Monday, March 28, 2011

நன்றாக வாழ வேண்டுமா? சரியாகச் சாப்பிடாதீர்கள்!

என்னங்க இது, தலைகீழாப் பேசறீங்களே, நேத்து வரைக்கும் நல்லாத்தானே இருந்தீங்கன்னு தானே கேக்கறீங்க! ஆமாங்க, இது ஒரு வித்தியாசமான சிந்தனை தாங்க! (அப்படி சிந்திச்சா தானேங்க "தரமான பதிவு" எழுத முடியும்? பின்னூட்டத்துக்கு  சூசகமா ஒரு "குறிப்பு" குடுத்துட்டேன்! எவ்வளவு தூரம் "வொர்க் அவுட்" ஆவுதுன்னு பாப்போமே :)) ) சரி, மொக்கை போதும்...  விஷயத்துக்கு வருவோம்! 

"சாப்பாடு கசக்குதே!"  என்று சொன்னதால்  அந்தக் காலத்தில்  குருகுலத்தை விட்டே  வெளியேற்றப்பட்ட  மாணவனின்  கதை உங்களுக்குத் தெரியுமல்லவா?! (தெரியாதவர்கள் கேட்டுத் தெரிந்து கொள்ளவும்!...என்னது? என்னோட மனைவியின் சமையலைப் பற்றி நானே குறை சொல்லாதபோது இவன் யார் சொல்வதற்கு என்ற கோபத்தில் தான் குரு அவனை விரட்டி அடித்தாரா...? அட...இந்தக் கோணம் கொஞ்சம் புதுசாத்தாங்க இருக்கு! ). இன்றைய கால கட்டத்தில், இதே நிபந்தனை இருந்தால், ஒரு பய கூட ஹாஸ்டல்லே தங்கிப் படிக்க முடியாதுங்களே! நல்ல வேளை, தப்பிச்சாங்க, பசங்க!

இன்று வரை, நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்று கூடத் தெரியாமல் சாப்பிட்டது,  சரியாகச் சாப்பிடாமலே  எழுந்து போனது அல்லது சாப்பாட்டையே    சுத்தமாக  மறந்து  போனது  எப்போது? எதற்காக? (கொசுவத்தி சுழலத் தொடங்கிவிட்டது...)

  • எல்லாம் ஒத்துப் போகிற இந்த வரனாவது, கடைசி நேரத்தில் எந்த வில்லங்கமும் வராமல், செட்டாகி, நம் பெண்ணின் திருமணம் நடந்தேறுமா என்ற ஆதங்கத்தை,  ஏக்கமிகு எதிர்பார்ப்பை  சற்று முன் வந்த கனிவான தொலைபேசி அழைப்பு  சற்றே தணித்து, மனதில் கொஞ்சம் பால் வார்த்து பசியைப் போக்கிவிட்டதே, அப்போதா?
  • பையனுக்கு Campus Placement மூலம் அகில உலகப் புகழ் பெற்ற (ஆனால் உள்ளே என்னவோ ஆண்டாள் பாடசாலை மாதிரியே இயங்கும்) நம்நாட்டு   top tier IT கம்பெனியில் வேலை கிடைத்து விட்டது அறிந்து, இரவு முழுவதும் தூங்காமல், மறுநாள் காலை 6 மணி முதல் மாலை 8 மணி வரை, வருவோர் போவோர்க்கெல்லாம் சொல்லி மகிழ்ந்து, லட்டை வாரிக் கையில் திணித்து, நீங்கள் என்னவோ பச்சைத் தண்ணிகூட வாயில் படாமல் கார்யசித்தி விரதம் இருந்து, உடலும் மனமும் லேசாகி, நிஜமாகவே காற்றில் (50000 அடி உயரத்தில்) பறப்பது போல் உணர்ந்து, துவண்டுபோய், ஏதாவது குடும்மா என்று ஈனஸ்வரத்தில் முனகிக்கொண்டு,  உங்கள் மனைவியின் தோளில் வந்து சரிந்தீர்களே... இரவு 9 மணிக்கு,  அப்போதா?
  • அலுவலகப் பிரச்சினையை மனதில் போட்டு உழப்பிக்கொண்டு, எப்படி மேலதிகாரியை இன்று சமாளிப்பது என்று குழம்பிப்போய் இரண்டாவது இட்லியைப் பாதி தின்றுவிட்டுத் தட்டிலேயே  (மீதமுள்ள  இரண்டரை இட்லிமேல்) கைகழுவியபோது, நிஜமாகவே பயந்துபோன உங்கள் மனைவி உங்களைப் பார்த்து மிரண்டு நின்றாரே,  அப்போதா?
  • பையனுக்குப் பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்து விட்டது...ஆனால் கட்ட வேண்டிய பணத்துக்கு இன்னும் வழி பிறக்கவில்லையே என்று இரண்டு நாள் பசியும், உறக்கமும் இன்றித் தவித்தீர்களே..., அப்போதா?
  • காதலி காத்துக் கொண்டிருப்பாள், ஏற்கெனவே நேரம் கடந்து விட்டது என்று  அம்மாவிடம் சொல்ல முடியாமல், அரைகுறையாய்ச் சாப்பிட்டு, அலறி அடித்துக் கொண்டு  ஓடினீர்களே,  அப்போதா?
  • உங்களுக்குப் பிடித்த கல்லூரியில் நீங்கள் விரும்பியபடியே ECE  கிடைத்த பேரானந்தத்தில் சாப்பிடாமலேகூட, கொஞ்சம் பயமும், நிறைய  சந்தோஷமும் மனதில் சுமந்துகொண்டு  முதல்நாள் கல்லூரிக்குப் பறந்து சென்றீர்களே, அப்போதா?
  • ஒருபிடி தயிர் சாதமும், அரை டம்ளர் மோரும் போதும் என்று சொல்லிப் புறந்தள்ளிவிட்டு, உலகத்தையே உங்கள் தலைமேல்  சுமப்பது போன்ற ஒரு கனமான உணர்வுடன், அது கருங்கல்லா, பிள்ளையாரா என்று கூடப் பார்க்காமல் வழியில் தென்படும்  எல்லாத்தையும் வேண்டியபடி,  "பிளஸ் டூ" பொதுத்தேர்வு எழுதப் புறப்பட்டுப் போனீர்களே, அப்போதா?
  • பள்ளிக்கூடத்திலிருந்து வந்ததும் வராததுமாய், பையை ஒரு மூலையில் வீசி விட்டு, சீருடையைப் படுவேகமாய்க் களைந்து எறிந்து,  கையில் கிடைத்ததை  எடுத்து மாட்டிக் கொண்டு (கொஞ்சூண்டு சாம்பார் சாதத்தை வாயில் வைத்துக்கொண்டே... "சாப்டுட்டுப் போயேண்டா..." என்ற அம்மாவின் கூக்குரலைக் காதில் போட்டுக் கொள்ளாமலே) நண்பர்களோடு விளையாட வீதிக்கு ஓடினீர்களே, அப்போதா?

