவா நினைத்திருந்தேன்... இது ராமரே கடைப் பிடித்த கொள்கை என்று நிறுவப்படும் போது பெரிய அளவில் வருத்தம் தலை தூக்குகிறதே! என்ன செய்ய?

அரசியலிலும், இதிகாசத்திலும் இதெல்லாம் சகஜமப்பா என்று சொல்லி நம்மை நாமே தேற்றிக் கொள்ளத் தான் வேண்டுமோ? :((

சரி..சரி... தேடிப் பிடிக்கிறேன்... படிக்கிறேன் பித்தனை! நன்றி!

மனம் திறந்து... (மதி) said...

அறிவன்: ஆஹா! கிடைத்து விட்டதே ! பாப விமோசனம் ! இதோ ஒரு தங்கப் புதையல்: அழியாச் சுடர்கள். நீங்கள் தேடி அலையும் பொக்கிஷங்கள் அனைத்தும் அனேகமாக இங்கேயே கிடைக்க வாய்ப்பு உண்டு! அருமையான சேவை!

அழியாச் சுடராம், வெகுவாகப் பாராட்டப் பட வேண்டியவராம், நம்மை அவருக்குக் கடன் பட்டவராக்கி மகிழ்வாராம், வாழ்வாங்கு வாழ்வாராம், இவ்வையகத்தில்!

ஒரு சிறிய சந்தேகம் .... பாப விமோசனம் சிறுகதை என்று யார் சொன்னது? என்ன அளவுகோல்? :))

Anonymous said...

//லேனா இன்று எழுதுவது எல்லாம் இவ்வாறு வாழ்ந்தும், உணர்ந்தும், சுவைத்தும், தெளிந்தும் பதப்படுத்தப்பட்ட வாழ்க்கை நெறிகளும், வாழும் வழிகளும், வெற்றிப் படிகளும் தானேயன்றி வியாபாரத்துக்காக அச்சிடப்படும் வெறும் வார்த்தைகள் அல்ல என்பதை அவரை அறிந்தவர்கள் அறிவார்கள்!//

முற்றிலும் உண்மை, அவரது தந்தையாரும் அப்படியே. ஒருமுறை அவரை நேரில் சந்தித்து அவரிடம் கையெழுத்து வாங்கிய நூலும் உண்டு. இளம் பருவத்தில் அவரின் பல நூல்கள் வாழ்க்கைக்கு பயனுள்ளதாக இருந்தது. அதனை இன்றளவும் நான் கடைப்பிடிக்கின்றேன் எனில் - அவரின் சுயமுன்னேற்ற நூல்கள் தான் காரணம்.

மனம் திறந்து... (மதி) said...

இக்பால் செல்வன்: வாங்க... வாங்க... ரொம்ப நாளாச்சு நீங்க இந்தப் பக்கம் எட்டிப் பார்த்து! விறு விறுவென்று ஏறும் இந்தக் கோடை வெப்பத்தில் திடீரென்று இதமான குளிர் காற்று வீசிய மாதிரி இருக்கு உங்கள் ஆத்மார்த்தமான கருத்து! நன்றி!:)))

சி.பி.செந்தில்குமார் said...

லேனா பற்றிய தகவல்கள் சுவராஸ்யமான நடையில்...

அறிவன்#11802717200764379909 said...

||பாப விமோசனம் சிறுகதை என்று யார் சொன்னது? என்ன அளவுகோல்? :)) ||

நீங்கள்தான் சொல்லுங்களேன்..!?

:))

அறிவன்#11802717200764379909 said...

||அறிவன்: மிக்க நன்றிங்க! இவ்வளவு சூடான விவாதத்தைச் சும்மா கொளுத்திப் போட்டுட்டுப் போயிருக்காரே புதுமைப் பித்தன்... பலே கில்லாடிதான் அவர் பெயருக்கேற்ப! இந்தக் கதையின் படியே நீங்களும் வேறு ஒரு பதிவரின் வலைப்பூவில் மீண்டும் அனானி ஆகப் போவது என்னவோ நிதர்சனமான உண்மை தானே! அங்கே மீண்டும் உயிர்த்தெழும் சாத்தியக் கூறுகள் எவ்வளவு என்பது அந்தப் பரமாத்மாவுக்கே வெளிச்சம்! :)))||

நான் உங்கள் பதிவைத்தான் சொன்னேன்..

