Sunday, January 27, 2013

நம்மை உலுக்கி எழுப்பும் உலகநாயகனின் விஸ்வரூபம்!


நூறாண்டு கண்ட வெள்ளித்திரையில் விஸ்வரூபம் எடுத்து தமிழ்த் திரையுலகம் தொழில்நுட்பத்தில் சதம் அடித்து விட்டது என்றே சொல்லலாம்! நிலவில் காலடி வைத்த Neil Armstrong பாணியில் சொல்வதானால்: This is one small step for Kamal, one giant leap for Tamil Cinema.


ஒரு ஆங்கிலப் படம் போன்ற ஆரவாரமில்லாத ஆரம்பக் காட்சிகள். கதக் நாட்டியக் காட்சிகள் கமல் எனும் மகா கலைஞனின் மேல் நமக்குள்ள காதலுக்கு வலுவூட்டி நம்மைக் காற்றில் மிதக்க வைக்கின்றன, பரவசத்தில். குரல், பேச்சு, நடை, உடை, பாவனை, நளினம் எல்லாம் ஒரு சேர நம்மை அசத்துகிறார் கமல். இங்கே ஆண்ட்ரியாவும்  நம்மைக் கவர்கிறார்!


அடுத்த அரை மணிக்குள்ளாகவே, கமலின் இரண்டாவது முகம் வெளிப்படும்  CLIMAX க்கு நிகரான காட்சியில் விமானம்...மன்னிக்கவும், படம் take-off ஆகிறது. அரங்கமே அதிர்கிறது இந்தக் காட்சியில்... பல ஆண்டுகளுக்குப் பிறகு நான் என்னை மறந்து கை தட்டினேன், திரை அரங்கில்!

ராகுல் போஸ் அதிரடியாக அறிமுகம் ஆகிறார். படம் முழுவதும் அசத்துகிறார் தம் அமைதியான வில்லன் தாண்டவத்தில். இந்தத் தாலிபான் தளபதி, அமெரிக்க உளவுத்துறை இணையத்தையும், அதிரகசிய ஆவணங்களையும் அனாயாசமாகப் பயன்படுத்துகிறார், தன் கணினி மூலமாகவே!

பின்பு, கமல் தன் மூன்றாவது முகத்தைக் காட்டிப் படிகளில் இறங்கி வரும் போது மயங்கி விழுவது கதாநாயகி பூஜா மட்டுமில்லை, ஒட்டு மொத்த அரங்கமே தான்... ஆண்கள் உள்பட.

ஆப்கானிஸ்தான் காட்சிகள் அசத்துகின்றன. அல் கொய்தாவை ஊடுருவி, அவர்கள்  பயிற்சியில் பங்கு பெற்று, தாலிபன் தரப்பிலான வாதங்களையும், அவர்களின் அப்பட்டமான, அளவு கடந்த வன்முறை கலந்த ஏற்பாடுகளையும், தீர்ப்பாடுகளையும்  அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பு கலாச்சாரத்தையும் தத்ரூபமாக  நம்   கண்முன்னே படைக்கிறார் இயக்குனர். ஒளிப்பதிவாளரும், கலை இயக்குனரும் மிகவும் மெனக்கெட்டு இயக்குனரின் கனவை நனவாக்கியுள்ளனர் இந்தக் காட்சிகளில்.

நமக்கெல்லாம் புறா என்றாலே போர்நிறுத்தம் தானே நினைவுக்கு வரும்! தாலிபான்களுக்கும் அப்படித்தான், ஆனால் வழக்கம் போல் தலைகீழாக!

படம் முடியும் போது நான் நிறைவேற்றிய தீர்மானம்: வீட்டில் பரண்மேல் இருக்கும்  Periodic Table ஐ எடுத்து, தூசு தட்டிப் படிக்க வேண்டும்..  அடுத்து வரப்போகும் கமல் படங்களை எளிதில் புரிந்து கொள்ளவும், நன்கு ரசிக்கவும் பெரிதும் உதவியாக இருக்கும். ஏனென்றால், தசாவதாரத்தில் வில்லனின் கொடூர வைரஸ் வீச்சிலிருந்து உலகமே தப்ப உதவிய ஆயுதம் NaCl (Sodium Chloride), விஸ்வரூபத்தில்  வில்லனால் கையாளப்படுவது Cs (Caesium).


