இந்தப் பதிவை நான் எழுதக் காரணமாக இருந்த அன்பர் ஜீவன் சிவம் எழுதிய தமிழ் இணையதள நிர்வாகிகளுக்கு ஒரு வேண்டுகோள்..! எனும் பதிவு அனைத்துப் பதிவர்களும் அவசியம் படிக்க வேண்டிய ஒன்று என்றே நான் நினைக்கிறேன்! (நீங்கள் இன்னும் படிக்கவில்லை என்றால் முதலில் அதைப் படித்து விட்டு என் பதிவைப் படிப்பதே நல்லது! மறக்காம திரும்பி வந்துடுங்க.....அப்பிடியே போய்டாதீங்க!)
அவரது பதிவையும், தொடர்ந்த பின்னூட்டங்களையும் படித்துவிட்டு நான் மிகவும் உணர்ச்சி வசப்பட்டேன். பலரும் அவருடன் ஒத்துப் போனார்கள்...சிலர் மாற்றுக் கருத்தையும் முன் வைத்தார்கள். நானும் ஒரு பின்னூட்டம் போடத்தான் ஆரம்பித்தேன். நான் சொல்ல வந்த செய்திகளைத் தாங்க ஒரு தனிப் பதிவே தேவைப்படும் என்று எழுதத் தொடங்கிய பிறகு தான் உணர்ந்தேன். இப்படிப் பிறந்ததே இப்பதிவு!
ஜீவன் சிவம் அவர்களே,
உங்கள் ஆதங்கம் எனக்குப் புரிகிறது. நீங்கள் வைக்கும் குற்றச்சாட்டுகள் எல்லாம் மிகவும் வலுவானவை மட்டுமல்ல, உண்மையானவையும் கூட! ஆனாலும், இங்கே மாற்றுக் கருத்தைப் பதிய விழைகிறேன்! பாரபட்சமில்லாமல் பரிசீலிப்பீர்கள் என்று நம்புகிறேன்!
//அண்மைய காலமாக வெளிவரும் பதிவுகளில் சில குறிப்பாக வாசகர் பரிந்துரையில் பதிவர்களின் ஓட்டுகளின் அடிப்படையில் இடம்பெறும் பதிவுகள் ஒன்றுக்கும் உதவாத குப்பைகள் தான்.....பரிந்துரைக்க வேண்டிய பதிவு என்பதற்கு நீங்கள் என்ன அளவுகோல் வைத்திருகிறீர்கள்.//
நம் பாராளுமன்றம் மற்றும் மாநில சட்டப்பேரவைகள் நிலை என்ன? எத்தனை உறுப்பினர்கள் அப்பழுக்கற்றவர்கள்? கொலைக் குற்றம் சாட்டப்பட்டவர்கள்? ஊழல் குற்றம் சாட்டப்பட்டவர்கள்? நாட்டை ஆள்பவர்களும், சட்டம் இயற்றுபவர்களும் எந்த அளவுகோல் வைத்துப் பதவி ஏறுகிறார்கள்? படிப்பு, சுயமாகச் சிந்திக்கும் ஆற்றல், பேராண்மை, நேர்மை, கண்ணியம், சுத்தமாகவும், தெளிவாகவும் பேசும் ஆற்றல், தேசத்துக்கு ஆற்றிய தொண்டு ஆகிய பரிமாணங்களை வைத்தா அவர்களைத் தேர்ந்தெடுக்கிறோம்? அவர்களை விடவும் நல்லவர்கள், தூய்மையானவர்கள், அனுபவசாலிகள், அறிவாளிகள் நாட்டில் இல்லையா? இவர்கள் ஏன் பதவிக்கு வருவதில்லை?
//அரசியல் தலைவர்களை குறைந்தபட்சம் மரியாதை கூட இல்லாமல் விமர்சனம் செய்வது //
இது அநாகரிகம் தான். ஒப்புக் கொள்கிறேன்! அவசியமாய்த் தவிர்க்க வேண்டியதே! [ஆனால், அதைப் பற்றி அவர்களே கவலைப் படாதபோது நீங்களும் நானும் ஏன் கவலைப் பட வேண்டும்? இதற்கெல்லாம் கவலைப்படுபவன் அரசியல்வாதியாக முடியுமா? ஆவானா?:)))))))))] இவ்வளவு ஏன்? மகாத்மா காந்தியைக் கொன்றது யார்? சர்வ வல்லமை படைத்த ஆங்கில அரசாங்கமே செய்யத் துணியாத, நினைக்காத, முடியாத இந்தக் கொடுஞ்செயலைச் செய்து முடித்தவன் இந்தியன் தானே?