:)))

மனம் திறந்து... (மதி) said...

சி.பி.செந்தில்குமார்: வாங்க, நன்றி!

மனம் திறந்து... (மதி) said...

அறிவன்: பாப விமோசனம் சிறுகதை அல்ல, கதை! :)))

//நான் உங்கள் பதிவைத்தான் சொன்னேன்..//

"கைலயங்கிரியை நாடி ஒற்றை மனித உருவம் பனிப் பாலைவனத்தின் வழியாக விரைந்து கொண்டிருந்தது. அதன் குதிகாலில் விரக்தி வைரம் பாய்ந்து கிடந்தது." ... அது கோதமன் இல்லை... நான்... நானே தான்! உங்களிடமிருந்து தப்பிக்க வேறு வழி தெரிய வில்லையே! :)))

அறிவன்#11802717200764379909 said...

||நான்... நானே தான்! உங்களிடமிருந்து தப்பிக்க வேறு வழி தெரிய வில்லையே! :)))||

வி.வி.சி...(விழுந்து விழுந்து சிரித்தேன்.)

சரி,சரி..
பொழச்சுப் போங்க..
:)
(அன்பே சிவம் மாதிரி !)

அறிவன்#11802717200764379909 said...

என்னைப் பொறுத்த வரை சாப விமோசனம் ஒரு சிறுகதைதான்..பின்வரும் காரணங்களுக்காக..
1.ஒரு சிறுகதையின் இலக்கணத்திற்கு எடுத்துக்காட்டு மாதிரி அமைந்த சிறுகதைகளில் ஒன்று இது.ஜெயகாந்தனின் அக்னிப் பிரவேசம்,சுஜாதாவின் பல கதைகள் இந்த வரையறைக்குள் எளிதாக வரும்.

2.பு.பி அதை சிறுகதை என்று சொல்லித்தான் எழுதினார்..நாம் மறுப்பது மரியாதையாக இருக்காது.

3.சுஜாதா ஒரு க.பெ.(லா அல்லது இந்தியா டுடேயின் பத்தியா என்று நினைவில்லை..)சிறுகதைக்கான இலக்கணங்கள் என்று ஒரு 10 புல்லட் பாயிண்ட்களில் ஒரு பத்தி எழுதினார்..அதுவும் எழுத ஆர்வம் இருப்பவர்கள்,எழுதிக் கொண்டிருப்பவர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய ஒரு பத்தி.

அடுத்த பதிவு எப்போ?!

மனம் திறந்து... (மதி) said...

அறிவன்: //சரி,சரி.. பொழச்சுப் போங்க.. :)//

ஸ்ஸ்ஸ்... ஹப்பாடா .... (என்) தலை தப்பிச்சது த(எ)ம்பிரான் புண்ணியம்! :)))

1. //சிறுகதையின் இலக்கணத்திற்கு எடுத்துக்காட்டு...இது.//


ஒரு பக்கக் கதையை கூட முழுதாய்ப் படிக்காமல் தலைப்பையும் முடிவையுமே படிக்கும் இந்த அவசர கதியான உலகில், இது சிறு கதையாக உணரப்படுவது அரிது என்று தான் சொன்னேன்!

2. //பு.பி அதை சிறுகதை என்று சொல்லித்தான் எழுதினார்..நாம் மறுப்பது மரியாதையாக இருக்காது.//

மற்றபடி, பு. பி அவர்களுடன் மல்லுக்கட்டி வம்பிழுக்கும் அளவிற்கு எனக்கு இன்னும் பு. பி (புத்தி பிறழ) வில்லை! இது உறுதி மட்டுமல்ல! உண்மையும் கூட! :)))

3.//எழுத ஆர்வம் இருப்பவர்கள்,எழுதிக் கொண்டிருப்பவர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய ஒரு பத்தி.//

தேடிப் பிடிக்க, படிக்க அடுத்த வீட்டு வேலை(home work ) கொடுத்திருக்கிறீர்கள் அய்யா... தவறாமல் செய்கிறேன்! நன்றி! :)))

4. //அடுத்த பதிவு எப்போ?!//

இது மிரட்டலா, வேண்டுகோளா அல்லது எச்சரிக்கையா? ஒண்ணுமே விளங்கலியே?!