கமலின் வழக்கமான  குறும்புகளும், "அக்மார்க்"  நகைச்சுவையும் படத்தின் முதல் பாதியில் ஆங்காங்கே மிளிர்கின்றன.


பூஜா குமார் (கமலின் மனைவியாக) ரொம்பவே தெளிவான, தன்னலம் மிக்க, கணவனை ஒரு  (அடையாளச்) "சாவி"யாகவும், (அமெரிக்க) "விசா"வாகவும் மட்டுமே பார்க்கும், பாரதி கண்ட புதுமைப் பெண்ணின் விபரீத விஸ்வரூபமாக வலம் வருகிறார். ஒரு "நீயா நானா" நிகழ்ச்சியில் மாதம் ரூ.50000/- pocket money கேட்ட கல்லூரி மாணவியை நமக்கு நினைவூட்டுகிறார்.

என்னைக் கேட்டால், விஸ்வரூபம் சமீபத்தில் வெளியான James Bond படத்தைத் தூக்கிச் சாப்பிட்டு விட்டது  என்றே சொல்லுவேன். அதற்கு ஆதாரமாக,  பட முடிவில், கமல்  James Bond போலவே  பூஜா குமாருடன் படுக்கையில் காட்சி தருகிறார்.

முத்தாய்ப்பாக: கமல் ரசிகர்களுக்குப்  பொங்கலும் தீபாவளியும் ஒன்றாய்ச் சேர்ந்த மாபெரும் அதிசயப் பண்டிகை விஸ்வரூபம்!

- மனம் திறந்து... (மதி).


பின் குறிப்பு:

1. இப்பதிவின் தார்மீகத் தலைப்பு, தமிழகத்தில் படம் வெளியிடப்படும் முன் (சனவரி 27 அன்று) வைத்தது -  "விஸ்வரூபம்: வெந்த புண்ணில் வேல்...?" : இந்த அரிய படத்தைப் பார்க்க முடியாமல் கோடானு கோடி திரைப்பட ரசிகர்கள்  தமிழ்நாட்டில்  தவிக்கும்  போது, நான் மட்டும் முதல் நாள் முதல் காட்சியே  இங்கே ஹைதராபாத்தில் பார்த்ததோடு மட்டுமின்றி அதைப் பற்றி இவ்வளவு சிலாகித்து அசை போடுவது, எழுதுவது.

2. இப்பதிவு, விஸ்வரூபம் படத்தின் ஒரு முழுமையான அல்லது திறமையான  விமர்சனம் அல்ல. மிகச் சிறந்த, வழக்கம் போல் சர்சைக்குள்ளான,  ஒரு கமல் திரைப்படத்தைப் பார்த்த சாதாரண ரசிகனின்  மன  உணர்வுகளின் பகிர்வு. அவ்வளவே!

Tuesday, April 19, 2011

லேனா தமிழ்வாணன் காரணமில்லாமலே கோபித்துக் கொண்டாரே... ஏன்? எதற்காக?


ஒரு ஞாயிறு பிற்பகல், வழக்கம் போல், அண்ணா நகர் சாந்தி காலனியில் உள்ள என் நண்பன் அரவிந்தனின் வீட்டில் பேசிக் கொண்டிருந்த போது, அவர் திடீரென்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார் பாருங்கள்:   "லேனாவுக்கு உன்மேல் கோபம்" என்று,  ரொம்பவும் கூலாக! கேட்ட நானோ அதிர்ந்து போனேன்! ஏன்? எதற்காக? எப்படி? எப்போது நடந்தது இது? என்று ஆயிரம் கேள்விகள் என் மண்டைக்குள் சுற்றிச் சுற்றி சூறாவளியாய்  உருவெடுத்தன, சுனாமி போலவே தலைமுடி வேர்களில் வந்து மோதித் தாக்கின! தலையே வெடித்து விடும் போலிருந்தது எனக்கு!

"நீ என்னவோ அவரிடமிருந்து விலகிச் செல்கிறாயாமே, அவரைக் கண்டு கொள்வதில்லையாமே?" இது தான் அவர் கோபத்துக்குக் காரணம் என்றார் என் நண்பர். மேற்கொண்டு துருவிக் கேட்டதற்கு, இவ்வளவு தான் எனக்குத் தெரியும் இதற்குமேல் என்னைக் குடையாதே என்று அலுத்துக் கொண்டார் நண்பர். என்னடா இது நிலைமை இவ்வளவு மோசமாகி விட்டதே என்று நொந்து போன நான், சரி கிளம்பு, ஒரு எட்டு போய் அவரைப் பாத்துப்  பேசிட்டு வந்திடலாம்னு சொன்னேன்! நண்பனின் வீட்டில் இருந்து கூப்பிடு தூரத்தில் தான் லேனாவின் வீடு. உடனே கிளம்பினோம்!