//சம்பந்தமே இல்லாத தலைப்புகளை கொடுத்து ஒன்றுக்கும் உதவாத பதிவுகளை தருவது, பிரபல பதிவராவது எப்படி என்று குறுக்கு வழிகளை புதிய பதிவர்களுக்கும் அறிமுகபடுத்தி அவர்களின் எழுத்தார்வத்தை முளையிலேய அளித்து அவர்களையும் உப்புமா பதிவர்களக்கிவிடுவது போன்றவை தொடருமானால் விரைவில் தமிழ்மணம், Indi, தமிழ் பெஸ்ட் போன்ற இணையதளங்கள் வெறும் குப்பை தொட்டியாகதான் காட்சி தரும். //
நிஜ வாழ்க்கையில் எவ்வளவு நேர்மை, நாணயம் இருக்கிறது தற்போது? சம்பந்தமே இல்லாத தலைப்புகளை அட்டையில் கொடுத்து ஒன்றுக்கும் உதவாத தகவல்களை உள்ளே வைத்து எத்தனை தின, மாலை, வார, மாத, சிறப்பு இதழ்கள் பிழைப்பு நடத்திக் கொண்டு இருக்கின்றன? பணம் பறித்துக் கொண்டு இருக்கின்றன? உங்கள் தெரு, ஊர், நகரம், மாநிலம், நாடு எவ்வளவு சுத்தமாக இருக்கிறது? குப்பை நிரம்பி வழியவில்லையா? கைக்குட்டை இல்லாமல் வெளியில் நடமாட முடிகிறதா கொஞ்ச தூரம்?
//வெறும் ஓட்டு போடுவதற்காக மட்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள ப்ளாக்குகள் எத்தனை என்று கணகெடுத்து பாருங்கள். உண்மை புரியும்.//
நம் நிஜ உலகத் தேர்தலில் கள்ள ஓட்டை முழுவதுமாக ஒழிக்க முடிந்ததா நம்மால்? இன்றும் எத்தனை பேர் ஓட்டுப் போடுவதற்காகவே வளர்க்கப் படுகிறார்கள்? உயிர் வாழ்கிறார்கள்? வறுமையில் அடைக்கப் பட்டிருக்கிறார்கள்? தெரியாதா உங்களுக்கு?
//மிகபெரும் வரவேற்ப்பை பெரும் என்று மாங்கு மாங்கென்று எழுதிய பதிவிற்கு ஒரு பின்னூட்டம் கூட வருவதில்லை. நடிகைகளின் பெயரில் வரும் பதிவுகள் ஓட்டுகளை அள்ளுகின்றன... இணையதளத்தை உபயோகபடுத்துபவர்களால் ஒரு நாட்டின் அரசாங்கமே மாறிகொண்டிருக்கும் நிலையில் வெறும் உப்புமா பதிவுகளுக்கு ஆதரவு கொடுத்து ஒரு சில நல்ல பதிவுகளை புறக்கணிக்காதிர்கள்.//
புகழின் உச்சியில் இருக்கும் இயக்குனர்களையும், பாடலசிரியர்களையும், இசை அமைப்பாளர்களையும்...ஏன் எந்தப் படைப்பாளியை வேண்டுமானாலும் கேளுங்கள்: நீங்கள் மெனக்கெட்டு உழைத்த போதெல்லாம் வெற்றி கண்டீர்களா? உங்கள் வெற்றிப் படைப்புகள் எல்லாம் அவ்வாறு உருவானவைதானா? உங்கள் சிறந்த படைப்புகளைப் படைக்கும் போதே "இது மாபெரும் வெற்றி பெரும்" என்று நீங்கள் நிச்சயமாகத் தீர்மானிப்பீர்கள்தானே? அவர்கள் பதிலில் நிதர்சனமான உண்மை வெளி வரும்!