இவையெல்லாம்  நீங்கள் வாழ்க்கையின் அடிநாதத்தோடு   இரண்டறக் கலந்த தருணங்கள்...! உண்மையில் சொல்லப் போனால் நீங்கள் மகிழ்ந்தும், குழம்பியும், மயங்கியும், மலைத்தும், வருந்தியும், பயந்தும், லயித்தும் வாழ்ந்த தருணங்கள்!  

இப்போது சொல்லுங்கள்...நான் சொன்னது சரிதானே? 

அன்புத் தாய்மார்களே! சாப்பிடுவதற்காகவே வாழ்பவர்களுக்குச் சமைத்துப் போடுவதை விடவும், இப்படிச் சரியாகக்கூடச்  சாப்பிடாமல், வாழ்வதற்காகவே சாப்பிடுகிற இவர்கள் (வலைப்பூக்கள் எழுதுபவர்களும் இதில் அடக்கம்தானே!), அலைபாயும் பிறவிப் பெருங்கடலின்  கரையோரம்,  வாழ்க்கைப் படகிலிருந்து மெல்ல இறங்கி, அடுத்த வேளை அமைதியாகச் சாப்பிட  வரும் போது முகம் கோணாமல், ருசியாய் சமைத்துப் போடுங்கள், அன்பாய்ப் பரிமாறுங்கள்...!  உங்களுக்கு சொர்க்கம் நிச்சயம்... இங்கேயும், அங்கேயும்!

அம்மாடியோவ் ... தாய்மார்கள் கரண்டி, அன்னக்குத்தி, கண்ணைக்குத்தி, பிடியில்லாத கல்கத்தா  கடாய், அண்டான், குண்டான், என்று  கையில் கிடைத்ததை  எல்லாம்  எடுத்துக் கொண்டு அடிக்க வருகிறார்களே! சரி  சரி...மிகுமின்காந்த விசையின் உதவியுடன் "எந்திரன்" ரஜினியின் "சிட்டியாண்டவர்" அவதாரம் எடுக்கவேண்டியதுதான்! ஹப்பாடா! தப்பித்தோம்!