நல்ல காலம், நாங்கள் போன போது அவர் வீட்டில் இருந்தார்! அப்பாடா...என்று நானும் என் மனதைத் தேற்றிக் கொண்டேன்! விவரிக்க முடியாத ஒரு ஆச்சரியம் அவர் முகத்தில் தெரிந்தது! அப்போது, அங்கே எங்களை அவர் நிச்சயம் எதிர் பார்க்கவில்லை! ஆனாலும், அவருக்கே உரிய வாஞ்சையான,  இன்முகத்துடன் எங்களை வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றார் லேனா! 

முறையான முதல் அடுக்குப் பரிமாற்றங்கள் நடந்தேறின! குசல விசாரிப்புகள், நண்பர் நலன்கள் சினிமாப் பட டைட்டில்ஸ் மாதிரி ஓடி ஓய்ந்தன! அடர்த்தியான, அருமையான, சுவை நிரம்பிய பழச்சாறு மூன்று தடித்த கண்ணாடி தம்ளர்களில் வந்து இறங்கியது முக்காலியின் மேல் எங்களுக்காக! 

நான் வீடு தேடி வந்ததையே மிகவும் ஆச்சரியமாகப் பார்த்தும், நினைத்தும் கொண்டிருக்கும் லேனாவிடம் மெதுவாகப் பேச்சை ஆரம்பித்தேன், பழச் சாற்றைப் பதம் பார்த்துக் கொண்டே! எதோ என்மேல் கோபமாக இருக்கிறீர்களாமே, அரவிந்தன் இன்று தான் சொன்னார் என்றேன், நண்பனைக் காட்டி. அடடே, அது ஒண்ணும் இல்லைங்க என்று முதலில் மழுப்பினார், லேனா. 

நான் விடாமல் வற்புறுத்தியதின் பேரில் தொடர்ந்து பேசினார்: அது ஒண்ணும் பெரிசா இல்லீங்க....போன வாரம், கல்லூரியில் உங்களைப் பார்த்துக் கை அசைத்தேன், சிரித்தேன், நீங்கள் கண்டு கொள்ளாமலே போய்விட்டீர்கள், அது எனக்கு மிகவும் வருத்தத்தைத் தந்தது, என்றார்! மேலும் சற்று விவரங்கள் கேட்டறிந்த பிறகு நான் என் நிலையை விளக்கினேன்: நான் உங்களை உண்மையிலேயே கவனிக்கவில்லை! வேறு நண்பர்களோடு பேசிக் கொண்டு போனதில் உங்களைப் பார்க்காமலேயே சென்று விட்டிருக்கிறேன்! இது தான் உண்மை! இல்லா விட்டால் உங்களை நான் அலட்சியம் செய்ய வேண்டிய காரண காரியம் எதுவுமே இல்லையே, என்னை நம்புங்கள் நண்பரே என்றேன்! நானும் அப்படித்தான் நினைத்தேன், ஆனாலும் என்னவோ,  நீங்கள்  என்னிடமிருந்து விலகிப் போக விரும்பியதாக உணர்ந்து கவலைப் பட்டேன், ஆதாரமில்லாமல், என்றார் லேனா. 

உண்மையைப் புரிந்து கொண்ட பின் அவர் தூக்கிப் போட்டது தான் மிகப் பெரிய குண்டு! நான் ஏதோ அரவிந்தனிடம் இப்படிச் சொன்னதை நீங்கள் இவ்வளவு சீரியசாக எடுத்துக் கொண்டு, என் வீடு தேடி வந்து நிலைமையை விளக்கி நட்பை நிலை நாட்டுவீர்கள் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை...நீங்கள் உண்மையிலேயே மிக உயர்ந்த மனிதர் தான்....  A True Gentleman! என்றாரே பார்க்கலாம்! எனக்கோ கையும் ஓட வில்லை, காலும் ஓடவில்லை! நண்பரே, ஏன் இதை இவ்வளவு பெரிசு படுத்துகிறீர் என்று அவரைச் செல்லமாய்க் கடிந்து கொண்டு, மேலும் கொஞ்ச நேரம் அளவளாவி மகிழ்ந்து பின் லேனாவிடமிருந்து பிரியா விடை பெற்றோம், நானும் அரவிந்தனும்! 