//வாசகர் பரிந்துரை என்பதை மாற்றி இனிமேல் நிர்வாகிகளின் பரிந்துரை என்று இருக்கவேண்டும்.//
"தமிழ் மணத்தின்" ஆதரவு இருந்தால் படிப்பவர் அனைவரையும் நம் "தரமான" பதிவால் விலைக்கு வாங்கிவிட முடியுமா?
//உங்களால் தேர்ந்தெடுக்கப்படும் பதிவுகள் தரமானதாக இருக்கும் என்று நம்புகிறோம்//
உங்கள் தீர்வு முழுமையானதாகவும், இறுதியானதாகவும் இருந்தால்,
என்று நம்புகிறோம் என்ற இரண்டு வார்த்தைகளை சேர்க்காமலே விட்டிருக்கலாமே? ஏன் அப்படிச் செய்யவில்லை?
சரி இவ்வளவு தெளிவாகப் பேசுகிறீர்களே? உங்கள் தீர்வு என்ன என்றா கேட்கிறீர்கள்? அதைத்தான் சொல்ல முற்பட்டேன் இப்போது, அதற்குள் நீங்களே கேட்டு விட்டீர்கள்!
தமிழ்மணம், தமிழ் இணையதளம் எல்லாமே வலையுலகம், பதிவுலகம் தானே! நம் நிஜ உலக அனுபவத்தை வைத்து உருவாக்கப் பட்டவை தானே! மனிதர்களால் உருவாக்கப் பட்டு, மனிதர்களால் பயன்படுத்தப் படுபவை தானே! மாநில, மத்திய அரசுகளால் மக்கள் கட்டுப்படுத்தப்பட்டு திட்டமிட்டபடி வளர்ச்சியும், வளமும் பெருகி இருந்தால் தீவிரவாதம், வறுமை, கொலை, கொள்ளை, சுரண்டல், ஊழல், பொருளாதார மேடு பள்ளங்கள் எல்லாம் இருந்திருக்காதே? தமிழ்மணம் (இணையதள) நிர்வாகிகள் மட்டும் என்ன சர்வ வல்லமை பொருந்தியவர்களா? அனைத்துப் பதிவர்களையும், படிப்பவர்களையும் கட்டி மேய்த்து ஒழுங்கு படுத்த? பாவம், இவர்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? அது எவ்வளவு தூரத்துக்குச் செல்லும்?
மனிதனால் உருவாக்கப்பட்டவை அனைத்தும் ஒரு நிலையில் மனிதக் கற்பனைக்குள்ளும், கட்டுப்பாட்டுக்குள்ளும் அடங்காமல் போனது அல்லவா சரித்திரமும், விஞ்ஞானமும் நமக்குச் சொல்லிக் கொடுப்பது?
ஆக, நாம் செய்ய வேண்டியதெல்லாம் இது தான்! நிஜ உலகைப் போலவே, பதிவுலகிலும் நல்ல நண்பர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். நம்மையும், நம் சுற்றுச் சூழலையும் சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளப் பாடுபட வேண்டும்! நம்முடைய "வட்டத்தை" மிகவும் கவனமாக வளர்க்க வேண்டும், அதுவும் தேவைப்பட்டால் மட்டுமே! சேரிடம் அறிந்து சேர் என்று தெரியாமலா சொல்லிவிட்டுப் போனார்கள்?
நம் நிஜ உலகம் எவ்வளவு நல்லதோ, அவ்வளவு நல்லதே தமிழ் மணமும் மற்ற இணையங்களும். நம் நிஜ உலகம் எவ்வளவு மோசமானதோ அதே அளவு மோசமானதே பதிவுலகும்! இரண்டும் இப்படித்தான் இயங்கும், வளரும்... அவசியமானால் அழியும்!
நீங்கள் உங்களுக்குப் பிடித்ததை செய்யுங்கள்! நல்லவராக இருங்கள்! மற்றவர்களிடமிருந்து வரும் எதிர் பார்த்த அல்லது எதிர் பாராத தாக்குதல்களில் இருந்து உங்களைக் காத்துக் கொள்வது எப்படி என்று தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள், அந்த உத்தியை அடிக்கடி தூசி தட்டித் தயார் நிலையிலும் வைத்திருங்கள்!
