Friday, April 1, 2011

அஞ்சாநெஞ்சனின் அதிரடி வியூகம்! மருத்துவர், கேப்டன், சிங்கம், ஆற்காட்டார் மற்றும்...?


தற்போதைய அரசியல் சூறாவளிக்கிடையில், நிழலாய் உலாவரும் நம்முடைய பூனைப்படை தோண்டி எடுத்த திடுக்கிடும் தகவல் தான் இது! 

பலம் வாய்ந்த தமது கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு உறுதி போலத் தெரிந்தாலும், அப்பாவுக்குப் பின், தன் எதிர்காலம் கேள்விக்குறியாகவே இருப்பதால், போதுமான பாதுகாப்பும், உத்தரவாதமும்  இல்லாத உணர்வு மேலோங்கிய  அஞ்சாநெஞ்சன் இந்த முயற்சிக்கு பூஜை போட்டிருக்கிறார் என்று தகவல்! தம்பியை ஓரம்கட்ட ஒரு புது வியூகம் தயார் செய்து விட்டாராம்!

இந்த ரகசிய சமையல் சேர்ந்து சமைக்கும் மற்ற கதாநாயகர்கள் யார், யார்?

தென் தமிழ்நாட்டில் அனைத்து MLA க்களும் தனக்குக் கட்டுப்படுவார்கள், ஆனால் வடக்கே அப்படி இல்லையே என்பதால் மருத்துவரின் உதவியை நாடி இருக்கிறாராம்! ஆட்சியில் முக்கிய பங்கு தருவதாகக் கூறி அவரை உள்ளே இழுத்துப் போட்டிருக்கிறாராம்! மத்தியிலும் அதிகப் பங்கு தருவோம் என்று உறுதி அளிக்கப்பட்டதாம்! 

இதுவும் முழுப்பலனைத் தராமல் போகலாம் என்பதால், முக்கிய பதவியும், பொறுப்பும், தகுந்த சன்மானமும் தருவதாகக் கூறி ஆற்காட்டார் உதவியையும் கோரியுள்ளதாகத் தெரிகிறது! அவருடைய உதவியால் தம்பிக்கு எதிராகக் கொடி தூக்கக் கூடிய மேலும் பல MLA க்களையும் தன் பக்கம் இழுக்கலாம் என்று திட்டம். (ஆட்சியைப் பிடித்து விட்டால் அனைவரும் இந்தப் பக்கம் வந்து விடுவார்கள், அது வேறு விஷயம்...)!

கேப்டன் ஏற்கெனவே போட்டிருக்கும் திட்டப்படி, தன் கட்சி MLA க்கள் மற்றும் பெருவாரியான அம்மா கட்சி MLA க்களையும் கூட்டிக் கொண்டு வந்தால், துணை முதல்வர் பதவி தருவதாகவும், இந்தக் கூட்டணி மிகவும் பலமானதாகவும், நிலையானதாகவும் அமையும் என்று அவரை நம்ப வைத்திருப்பதாகவும் கேள்வி!  கழகத்  தொலைக்காட்சிகள்  தன்னைக் கிண்டலடிக்கும் வேளையில், இந்த தெற்கத்தி ஒத்தடம் மிகவும் இதமாகவே இருப்பதால் உச்சிகுளிர்ந்து போனாராம் கேப்டன்!

எதிர்பாராமல் தாக்கப்பட்டு, குகையில் ஒய்வு எடுக்கும் சிங்கத்துக்கும் தூது அனுப்பப் பட்டுள்ளதாம்! எதிர்பார்த்தபடி, தேர்தலில் மறைமுகமாக ஆதரவு தந்து உதவியதற்குத் தகுந்த சன்மானம் தருவோம் என்பதே அடிப்படை உடன்பாடு! தம்பிக்கு எதிராக, கழக நலன் கருதி,  அப்போதே போர்க்கொடி தூக்கியவர் அவர்தானே! அதனால், கட்சிப்  புனரமைப்பில் இவருக்கு முக்கிய பங்கும், பொறுப்பும் தரப்படுமாம்!

இவ்வளவும் போதாது என்று, தன் கட்சியிலேயே நீண்ட காலமாகக் காத்திருக்கும் ஒரு மூத்த தலைவரை முன்வைத்துக் காய் நகர்த்தினால் மக்களும், மற்ற கட்சிக்காரர்களும் கூட மனமுவந்து ஏற்றுக்கொள்வார்கள் என்று நினைக்கிறாராம் இந்த மதுரை இளவரசர்...! 

ஆனால்..., இதற்கு அந்த மூத்த தலைவர் போட்ட மிகச் சிக்கலான நிபந்தனை என்ன? அது அஞ்சாநெஞ்சருக்கே  அதிர்ச்சி தந்தது ஏன்? அடுத்த பதிவில் பார்க்கலாம், இங்கே:  அஞ்சாநெஞ்சனின் அதிரடி வியூகம்! நிறைவுப் பகுதி!

- மனம்திறந்து ...(மதி).  