இது நடந்தது:  நாங்கள் பச்சையப்பன் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது,  எழுபதுகளில்! அவர் தமிழ் இலக்கியமும், நான் ஆங்கில இலக்கியமும் படித்துக் கொண்டிருந்த காலம்!  பசுமையான, நெஞ்சை விட்டு நீங்காத இனிய நினைவுகள், என் பிரிய வாசகர் ஒருவர் உபயத்தில் இன்று மேலே வந்தன  நீர்க்குமிழிகள்  போல!

லேனா இன்று எழுதுவது எல்லாம் இவ்வாறு வாழ்ந்தும்,  உணர்ந்தும், சுவைத்தும், தெளிந்தும் பதப்படுத்தப்பட்ட வாழ்க்கை நெறிகளும், வாழும் வழிகளும்,  வெற்றிப் படிகளும் தானேயன்றி  வியாபாரத்துக்காக அச்சிடப்படும் வெறும் வார்த்தைகள் அல்ல என்பதை  அவரை அறிந்தவர்கள் அறிவார்கள்!

Lena is a True Gentleman to the Core in every sense of the term!

- மனம் திறந்து... (மதி). 

இலவச  இணைப்பு:

  1. என் வாசக நண்பர் ஒருவர், மின்னஞ்சல் மூலம் எதேச்சையாகப் பேசிக்கொண்டிருக்கும் போது, லேனாவை ஒரு நிகழ்ச்சியில் பேச அழைக்கப் போவதாகச் சொன்னார். அவருக்கு எழுதிய பதிலாக ஆரம்பித்தது தான் இந்தப் பதிவு. 
  2. மிகப் பெரிய விஷயம் ஒன்றும் இல்லை! ஆனால் சுவையான அனுபவம் தானே, நிறையப் பேர் ஆவலோடு படிப்பார்களே என்று தான் இங்கேயே பகிர்ந்து விட்டேன்!
  3. தான் தமிழ்வாணன் மகன் என்பதை மறந்தும், மறைத்தும், லக்ஷ்மணன் ஆகவே எங்களுடன் இயல்பாகப் பழகினார் லேனா என்பதே இப்பதிவின் அடிநாதம்! வேறு எந்த விதமான உள்நோக்கமும் இல்லை, இல்லை, இல்லவே இல்லை!
  4. ஒரு  சிறிய முடிச்சை வைத்து ஒரு சுவையான பதிவை(?!) எழுதுவது எப்படி என்று நான் கற்றுக் கொள்ள உறுதுணையான முயற்சி  என்று வேண்டுமானால் சொல்லலாம்!
  5. பொதுவான செய்தி: வாழ்க்கையில் உயர்பவர்கள் பெரும்பாலும் திடீரென்று முளைப்பதில்லை! ஒரு நீண்ட நெடும் பயணத்தில், தங்களைத் தயார் செய்து கொண்டு, பலவாறான இடர்களையும், பரிசோதனைகளையும், தனிமனித வாழ்வின் சுக, துக்கங்களையும் கடந்து, பல்வேறு நிலைகளிலும், வகைகளிலும்  சமுதாயம் இவர்களைப் பதம் பார்த்துப் பரீட்சை செய்த பிறகு, இவர்கள் நமக்குத் தேவையானவர்கள் என்று உணர்ந்து,  தட்டிக் கொடுத்துத் தளமும், தடமும் அமைத்துக் கொடுக்கும் வரையிலும் பொறுத்திருந்து,   தம் தேடலை அணையா விளக்காக அடைகாத்து,  உயிரூட்டி வளர்ப்பதால் மட்டுமே இது சாத்தியமாகிறது என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை!
  6.  Lena's Photo, courtesy: http://www.tamilvanan.com/

Monday, April 4, 2011

"தோனி ஒரு முட்டாள்!" ஆங்கிலேயரின் அடாவடிப் பேச்சு!