ஒரு மாமேதை சொன்ன அறிவுரையுடன் இந்த நீண்ட பதிவினை நிறைவு செய்கிறேன்: உலகம் நம்மைப் புரிந்து கொள்ளவில்லையே என்று வருந்துவதில் சற்றும் பயனில்லை; உலகை நாம் புரிந்து கொள்ளவில்லையே என்று வருந்துவதிலும், ஆராய்வதிலும் தான் நம் வாழ்க்கையின் எல்லாக் கேள்விகளுக்கும் விடைகள் கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது!
- மனம் திறந்து...(மதி)
பின் குறிப்புகள் :
- தேவைக்கு அதிகமாப் பேசிட்டா மாதிரி தான் தெரியுது!
- இனி நான் சொல்லி நீங்க எதையும் கேக்கப் போறது இல்லை!
- சரி....ஸ்டார்ட் மீசிக்....பட்டயக் கெளப்புங்க! கும்முங்க! கும்முங்க!
- இந்தப் பதிவினால் எனக்குப் பெருமை சேர்ந்தால் அது முழுவதுமாக உங்களையே சாரும், ஜீவன் சிவம் அவர்களே!
- கிடைக்கும் பழி, பாவம் அனைத்தையும் நானே மூட்டை கட்டி என் வீட்டுக்குக் கொண்டு செல்கிறேன், நீங்கள் அஞ்ச வேண்டாம்!
17 comments:
உலகம் இப்படித்தான் இருக்கும், அதன் போக்கிலேயே நாமும் செல்வோம் என்று நினைப்பவர் பலர்.
உலகம் இப்படி இருந்தால் நன்றாக இருக்குமே, அதற்காக நாமும் சில முயற்சிகள் எடுத்தால் என்ன என்று நினைப்போர் வெகு சிலர்.
உங்கள் பதிவைப் பார்த்ததுமே எனக்கு உடனடியாகத் தோன்றியது:
அனுபவம், அரசியல், சினிமா, நகைச்சுவை, விமர்சனம் என்று நாலு வழிகளில் வகைப்படுத்தியதில் என்ன அனுகூலம் என்றால், நீங்கள் பதிவு போட்டு 7 மணி நேரம் கடந்தும் தமிழ் மணத்தின் முகப்புப் பக்கத்தில் உங்கள் இப்பதிவின் சுட்டி இன்னும் அப்படியே தெரிகிறது, நான்கு வகைகளின் கீழே.
இது எப்படி இருக்கு?
அன்புடன்,
டோண்டு ராகவன்
தமிழ் படம் ஒன்றுக்குமே ஆஸ்கார் கிடைக்கவில்லையே என வருத்தப்பட்டார்கள் நம் மக்கள். முதலில் அவர்கள் தெரிந்துக் கொள்ள வேண்டியத், அகாடமி அவார்ட்ஸ் எனப்படும் ஆஸ்கார் விருதுகள், ஆங்கிலப்படத்துக்கானது, அதுவும் அமெரிக்கப் படங்களுக்கானது. அதில் சும்மாவேண்டி ஒரு விருதை சர்வதேசப் படத்துக்கு தருவாங்க........... அது போலத் தான் தமிழ்மணம் அறிமுகம், வோட்டு, நட்ச்சத்திரம், தமிழிஷ் வோட்டு என்பதால் மட்டும் ஒரு பதிவு, பதிவர் நல்லவர், வல்லவர், நாலும் தெரிஞ்சவர்னு அர்த்தம் இல்லை. ஜெயாடிவியிலோ, சண்டிவியிலோ பேட்டிக் கொடுப்பதாலோ, சினிமா ப்ரிவீயுப் பார்த்து டைரக்டர் கூர போஸ் கொடுப்பதாலோ, விகடனில் வந்துவிடுவதாலோ, அவர் பெரிய பதிவர் இல்லை........ அனைவரும் சேர்ந்து தமதுக் கருத்துக்களை பகிரும் இடம் வலைப்பதிவு. இதில் தலை வால், மூக்கு கண்ணு என்றெல்லாம் ஒன்றுமில்லை. சிலரின் எண்ணம் சிலருக்குப் பிடிக்கும்...... சில தகவல்களை உங்கள் பதிவில் இருந்து நான் பெறுவேன் சிலவற்றை என்னிடம் இருந்து நீங்கள் பெறுவீர்கள். வீச்சருவாவில் வழி தேடும் சாதி முரண்பாடுகளை பேச்சருவாவில் நாம் பேசி தீர்ப்போம். இப்படியான ஒரு சமூக தளமே இது. வலைப்பதிவு எழுதுவதால் நீங்கள் மாதம் ஒரு லட்சம் சம்பாதிபீர்களானால்....... அப்போது தான் நீங்க தலைப் பதிவர். இல்லாக்காட்டி எல்லாமே வாலு தான். அறுந்த வால்.........