அடடே...எல்லாரும் விழுந்து கும்பிட ஆரம்பிச்சுட்டாங்களே...ஐயோ கடவுளே! இது என்ன கலாட்டா? எழுந்திருங்கம்மா...நீங்களோ, நானோ எந்தத் தப்பும் பண்ணலை! இந்தாங்க, அவங்க அவங்க பொருளைப் பார்த்து எடுத்துகிட்டு வீடு போய்ச் சேருங்க, போதும்! ஆளை விடுங்க தாயீ! நான் சொன்னது ஒரு சின்னக் கருத்து தானே, வேதவாக்கு இல்லையே! பிடிச்சா சந்தோஷப் படுங்க! இல்லையா... மறந்துடுங்க, அவ்வளவுதான்....! இதுக்கெல்லாம் உணர்ச்சிவசப்பட்டா வேலைக்கு ஆகுமா...?!

- மனம் திறந்து ...(மதி).

பின் குறிப்பு: 
  1. நான் இன்னும் பிரபல பதிவர் ஆகலை! அதனால, கட்டாயம் ஓட்டுப் போடணும், template கமெண்டாவது போடணும், ஏன் அடிக்கடி இந்தப் பக்கம் வரமுடியலை என்று ஒப்புக்குச் சப்பாணியா ஒரு விளக்கம் சொல்லணும்கிற நிர்ப்பந்தமெல்லாம் இங்கே இல்லை உங்களுக்கு ...! 
  2. நீங்க பாட்டுக்கு சும்மா ஜாலியாப் படிச்சிட்டுப் போயிட்டே இருக்கலாமுங்கோ!
  3. என் தரப்பிலிருந்து நான் மட்டும் உங்களுக்கு நன்றி சொல்றேங்க...! இந்தப் பக்கம் எட்டிப் பார்த்ததுமில்லாம, இந்தப் பதிவையும்    பொறுமையாப் படிச்சிட்டுப் போறீங்களே, அதுக்காக! விருந்தோம்பல் தலைசிறந்த தமிழ்ப் பண்பாடு இல்லீங்களா?

19 comments:

Anonymous said...

very nice. good writting.

Chitra said...

என் தரப்பிலிருந்து நான் மட்டும் உங்களுக்கு நன்றி சொல்றேங்க...! இந்தப் பக்கம் எட்டிப் பார்த்ததுமில்லாம, இந்தப் பதிவையும் பொறுமையாப் படிச்சிட்டுப் போறீங்களே, அதுக்காக! விருந்தோம்பல் தலைசிறந்த தமிழ்ப் பண்பாடு இல்லீங்களா?


...... ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.... You have a very good sense of humor. :-)

Nila said...

Good post. Yes the stomach shuts down when heart is full ! Thanks for helping us recollect past memories.

மனம் திறந்து... (மதி) said...

Anony: Thank you for your visit and appreciation. (நீங்க நிஜமாவே அனானி தான் என்பது எனக்குத் தெரியும். ஆனா மக்கள் என்னவோ, 125 பேருக்கு மேல வந்துபோனப்புறமும் ஒரு கமெண்டும் வரலியேன்னு, மனசு பொறுக்காம, நானே இந்த அவதாரம் எடுத்ததாத்தான் நினைப்பாங்க...சரி விடுங்க...இதெல்லாம் தவிர்க்க முடியாதவை தானுங்களே!)

மனம் திறந்து... (மதி) said...

Chitra:நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு புரியறதுக்குக் கொஞ்சம் நேரமாச்சுங்க! தப்பித் தவறி இந்தப் பக்கம் வந்தவங்க, இந்தப் பதிவை "படிச்சிட்டுப் போறீங்களேன்னு" சொன்னேனே அதைத்தானே! வேற என்னங்க பண்றது, பின் குறிப்பு போடும் அந்த இடத்திலே அப்படித்தானே யூகிச்சுக்கணும்!

ஓஹோ..."இந்த மாதிரி ஒரு சப்பைப் பதிவைப் போட்டதுக்கு மன்னிச்சிடுங்கோன்னு" அங்கேயாவது எழுதியிருப்பாரோ இந்தப் புண்ணியவான் என்ற நப்பாசையிலே தான் மக்கள் அவ்வளவு தூரம் "scroll down" பண்ணி வந்திருப்பார்கள் என்று சொல்றீங்களா நீங்க! இதுவும் ஒரு விதத்துல நியாயயமாத்தான் தோணுது! :)))

மனம் திறந்து... (மதி) said...

Chella Nilaa: Thank you for visiting my blog and for your appreciation. I was only reliving my past...and in the process, I am glad I could touch a few chords in your life too...and breathe LIFE into those few breezy seconds!

Paavai said...

Vazhvai rasichu saapdaama porangala illa innikkavadhu indha kodumailendhu thappikkalamnu film kattitu odarangala .. yosikka vendiyadha irukke :)

மனம் திறந்து... (மதி) said...