கனத்த குரலில் "உடம்பு எப்படி இருக்கு?" என்று கொஞ்சம் அதட்டிக் கேட்கிற மாதிரியே இருக்கே?!

I need some time to answer this question itself... let alone acting on the import of this query/threat/warning!? :)))

♔ம.தி.சுதா♔ said...

ஃஃஃஃஃமிகப் பெரிய விஷயம் ஒன்றும் இல்லை! ஆனால் சுவையான அனுபவம் தானே, நிறையப் பேர் ஆவலோடு படிப்பார்களே என்று தான் இங்கேயே பகிர்ந்து விட்டேன்!ஃஃஃஃஃ

உண்மை தாங்க பல புது விடயத்தை ரசித்தேன்...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
அளவுக்கதிகமான பரசிட்டமோல் என்ன செய்யும்.. (Paracetamol Poisoning)

மனம் திறந்து... (மதி) said...

ம.தி.சுதா: //பல புது விடயத்தை ரசித்தேன்...//
வாங்க... நன்றி! :)

Porkodi (பொற்கொடி) said...

அட ராமா ஒரு பெர்சனல் அனுபவம் பத்தி வந்த பதிவுலே இத்தனை டிஸ்கஷனா!!!! :O இப்ப 2 நாளைக்கு முன்னே தான் விஜய் டிவியின் நம்ம வீட்டு கல்யாணத்துலே லேனாவின் அண்ணன் தன்னுடைய மகன் திருமணத்தை பத்தி பேசினார்.. அவர் பேசற ஸ்டைல் ரொம்ப பிடிச்சு போச்சு எனக்கு! லேனா தமிழ்வாணன் குரல் அடிக்கடி கேட்டதில்லை, நினைவும் இல்லை, ஆனால் அவர் அண்ணன் பேசிய விதத்தை வைத்து லேனாவும் இதே போல் தான் பேசுவார்னு ரொம்ப சுலபமா கண்டுபிடிச்சுடலாம். குரல் கூட ஒரே மாதிரி தான் தோன்றியது. (அது எப்படி லேனா குரல் சரியா தெரியாமலே கம்பேர் செஞ்சன்னு எதிர் கேள்வி கேட்க கூடாது, கேட்டுட்டு சொல்லுங்க, என்னுடைய ஊகம்/இன்ஸ்டிங்க்ட் சரியான்னு..)

மனம் திறந்து... (மதி) said...

பொற்கொடி://அட ராமா ஒரு பெர்சனல் அனுபவம் பத்தி வந்த பதிவுலே இத்தனை டிஸ்கஷனா!!!!//

வாங்க... வாங்க... ஆமாங்க! எனக்கே கூட ஆச்சரியமாகத் தான் இருக்கு! இந்த (அ)சம்பாவிதத்தை மூணு விதமா பார்க்கலாம்!
1. இட்லி மாமி பதிவு மாதிரியே ஆய்ப்போச்சு இந்தப் பதிவுன்னு சொல்லலாம் (பதிவை ஒரு காரணமா வச்சிக்கிட்டு எல்லாரும் மாமியை சகட்டு மேனிக்கு வம்புக்கு இழுப்பாங்க, இல்ல அவங்களுக்கு ஐஸ் வைப்பாங்க! பின்னூட்டத்துக்கும் பதிவுக்கும் சம்பந்தமே இல்லாமல் கூட போய்விடும், சில சமயம் ! :)))
2. அடுத்த வரியை மறந்துபோன பாகவதர் ஆலாபனையிலேயே அரை மணி நேரத்தை ஒட்டிடற மாதிரி இருக்குன்னும் சொல்லலாம்!
3. சுருக்கமா சொல்லப் போனா, அடுத்த பதிவு போடற வரைக்கும் கும்மி இங்கேதாங்கோ ! :)))

மனம் திறந்து... (மதி) said...