இதில் வருத்தப்படவோ, சந்தோசப்படவோ தேவை இல்லை. வலைப்பதிவு என்பது மக்களை ஒன்றிணைக்கும் அற்புத ஊடகம். வெகுஜன ஊடகம் என்றுக் கூறிக் கொண்டு தமது சொந்தக் கருத்தை திணித்து வந்த ஊடகங்களுக்கு சாவு மணியடிக்க வந்த மக்கள் ஊடகம். அவ்வளவே. இதில் நாம் ஒரு சிறு துளி. மழைத்து துளியில் சிறு துளி பெரும் துளி உண்டா. அவை சேரும் இடத்தின் பொருடே அதன் தரம் மாறுகிறது. அதைப் போலத் தான் பதிவுகளும். பதிவர்களும்.......
'' குற்றம் கண்டு பிடித்தே பேர் வாங்கும் புலவர்களும் உள்ளார்கள் " ஹி... ஹீ. ஹீ . அவர் சொன்னா சொல்லிட்டு போகட்டும் விடுங்க மதி. அவர் உங்கள் "விமர்சனம்" பதிவை நல்ல படிக்கல போல. இக்பால் செல்வன் ரொம்ப நல்லா சொல்லி இருக்கார்.
// நிஜ உலகைப் போலவே, பதிவுலகிலும் நல்ல நண்பர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். நம்மையும், நம் சுற்றுச் சூழலையும் சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளப் பாடுபட வேண்டும்! நம்முடைய "வட்டத்தை" மிகவும் கவனமாக வளர்க்க வேண்டும், அதுவும் தேவைப்பட்டால் மட்டுமே!//
//நம் நிஜ உலகம் எவ்வளவு மோசமானதோ அதே அளவு மோசமானதே பதிவுலகும்! இரண்டும் இப்படித்தான் இயங்கும், வளரும்... அவசியமானால் அழியும்!//
யப்பா... ஒவ்வொரு வார்த்தையும் எப்படி சரளமா வந்து விழுது.
//தேவைக்கு அதிகமாப் பேசிட்டா மாதிரி தான் தெரியுது!//
இல்ல மதி , என்ன பேசணுமோ ,என்ன சொல்லணுமோ அதை தான் சொல்லி இருக்கிங்க. முதல் வரியில் இருந்து கடைசி வரி வரை எல்லாமே சும்மா நச்சுனு இருந்தது. ப்ளாக் ஒன்னும் இவங்க வீட்டு சொத்து இல்லையே . ஏன் குப்பை , உப்புமா ,அப்பிடின்னு கவலை பட்டுட்டு இருக்காங்க . ஏன் பின்னூட்டத்தை இவர் ஒரு அளவு கோலா வைத்து பேசுகிறார்.
அசர வைகிறீங்க மதி நீங்க. எங்க போய் இருந்தீங்க இவ்ளோ நாளா பதிவு போடாம. நான் படித்ததிலேயே நல்ல அருமையான பதிவு நீங்க போட்ட விமர்சனம் மற்றும் இந்த பதிவும் தான். நல்ல ஆழமான அறிவாற்றலுடன் ஆராய்ந்து எழுதி உள்ளீர்கள். பெருமையாக உள்ளது. உங்கள் விசிறி ஆகிவிட்டேன் நான்.