Paavai: ஏங்க, இப்படி சுத்தி வளைச்சு சொன்னதுக்கே நானு எந்திராண்டவரா மாறித்தான் தப்பிக்க முடிஞ்சுது...உங்கள மாதிரி 'பச்'னு direct punch குடுத்திருந்தேன்னா என்ன ஆயிருக்கும்னு கற்பனை கூடப் பண்ண முடியலிங்கோ...! நீங்க சொல்லலாம் தாயீ....என்ன ஆனாலும் ஆளும் கட்சி இல்லீங்களா? நான் இந்த விளையாட்டுக்கு வரலை...அம்பேல், உடு ஜூட் ! :)))

சாந்தி மாரியப்பன் said...

//இவையெல்லாம் நீங்கள் வாழ்க்கையின் அடிநாதத்தோடு இரண்டறக் கலந்த தருணங்கள்...! உண்மையில் சொல்லப் போனால் நீங்கள் மகிழ்ந்தும், குழம்பியும், மயங்கியும், மலைத்தும், வருந்தியும், பயந்தும், லயித்தும் வாழ்ந்த தருணங்கள்//

இந்தத்தருணங்கள்ல பசி எடுக்காதுதான் :-))

மனம் திறந்து... (மதி) said...

அமைதிச்சாரல்: நன்றிங்க! :-)))

மனம் திறந்து... (மதி) said...

Chitra:
//...... ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.... //

உங்களைப் பாத்தா சிரிப்புத் தான் வருதுன்னு சொல்றீங்க...! ஏன் சொல்லமாட்டீங்க? நீங்களும் ஒரு சீனியர் (பிரபல) பதிவர் தானே! அதான்!!! :)))

மனம் திறந்து... (மதி) said...

Chitra:

இல்லேன்னா...பதிவைப் படிச்சிப் பாத்துட்டு ஏதாவது சுவாரஸ்யமான (வெயிட்டான) கமெண்டு போட்டிருப்பீங்க இல்லே? :)))

மனம் திறந்து... (மதி) said...

Chitra: "இந்த மாதிரி வீண் வம்பு எதுலயும் மாட்டக் கூடாது, வந்த வழி தெரியாமாப் போயிடலாம்னு தான் மொதல்லே நினைச்சேன்! ஆனா, என்ன பண்ணித் தொலைக்கிறது, ஒருவரி எழுதி உங்களாண்ட வசம்மா மாட்டிக்கிட்டேனே?!" அப்படீன்னு வருத்தப்படறீங்களா? அதுவும் நியாயம் தான்! அதனால, இந்த மேட்டரை இங்கேயே நிப்பாட்டுவோம்! ஓ .கே?

சக்தி கல்வி மையம் said...

பயனுள்ள பதிவு..

மனம் திறந்து... (மதி) said...

வேடந்தாங்கல் - கருன்: வாங்க, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி! நான் பிறந்து வளர்ந்த கிராமம் மதுராந்தகம் பக்கத்திலே தாங்க இருக்கு! ஒவ்வொரு வருடமும், தொடக்கப் பள்ளியில் எங்களைச் சுற்றுலா அழைத்துச் செல்வது என்னவோ வேடந்தாங்கலுக்குத்தான்...! :)))

சி.பி.செந்தில்குமார் said...

>>>அதனால, கட்டாயம் ஓட்டுப் போடணும், template கமெண்டாவது போடணும்,


ரொம்ப மிரட்டாதீங்க... சின்ன பையன் பயந்துக்குவேன்.. மொய் வெச்சாச்சு.. ஹா ஹா

மனம் திறந்து... (மதி) said...

சி.பி.செந்தில்குமார் ...: வாங்க, வருகைக்கு நன்றி!
//ரொம்ப மிரட்டாதீங்க...//
சரியாப் போச்சு... இப்ப யாரு, யாரை மிரட்டறாங்கன்னே புரியலையே! யாராவது வந்து உதவி பண்ணுங்கப்பா!!!

மனம் திறந்து... (மதி) said...

சி.பி.செந்தில்குமார் ...:
// சின்ன பையன் பயந்துக்குவேன்.. //
ஓஹோ... C. P. யின் விரிவாக்கம் சின்ன பையன் தானா...? அப்ப ரைட்டு...ஓ.கே !

மனம் திறந்து... (மதி) said...

சி.பி.செந்தில்குமார் ...:

//மொய் வெச்சாச்சு..//

நம்ம கணக்குப் புஸ்தகத்துல வரவு வச்சிட்டேங்க! நன்றிங்க!

Post a Comment

ஆஹா! நீங்க மனம் திறந்து பேசவேண்டிய கட்டம் வந்தாச்சு!