பொற்கொடி: //லேனாவின் அண்ணன்...பேசற ஸ்டைல் ரொம்ப பிடிச்சு போச்சு எனக்கு!... அவர் அண்ணன் பேசிய விதத்தை வைத்து லேனாவும் இதே போல் தான் பேசுவார்னு ரொம்ப சுலபமா கண்டுபிடிச்சுடலாம். குரல் கூட ஒரே மாதிரி தான் தோன்றியது. ...சொல்லுங்க, என்னுடைய ஊகம்/இன்ஸ்டிங்க்ட் சரியான்னு.//

1. இந்தப் பதிவுக்கான "Bumper Prize" அப்படீன்னு ஒண்ணு இருந்தா அதை உங்களுக்குத் தாங்க குடுக்கணும்! அவ்வளவு துல்லியமா சொல்லி இருக்கீங்க! :)))

2. அண்ணனின் குரல் கொஞ்சம் கனமாக இருக்கிறது... லேனாவின் குரல் இன்னும் கொஞ்சம் மென்மையாய், நம் நெஞ்சை வருடுவது போல இருக்கும்!

3. இருவரின் சமூகப் பார்வையும் தந்தையால் நேரடியாகவும், மறைமுகமாகவும் பண்படுத்தப் பட்டது என்பதென்னவோ பட்டவர்த்தனமான உண்மை!

4. ரவி அவர்களுடன் எனக்குப் பழக்கமே இல்லை! தந்தைக்குப் பிறகு, அவர் மணிமேகலைப் பிரசுர நிர்வாகப் பொறுப்புகளை மேற்கொண்டார் என்பது மட்டுமே எனக்குத் தெரியும்!

5. விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியை நானும் என் துணைவியாரும் பார்த்து மகிழ்ந்தோம்! தம்பியைப் போலவே அண்ணனும் எங்கள் அன்பையும் மதிப்பையும் ஒருசேரப் பெற்றார் இந்த நிகழ்ச்சி மூலமாக!

6. ஆக, பரிவிலும், பணிவன்பிலும், எளிமையிலும், தன்னடக்கத்திலும் இருவருமே ஒருவரை ஒருவர் விஞ்சி நிற்கிறார்கள்!

7. உண்மையில், இந்தப் பதிவின் நிகழ்வு நடந்தது ரவி தமிழ்வாணன் திருமணமான புதிதில் தான் ... ஒரு வாரம் கூட ஆகி இருக்காது என்றே நினைக்கிறேன்! அப்போது தான் ஊரிலிருந்து திரும்பி வந்திருந்தார்கள்! புதுமணத் தம்பதிகள் உள்ளே அவர்கள் அறையில் இருந்தார்கள்.... நாங்கள் பக்கத்து அறையில் லேனாவுடன் பேசிக் கொண்டிருந்தோம்... அவர் அண்ணன் திருமணத்தைப் பற்றியும் பேசினோம்!

8. கொஞ்சம் தயக்கத்துடன், மரியாதை காரணமாக, (ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கும் புது மாப்பிள்ளையான) தன் அண்ணனை அழைத்து எனக்கு அறிமுகமும் செய்து வைத்தார் லேனா....!

கொசு வத்தியை மீண்டும் சுத்த வச்சிட்டீங்க நீங்க! நன்றி...! :)))

அறிவன்#11802717200764379909 said...

என்னங்க நீங்களும் பதிவுகளில் இருந்து தற்காலிக ஓய்வு எடுத்துட்டீங்க போல இருக்கு..

திரும்பவும் எழுதுங்க..

♔ம.தி.சுதா♔ said...

சகோ நீண்ட காலமாக காணவில்லையே என்ன நடந்தது?

மனம் திறந்து... (மதி) said...

அறிவன், ம.தி சுதா: அன்பர்களே! உங்கள் அன்பான அழைப்புக்கு நன்றி... நான் சற்றே நீண்ட ஓய்வு எடுத்துக்கொண்டிருக்கிறேன் பதிவெழுதுவதிலிருந்து... பார்ப்போம் எவ்வளவு விரைவில் மீண்டும் எழுத முடியும் என்று... நன்றி!

Post a Comment

ஆஹா! நீங்க மனம் திறந்து பேசவேண்டிய கட்டம் வந்தாச்சு!