தமிழ் மணத்தின் சேவை பதிவலகில் அளப்பரியது... எமது சொந்த தாக்கங்களுக்காக அதை சாடுவது எனக்கு சரியென தோன்றவில்லை அவர்கள் வருமான நோக்கோடு இதை நடத்தவில்லை... சேவை அடிப்படையில் செய்கிறார்கள்... மற்றும் படி பிழைக்கத் தெரிந்தவன் பிழைக்கிறான்... கர்வம் கொண்டவன் அமுக்கப்படுகிறான்... அந்தளவும் தான் எனக்குத் தெரியும்...
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
தமிழுக்காக ஒரு தழிழனால் முடிந்தது (இலகு தட்டச்சு உதவி)
ராபின்: வாங்க...வருகைக்கு நன்றி! ஆமாம், ஒத்துக் கொள்கிறேன்! நானும் இதைத்தானே சொன்னேன்:
//தமிழ் இணையதள நிர்வாகிகளுக்கு ஒரு வேண்டுகோள்..! எனும் பதிவு அனைத்துப் பதிவர்களும் அவசியம் படிக்க வேண்டிய ஒன்று என்றே நான் நினைக்கிறேன்!//
//ஜீவன் சிவம் அவர்களே, உங்கள் ஆதங்கம் எனக்குப் புரிகிறது. நீங்கள் வைக்கும் குற்றச்சாட்டுகள் எல்லாம் மிகவும் வலுவானவை மட்டுமல்ல, உண்மையானவையும் கூட! ஆனாலும், இங்கே மாற்றுக் கருத்தைப் பதிய விழைகிறேன்!//
இது ஒரு ஆரோக்கியமான விவாதம் தானே! முழுப்பலனைத் தரவல்ல, எளிதில் நிறைவேற்றக் கூடிய முயற்சிகளும், தீர்வுகளும் தென்படவில்லை என்பதே என் அடிப்படைக் கருத்து?
விமர்சனம் பற்றிய என் பார்வையை ஒட்டியே என்னுடைய இந்தப் பதிவு இருந்தது என்று நம்புகிறேன்! நீங்களும் படித்து விட்டு உங்கள் கருத்தைச் சொல்ல வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்!
டோண்டு: வாங்க...வருகைக்கு நன்றி! நல்லாருக்கு உங்க ஆராய்ச்சி! உங்களுக்கு ஆராய்ச்சி பண்ண சொல்லிக் குடுக்கணுமா என்ன? :)))
இக்பால் செல்வன்: வாங்க...வருகைக்கு நன்றி! ஒரு குட்டிப் பதிவே போட்டு விட்டீர்கள். பலே! //வெகுஜன ஊடகம் என்றுக் கூறிக் கொண்டு தமது சொந்தக் கருத்தை திணித்து வந்த ஊடகங்களுக்கு சாவு மணியடிக்க வந்த மக்கள் ஊடகம். அவ்வளவே. இதில் நாம் ஒரு சிறு துளி. மழைத்து துளியில் சிறு துளி பெரும் துளி உண்டா// :))))))))) ஒரே பந்தில் "டபுள் சிக்சர்" அடிச்சு 12 ரன் எடுத்திட்டீங்களே!
வெட்டிப்பையன்...! வாங்க, அருள் குமார்! இந்த மாதிரில்லாம் பின்னூட்டம் போட்டு என்னை அசர வைக்கறீங்க நீங்க! உங்கள் பாராட்டுக்கு நன்றி! விசிறியின் உதவி இல்லாமல் உயர்வது ரொம்ப கஷ்டங்க..,(அட,,,நான் இந்த ஹெலிகாப்டர், விமானம் பத்திப் பேசறேங்க!! :)))....) அதனால, உங்க விமானத்துக்கு நானும், என் விமானத்துக்கு நீங்களும் விசிறியா இருப்போமுங்க! உங்களுடன் என் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வது எனக்குப் பெருமையாக இருக்கிறது!
ம.தி.சுதா: வாங்க சகோதரரே! நான் இவ்வளவு நீட்டி முழக்கியதுக்கு, இப்படி ரத்தினச் சுருக்கமாய்த் தீர்ப்பு சொல்லிட்டுப் போயிட்டீங்களே, நாட்டாமை! அப்பீலே இல்லீங்கோ! :)))
அட கோதல இறங்கிட்டீங்க போல...