பின் குறிப்பு: 
  1. தேர்தல்ல ஓட்டுப் போடறதுக்கு முன்னாடி இங்கே ஒத்திகை பாத்துக்கலாமே நீங்க! ஓட்டைப் போட்டுட்டுப் போங்க!
  2. நான் ஒண்ணும் உங்க வாழ்க்கையை மாத்தி அமைப்பேன் அப்பிடி, இப்பிடின்னு பெரிய வாக்குறுதி ஒண்ணும் குடுக்கல, அதனால ஓட்டைப் போட்டுட்டு,  பின்னாடி, ஏண்டா  போட்டமுன்னு நீங்களும் வருத்தப் படப்போறதில்லே பாருங்க! 
  3. இங்கே பகிரப்பட்ட  ரகசியத் தகவல்கள் குறித்து  மாற்றுக் கருத்து கொண்டவர்கள் யாராவது இதைப் படித்துவிட்டு மிகவும் ஆவேசப்பட்டு என்னைத் தரக்குறைவாகத் திட்ட ஆசைப்பட்டால் தயவு செய்து உங்கள் கோபத்தை இங்கே வெளிக் காட்டாதீர்கள்! உங்கள் உணர்வு நியாயமானதாக இருந்தாலும் கூட,  அதை வெளிப் படுத்தும் விதம் சரியில்லாத ஒரே காரணத்துக்காக, மற்றவர்கள் உங்களைத் தப்பாக எடைபோடும் வாய்ப்பு இருக்கிறதே! அதனால், நீங்கள் சொல்ல விரும்புவதை  எல்லாம் என் மின்னஞ்சலுக்கு அனுப்புங்களேன்: manamthirandhu@gmail.com ; தவறாமல் பதில் அளிப்பேன், இது உறுதி! 
  4. உலகமே வியந்து, அண்ணாந்து பார்க்கும் அளவுக்கு வளர்ந்து வரும் நம் நாட்டில் சிந்தனை, பேச்சு, கருத்து, எழுத்து, செயல்  இவையெல்லாம் ஆரோக்கியமாகவும், பூரண சுதந்திரத்துடனும் வளர இது ஒரு மகத்தான வழி! அதாவது, நாம் ஒருவரை ஒருவர் சகட்டு மேனிக்குத் திட்டித் தீர்க்கலாம்!  ஆனால், நம்மில் யார் செய்தது சரி, யார் செய்தது தவறு என்று நமக்கே உறுதியாகத் தெரியாத போது,  மற்றவர்கள் முன்னிலையில் தரக்குறைவாக வெட்டி மடிய வேண்டாமே!
  5. சரி...சரி...ஏதோ ஆட்டோ வர்ற மாதிரி சத்தம் கேக்குது நான் கிளம்பறேன்...! நீங்களும்  பத்திரமா  வீடுபோய்ச்  சேருங்க ! மீண்டும் சந்திப்போம், விரைவில்!

8 comments:

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

ஓட்டு பொடச.சொன்னா போடறோம்... அதுக்காக பின்குறிப்பெல்லாம்...

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

ம்..ம்.. நடத்துங்க..நடத்துங்க...

சி.பி.செந்தில்குமார் said...

அரசியல் பதிவு;ல தொடர் பதிவா? ஓக்கே.. ஓக்கே

மனம் திறந்து... (மதி) said...

வேடந்தாங்கல் - கருன்: வாங்க நண்பரே! உங்க கை ராசியான கையாச்சே! போணி பண்ணியிருக்கீங்க, நன்றி ! புதுச் சரக்கு ஓஹோன்னு, நல்லாவே விக்குமுங்கோ!

மனம் திறந்து... (மதி) said...

சி.பி.செந்தில்குமார்: வாங்க, தொடர் கதை எழுதும் ஆசையோ, எண்ணமோ கொஞ்சம் கூட இல்லீங்க! அதுக்கான நேரமும், திறமையும், பொறுமையும் கூட சுத்தமா இல்லீங்க! அதெல்லாம் எழுத்தாளர்களுடைய வேலையாச்சே! நம்ம அந்தப் பக்கம் போகலாமா? இது என்னவோ இன்று, இப்படி அமைஞ்சு போச்சு, அவ்வளவு தாங்க!

மனம் திறந்து... (மதி) said...

நெறையப் பேர் வர்றாங்க! இது வரைக்கும் 175 பேரு வந்துட்டுப் போய்ட்டாங்க!ஆனா ஓட்டே போட மாட்டேங்கறாங்களே என்ன பண்றது? 2, 3, 3 ன்னு மூணு பக்கமா, நிஜத் தேர்தல் மாதிரியே ஒட்டு பிரிஞ்சி போச்சே! நான் என்னத்த இலவசமாக் குடுக்கறது...? எப்பிடி...? ஒண்ணும் வெளங்கலியே ...?! யாராவது ஐடியா குடுங்கப்பா!!!

Vasagan said...

Mathi

ஒட்டு போட்டாச்சு.

மனம் திறந்து... (மதி) said...

Vasagan: வாங்க, வருகைக்கு நன்றி!கணக்கிலே வரவு வச்சாச்சு!

Post a Comment

ஆஹா! நீங்க மனம் திறந்து பேசவேண்டிய கட்டம் வந்தாச்சு!