பதினோரு முட்டாள்கள் விளையாடுவதை பதினோராயிரம் முட்டாள்கள் உட்கார்ந்து பார்ப்பதுதான் கிரிக்கெட்டு என்று இவர்தான்  மிகக் கேவலமாகச் சொன்னாராம்!

கொளுத்தற வெயில்ல
மேட்ச் பாக்கறது
இவ்ளோ கஷ்டமா
இருக்கேங்கிற கோவத்திலதான்
இப்படிப் பொசுக்குன்னு
சொல்லிப்புட்டீங்களோ?!  
 
என்ன தைரியம் இவருக்கு? இவரைச் சும்மா விடலாமா? கொஞ்சம் குறுக்கு விசாரணை செய்யலாம் வாங்க!

பெரியவரே!
நீங்கள் சொன்னது உண்மையென்றால், இறுதிப் போட்டியில், கோப்பைக்காக ஆடிய இரண்டு அணிகளில், அதிக முட்டாள்கள் இருந்த அணிதானே வெற்றி பெற்றிருக்க வேண்டும்? அப்படியா நடந்தது?!

குறைந்த பட்சம், 
போட்டியிட்ட இரண்டு அணித்தலைவர்களில் யார் பெரிய,  வடிகட்டின முட்டாளோ, அவரது அணியாவது வெற்றி பெற்றிருக்க வேண்டும்? அப்படியா நடந்தது?

எழுந்து நடக்கும்
குழந்தை முதல் எழுந்திருக்கக்கூட முடியாத முதியவர் வரை,   நூற்றுப் பத்து கோடிக்கும் மேற்பட்ட இந்தியர்கள் சனிக்கிழமை இரண்டு மணிக்கு மேல் உலகத்தையே மறந்து, உலகக் கோப்பையை மட்டுமே பார்த்தார்களே,  அவர்கள் அனைவருமே முட்டாள்களா?

செல்வாக்கு
மிக்க, செல்வத்தலைநகராம், பரபரப்பான, தூங்காமாநகர்  மும்பைக்கு அரசு விடுமுறையே அறிவித்தார்களே,  அவர்கள் முட்டாள்களா?

தலைபோகிற வேலையெல்லாம்
கூட அப்புறம் பாத்துக்கலாம் என்று ஒத்திப் போட்டுவிட்டு, நம்பளை ஆளை வச்சு அடிக்கிற பாகிஸ்தான் பிரதமரையே அன்போடு அழைத்துப் பக்கத்தில் வைத்துக் கொண்டு ஆனந்தமாய் அரையிறுதி ஆட்டத்தைப் பார்த்தாரே மன்மோகன் சிங்,  அவர்
கடவுள்... பிரசாதம்... பக்தன்!
22 வருட வேண்டுதல் ...இல்லீங்களா?      
என்ன முட்டாளா?  {2G ஊழல் விஷயத்திலே வேணும்னா அவர் கொஞ்சம் அப்படித்தான்னு  நினைக்கறதிலே தப்பே இல்லைன்னு கூட சொல்லலாம்:( }!

சினிமாவுக்கு வருபவர்களிடம், கிரிக்கெட்டைக் காண்பிப்போம் என்று சொல்லி அடிவாங்காமல், அமோக ஆதரவு பெற்றார்களே அந்தத் திரையரங்கு முதலாளிகள், அவர்கள் முட்டாள்களா?

பரிவே
உருவாகி, சற்றும் சளைக்காமல், சமையலறைக்கும் நடுக்கூடத்துக்குமாய் (ஹால்) நடந்து நடந்து மோர், தேநீர், குளிர் பானங்கள், நொறுக்குத் தீனி, காப்பி, பஜ்ஜி, பல்சுவை உணவு என்று தன் வீட்டாருக்கும், கூடிக் கொண்டாட வந்த நண்பர் கூட்டத்துக்கும் கொடுத்த வண்ணமே இருந்தார்களே அன்புத் தாய்மார்கள், அவர்கள் முட்டாள்களா?

ஒட்டு மொத்த இந்தியாவே, அந்தப் பதினோரு பேருக்காக - சாதி, இன, மத, மொழி மற்றும் பல்வேறு பிரிவினைப் பிசாசுகளை ஓர் அறையில் அடைத்து வைத்துவிட்டு   - ஒரே ஜீவனாய்,
தோனி உயர்த்தியது இந்தக் கடைசிப்  பந்தை மட்டுமா?
இல்லை,  இல்லை...  நம் நாட்டையே தானே!
 இந்தியனாய் மண்டியிட்டுப் பிரார்த்தனை செய்ததே, அது மகா முட்டாள்தனமா?