வந்துட்டு கருத்து சொல்லாம போனா எப்படி :))
என்னுடைய தாழ்மையான கருத்து தரத்தை நம் பதிவில் தேடவேண்டுமே தவிர தமிழ்மணம் அங்கீகாரத்தில் அல்ல.
உங்க பதிவும் நன்று, நண்பர் இக்பால் செல்வன் மறுமொழியும் அசத்தல்! எஞ்சாய் ப்ளாக்கிங்!! :-)
You have just started blogging? Already started criticizing Tamilmanam!!!
Why dont you spend some time writing some posts instead of analyzing the "smell" of TamilmaNam and "foreseeing" TamailmaNam's future!
அண்ணை
மாதத்துக்கு சாப்பிடவும் குடும்பத்தைப் பார்க்கவும் கொஞ்சம் சம்பளம் தாங்கோ. கழிவை அகற்றிவிடுறன்
Dubukku said: //என்னுடைய தாழ்மையான கருத்து தரத்தை நம் பதிவில் தேடவேண்டுமே தவிர தமிழ்மணம் அங்கீகாரத்தில் அல்ல.//
வாங்க, தலைவரே! நெத்தியடி!...வழக்கம் போல! :))))))))))))).
அடியேன் சிந்தனையும் அதே: // "தமிழ் மணத்தின்" ஆதரவு இருந்தால் படிப்பவர் அனைவரையும் நம் "தரமான" பதிவால் விலைக்கு வாங்கிவிட முடியுமா? //
தெகா: வாங்க! வருகைக்கும், கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றிங்கோ!
Varun: Welcome and thanks! I think you have made a passing comment just by looking at the title of this post. Please read through (if and when you have time) and tell me more about what you feel. Regarding criticism, (both yours and mine), you can know more from my very first post here : விமர்சனம்... ஒரு பார்வை!
Anony: நீங்கள் நினைக்கிற மாதிரி அது அவ்வளவு எளிதான காரியமில்லையே! ஆயிரக்கணக்கான படைப்புகளைப் படித்துத் தரம் பிரிக்க எத்தனை பேர் உழைக்க வேண்டும்? ஆயிரக் கணக்கிலான, உண்மையான சுவைஞர்களே இந்தப் பணியைச் சிறப்பாகச் செய்யக் கூடியவர்கள், செய்கிறார்கள், செய்வார்கள்!
அது மட்டுமல்ல...கழிவை நீக்க மனிதர்களை வேலைக்கு அமர்த்துவதை சட்டம் தடுக்கிறதே! (scavengers have been banned) ......:))))))))))
Dubukku: தலைவரே! நான் இவ்வளவு சீக்கிரம் கோதாவிலே இறங்கணும்னு ஆசைப்படலே, நானா இறங்கவும் இல்ல! வழக்கம் போல யாரோ/ஏதோ பின்னாலேர்ந்து புடிச்சித் தள்ளினதாலே ஏற்பட்ட விபத்து தான் இது... அவ்வ்வ்வவ்வ்வ் :((((((((( !!
இந்த பதிவை நான் இப்போது தான் பார்க்க நேர்ந்தது. தாமதத்திற்கு மன்னிக்கவும். அந்த பதிவும் அதற்க்கு பின் எனக்கு வந்த பின்னூட்டங்களும் தொலைபேசி அழைப்புகளும் என்னை மிகவும் யோசிக்கவைத்த ஓன்று. ஓன்று மட்டும் எனக்கு நண்பர் இக்பால் செல்வன், கக்கு மாணிக்கம், சேட்டைக்காரன், சர்புதீன் போன்றவர்கள் கொடுத்த பின்னூட்டம் மிக ஆதரவாக இருந்தது. அதுமட்டுமல்ல நல்ல பதிவுகள் தொடர்ந்து கொடுப்பவர்கள் ஒட்டு பொறுக்கிகளாக இருக்க முடியாது என்று அடித்து சொன்னார்கள் ஆதாரத்தோடு. உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி. உங்கள் பதிவும் அருமை.
உண்மையை, நேர்மையை நம்மிடம் இருந்து அர்ரம்பிபோம் உலகம் தானாக சேர்ந்து கொள்ளும். சேராவிட்டாலும் பரவாயில்லை நமக்கு மனதிருப்தி நிச்சயம் உண்டு.
இந்தப் பதிவினால் எனக்குப் பெருமை சேர்ந்தால் அது முழுவதுமாக உங்களையே சாரும், //
கீதாஜீவன் சொன்னதை நீங்க கடைபிடிச்சதாலயா?கீதா ஜீவன் சொன்ன விதி முறைப்படி தலைப்பு வெச்சிட்டீங்களே..சபாஷ்..ஹஹாஹா
சார்....ஒரு பதிவரை தாறுமாறா ஒரு பதிவர் திட்டினா அவனுக்கு நாகரீகமாக புத்திமதி சொல்றது...பதிவர்களுக்கு வேண்டுகோள் நு தலைப்பு வைக்கிறது எல்லாமே ஒரு குட்டையில ஊறின மட்டைதான் எல்லாமே ஹிட்டுக்காகத்தான்
ஜீவன்சிவம்: வாங்க...வருகைக்கு நன்றி, வணக்கம்! இந்த விவாதம் குறித்து, நானே உங்கள் பதிவில் பின்னோட்டம் போட்டிருக்க வேண்டும்...உங்கள் காதுக்கு உடனே எட்டும் என்று நினைத்து விட்டேன்...தவறு என்னுடையது தான், மன்னிக்கவும்!
//உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி. உங்கள் பதிவும் அருமை. உண்மையை, நேர்மையை நம்மிடம் இருந்து ஆரம்பிப்போம் உலகம் தானாக சேர்ந்து கொள்ளும். சேராவிட்டாலும் பரவாயில்லை நமக்கு மனதிருப்தி நிச்சயம் உண்டு.//
என் மாறுபட்ட கருத்தை ஏற்றுக்கொண்டதோடு நிற்காமல், மனமாரப் பாராட்டியிருக்கிறீர்களே!!! மிக்க நன்றி! நெஞ்சு நிறைகிறது! இதுதான் ஒரு ஆரோக்கியமான விவாதம் என்பது!
ஆர்.கே.சதீஷ்குமார்: வாங்க...வருகைக்கு நன்றி, வணக்கம்!
//கீதாஜீவன் சொன்னதை நீங்க கடைபிடிச்சதாலயா?கீதா ஜீவன் சொன்ன விதி முறைப்படி தலைப்பு வெச்சிட்டீங்களே.//
இந்த "கீதாஜீவன்" யாருன்னே தெரியலைங்களே!
ஜீவன்சிவம் தான் என்றே வைத்துக் கொண்டாலும்... நீங்க சொல்றது புரியலைங்களே!
அவர் சொன்னது இது தான்:
//சம்பந்தமே இல்லாத தலைப்புகளை கொடுத்து ஒன்றுக்கும் உதவாத பதிவுகளை தருவது.. அவர்களையும் உப்புமா பதிவர்களக்கிவிடுவது போன்றவை தொடருமானால் விரைவில் தமிழ்மணம், Indi, தமிழ் பெஸ்ட் போன்ற இணையதளங்கள் வெறும் குப்பை தொட்டியாகதான் காட்சி தரும்.//
இப்போது சொல்லுங்கள்... இந்த என் பதிவின் தலைப்பு சம்பந்தமே இல்லாததா? பொய்யான கவர்ச்சியைக் காட்டி, வரவழைத்து ஏமாற்றிய பதிவா இது?
//பதிவர்களுக்கு வேண்டுகோள் நு தலைப்பு வைக்கிறது எல்லாமே ஒரு குட்டையில ஊறின மட்டைதான் எல்லாமே ஹிட்டுக்காகத்தான்//
கார சாரமான விவாதம் இது என்று பறை சாற்றுவதே இந்தத் தலைப்பின் நோக்கம்! இது தவறா? நெசமாவே புரியலைங்க...! அதுமட்டும் இல்லைங்க, இது புது மட்டை, நல்லா காஞ்சி கருவாடாப் போனது .... ஊறித்தான் ஆகணும், ஆனா ஊற இன்னும் கொஞ்ச நாளாகும் இல்லீங்களா !
Post a Comment
ஆஹா! நீங்க மனம் திறந்து பேசவேண்டிய கட்டம் வந்தாச்சு!