கோடானுகோடி மக்கள்,
தன் ஒவ்வொரு அசைவையும், நினைப்பையும், முடிவையும், தீர்மானத்தையும் பெரிய பூதக்கண்ணாடியைக் கையிலெடுத்துக் கொண்டு அணு அணுவாகத் தோண்டித் துருவிப் பார்த்துக் கொண்டிருக்கிறார்களே என்ற பயம் கொஞ்சமும் வெளியில் தெரியாதவாறு, இத்தனை வீரத்துடனும், விவேகத்துடனும் தன் குழுவை வழி நடத்தி வெற்றியும் பெற்ற, தோனியா முட்டாள்?

தலைமைப்
பொறுப்பில் இருக்கும் போது, தான் என்ன செய்ய வேண்டும் என்று மற்ற எல்லோரும் எதிர்பார்க்கிறார்களோ அதையே செய்தால், தோல்வியே அடைந்தாலும் கூட அடிவிழாமல் தப்பிக்கலாம் என்று கோழைபோல் சிந்திக்காமல்; எந்த நேரத்தில் எப்படிச் செயல் பட வேண்டும் என்று தீவிரமாக ஆராய்ந்து, முறையான கலந்தாலோசனையும் செய்தபின், முடிவெடுத்து நிறைவேற்றி, முன்னேறி,  "செய் அல்லது செத்து மடி" என்று தனக்குள்ளேயே வீர முழக்கமிட்டு, தன் முறை வரும் முன்பே களத்தில் இறங்கி மிக நிதானமாகவும், படுசாதுர்யமாகவும் போரிட்டு, வெற்றி குவித்துக் கோப்பை கொணர்ந்த,  உலகம் போற்றும் உன்னதத் தலைவன், தோனி முட்டாளா?

கோப்பையைக்
 கொண்டுவந்து குழுவினரிடம் கொடுத்துவிட்டு, கொண்டாடுங்கள் தோழர்களே, இது உங்களால்தான் சாத்தியமானது என்று சொல்லாமல் சொல்லி, விலகி நின்று வேடிக்கை பார்த்தாரே, எங்கள்  தோனி,  இவரா முட்டாள்?

இதையெல்லாம் விட்டுத் தள்ளுங்கள்! கல்லூரிப் படிப்பையே கூட முடிக்க முடியாமல் போன  இந்தக் காவியத் தலைவன், உலகப்  பிரசித்தி  பெற்ற மேலாண்மை, வியாபார  மேற்படிப்புக்  கல்லூரிகள்  மற்றும் பல்கலைக்  கழகங்களில் பணியாற்றும், ஆளுமைத்துறையில் 
உலக நாயகனான நம் நாட்டு நாயகன்!
அனைத்தையும் கரைத்துக் குடித்த, பேராசிரியர்களுக்கே கூட,  தலைமை  என்றால்  என்ன? தலைவன் எப்படி இருக்க  வேண்டும்? முதலில் அவன் எப்படித் தன்னையே தயார் செய்து கொள்ள வேண்டும்? மற்றவர்களிடம் எப்படி நடந்து  கொள்ள  வேண்டும்?  பல  மனிதர்கள் அடங்கிய ஒரு குழுவை, ஒரே பார்வையும்,  குறிக்கோளும், அணுகுமுறையும் கொண்ட  தனிமனிதன்  போலவே  மாற்றியமைக்கும் மந்திரவாதியாவது எப்படி? பலவிதமான ஆசைகளையும், பயங்களையும், தவிப்புகளையும், எதிர்பார்ப்புகளையும் வைத்துக் கொண்டு வளரத் துடிக்கும் தன் குழுவினரைக் கட்டுக் கோப்பாக வைத்திருப்பது எப்படி? அவர்களை உரசலில்லாமல், குதறித் தள்ளாமல் வெற்றியை  நோக்கி  வழி நடத்திச்  செல்வது  எப்படி?  என்றெல்லாம் உலகளாவிய, திறந்தவெளிப் பல்கலைக் கழகத்தில் நேருக்கு நேர் (Live) விரிவுரையாற்றிப் புரிய வைத்திருக்கிறாரே இன்று, இந்த உலக நாயகன் தோனியைப் பார்த்து, முட்டாளென்று சொல்ல மனமோ, தைரியமோ வருமா உங்களுக்கு?
I Support Jan Lok Pal Bill

சொல்லுங்கள் பேரறிஞர் பெர்னார்ட் ஷா அவர்களே! சொல்லுங்கள்! அடடே, அவர் நம்முன் தோன்றி பதில் சொல்ல மாட்டாரோ  ...! அப்படியானால்,  அவர் சொன்னது சரிதான் என்று மனப்பூர்வமாக நம்பி, இன்றும் கூட அவருக்காக வாதாடத் தயார் என்று சொல்லி முன்வரக்கூடிய, அறிஞர் பெருமக்கள் யாராவது இருந்தால், அவர்களாவது அன்பு கூர்ந்து பதில் சொல்வார்களா!

- மனம்திறந்து ...(மதி).

பின் குறிப்பு:
  1. எது எப்படி இருந்தாலும், ஏப்ரல் மாத ஆரம்பத்திலே முட்டாள்களைக் கொண்டாடுவதிலோ, அவர்களைப் பற்றிப் பேசுவதிலோ அல்லது நமக்கே தெரியாமல் நம்முள் புதைந்து கிடக்கும் முட்டாள்தனங்களைச் சுய பரிசீலனை செய்யத் தூண்டுவதிலோ தப்பே இல்லீங்களே!
  2. கொஞ்சம் கூட முட்டாள்தனமே இல்லாத மனித வாழ்க்கை நிஜமானதாகவோ,முழுமை பெற்றதாகவோ அல்லது சுவை நிறைந்ததாகவோ அமைந்ததாக   சரித்திரமே இல்லீங்கோ! ஹையா....ரொம்பவே சந்தோஷப் படறீங்க போல... இதுக்குத்தானே இங்கே வாங்க, வாங்கன்னு கூரைமேலேறிக் கூவிக் கூப்பிட்டேன்! ஆனா நீங்க என்னவோ ரொம்ப யோசனை பண்ணிட்டு மெதுவாத்தானே வந்தீங்க, அதுக்கு நான் என்ன பண்றது? :))) சரி, இனிமேலாவது நம்ம பதிவின் சுட்டியை எங்கே பார்த்தாலும் உடனே சொடுக்கிட்டு,  ஓடி வந்துடுங்க... நம்ம கடைக்கு! 
  3. அறிஞர் பெருமக்களுக்கு நான் விடுத்த சவாலான வேண்டுகோளைத் தன்னை அறியாமலே ஏற்றுக்கொண்டு, ஒரு உதவிப் பேராசிரியர் அவர் தரப்பு வாதங்களை அழுத்தம் திருத்தமாக முன்வைத்திருக்கிறார்.  இதில் ஆச்சரியம் என்னவென்றால், அவருக்குத்  தமிழ் தெரியாது!  அவர் என்னுடைய வாதங்களைப் படித்திருக்க வாய்ப்பில்லை! ஆனாலும், நன்றாகவே  வாதாடி இருக்கிறார், இதோ, ஆங்கிலத்தில்: Cricket unites, but is there no world beyond?
  4. இந்தப்  பதிவு  எழுதி  சரியாக மூன்று வாரம் கூட முடியவில்லை.  ஆனால் இதற்குள்ளாகவே, என்னுடைய கருத்தை அமோகமாக ஆதரித்துள்ள  உலகப் புகழ் பெற்ற அமெரிக்கப் பத்திரிகையான TIME, மிகவும் உணர்ச்சி வசப்பட்டு, இன்னும் ஒருபடி மேலே போய்,  "அமெரிக்க அதிபர் ஒபாமாவைக் காட்டிலும்  தோனி செல்வாக்கு மிக்கவர்(சக்தி வாய்ந்தவர்)!"  என்று உலகின் கூரை மேல் ஏறி உரக்கச் சொல்லி இருக்கிறது பாருங்களேன், இதோ: Dhoni more influential than Obama: Time magazine. இதற்கு மேல் என்ன அங்கீகாரம் வேண்டும் இந்தப் பதிவுக்கு...? இல்லை... எனக்கு? இல்லை...இல்லை... இந்தியர்களாகிய நமக்கு?!
  5. Images Courtesy:- World Cup: http://www.espncricinfo.com Bernard Shaw: http://lib-1.lse.ac.uk/archivesblog/?p=82