Thursday, January 27, 2011

விமர்சனம்...ஒரு பார்வை!

செய்யும் முன் செய்ய வேண்டியது: எடுத்தாண்ட கருப்பொருளையும், தளத்தையும், களத்தையும், காலத்தையும், படைப்பாளியின் பின்புலனையும், படைப்பாளியின் நோக்கத்தையும் புரிந்து கொள்ள பலவாறான  கோணங்களில் மனமுவந்து முயற்சி செய்வது!

செய்யத் தகுதி: அந்தத் துறை அல்லது விஷயத்தில் போதுமான படிப்பறிவோ, அனுபவமோ, சுவைக்கும் திறனோ  இருப்பது (இருப்பதாக நாமே நினைத்துக் கொள்வது பத்தாது!).  சாப்பாட்டை  விமர்சிக்க நன்கு சமையல் செய்யத் தெரிந்திருக்க வேண்டியது அவசியம் இல்லைதானே?

செய்யும் நோக்கம்: சம்பந்தப் பட்ட கருப்பொருளைக் கையாண்ட விதம் குறித்த மகிழ்ச்சியை அல்லது மன வருத்தத்தை உரிய காரணங்களோடு, உகந்த வகையில் உலகுக்கு(ம்)  உணர்த்துவது! படைப்பாளியின் போக்கைத் திருத்த அல்லது அவரிடமிருந்து நன்மதிப்பைப் பெற முயல்வது!

செய்யும் விதம்: குறைகளைப் பேசும்போது, சம்பந்தப் பட்ட படைப்பாளியே படித்தாலும்(சோமாரி, கைக்கூலி என்றெல்லாம் அநாகரிகமாகத் திட்டாமல்,அவர் முழுதாய்ப் படிக்கக் கூடிய விதத்தில்  இருந்தால் தானே இது சாத்தியம்!), ஒட்டு மொத்தமாக இல்லாவிட்டாலும், வேறு கோணத்தில் பார்த்தால்  ஓரளவாவது உண்மை இருக்கத்தான் செய்கிறது என்று எண்ணும் அளவிற்கு இருத்தல் அவசியம்! நிறைகளைச் சொல்லும்போது நெருடல் இல்லாமல் படிக்கும் படியும் இருக்க வேண்டும்(அளவுக்கதிகமான, காரணமில்லாத புகழ்ச்சியாகி விடக் கூடாது)!

செய்யும் உந்துதல்(உள் நோக்கம்): கலையை வளர்க்க, இன்னும் பல பேரை இவ்வாறு (படைப்பு) செய்யத் தூண்ட, தனக்கு இவ்வளவு விஷயம் தெரியும் என்று காட்டிக் கொள்ள, இப்படி ஒரு படைப்பு உருவானதே என்ற உண்மையான மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள என்பதெல்லாம் சரியே!  [நிறைய பேர் பிரபலமான பெரியவர்களைக் கண்டபடி விமர்சித்தால் வெளிச்சம் நம் மீது விழும், சீக்கிரம் புகழ் கிட்டும்  என்று செய்கிறார்கள்...இது ஏற்புடையதல்ல!]

தேவையானவை: சுய சிந்தனை , போதுமான நேரம், சரியான ஊடகம், அடிப்படை அறிவு, முறையாக நம் கருத்தை வெளிப்படுத்த வேண்டும் என்ற நேர்மையான ஆர்வம், தன்னைத் தானே பண்படுத்திக் கொள்ளத் தணியாத தாகம் (அய்யோ, மெயின் அயிட்டம் மறந்தே போச்சே: ஆட்டோ நுழைய முடியாத குறுக்குச் சந்தில் நம் வீடு இருக்க வேண்டும்)... இவை தான் மிக முக்கியமானவை என்று நான் கருதுகிறேன். ஆற்றல், திறமை வேண்டும்  என்றெல்லாம் எண்ணி ஆரம்பிக்கவே தயங்க வேண்டியது இல்லை...அவையெல்லாம் பழகப் பழகத் தானே(!?) வரும் (இதோ... நான் கடை தொடங்கலியா!). ரோமாபுரி ஒரே நாளில் உருவாக்கப்பட்டதல்லவே? அமிதாப் பச்சன் முதலில் முகம் சரியே இல்லை என்று விரட்டப் பட்டவர் தானே!  

சுய சிந்தனை  மற்றும் தேடல்  துளிர்ப்பதின் முதல் அடையாளம் தான் விமர்சனப் பார்வை  என்பது என் கருத்து...உண்மை தானே? (இவ்வளவு பேசிட்டு நானே ஒரு சொந்தக் கருத்தைக் கூட சொல்லாம போயிட்டா நல்லா இருக்காது பாருங்க...அதான்! இது...இது... சொந்தக் கருத்தா(?)ன்னு கேட்டு அடிக்க வராதீங்க அப்பு...கடை இப்பத்தான் தொறந்திருக்கு....இன்னைக்கே இழுத்து மூடற மாதிரி பண்ணிடாதீங்க! வேணாம்... அழுதிருவேன்... அவ்வ்வ்வவ்வ்வ்! சின்னப் பயல யாவாரம் பண்ண உடுங்கப்பா!)

தவிர்க்க வேண்டியது: தகுதி இல்லாத,மிகவும் தரம் தாழ்ந்த, தவறான உள்நோக்கத்துடன் உருவாக்கப் பட்ட படைப்புகளை விமர்சனம் செய்யாமல் புறக்கணிப்பதே  ஒரு விதத்தில் நல்லது என நான் நினைக்கிறேன்! இல்லையெனில், நம் விமர்சனத்தாலேயே அத்தகைய படைப்புகளுக்கு, அருகதையில்லாத விளம்பரத்தையும், அங்கீகாரத்தையும், நம்மை அறியாமல், நாமே கொடுத்த குற்ற உணர்வுக்கு ஆளாவோம் (அப்படீன்னா இந்தப் பதிவுக்குப் பின்னூட்டம் போட வேண்டியதில்லை என்று நீங்கள் நினைப்பது எனக்குப் புரிகிறது! நுணலும் தன் வாயால் கெடும்னு சும்மாவா சொன்னாங்க பெரியவங்க?)!

செய்யக் கூடாதது: படைப்பை ஒரு சாக்காக வைத்துக்கொண்டு படைப்பாளியில் தொடங்கி, வருவோர், போவோர், உழைப்போர், நடப்போர், தூங்குவோர், ஆளும் கட்சி, எதிர்க் கட்சி, ஊர் பேர் தெரியாத கட்சி மற்றும் மகாத்மாவிலிருந்து மம்தா பானர்ஜி வரை  எல்லோரையும்  சகட்டு மேனிக்குத் தாக்கு தாக்கு என்று தாக்கி, தனது  (தற்)கொலை வெறியை எல்லா ஜீவராசிகளுக்கும் பரப்பி விட்டு, இப்படியே போனால் இந்த மனித வர்க்கம் முழுவதும் அடுத்த  மாதமே அழிந்து போகும் என்பது போல, உலகெங்கும் ஒரு மரண பயத்தையும்,  (ஊரடங்கு உத்தரவு போட்ட மாதிரி) வெறிச்சோடிக் கிடக்கும் தெருக்களையும் உருவாக்கி விட்டு பாதுகாப்பாக ஒரு ஹெலிகாப்டர் மீது ஏறி உட்கார்ந்து கொண்டு, ஹிட்லரைப் போல ஒரு குரூரப் புன்னகையுடன் உலகை வலம் வருவது! (ஸ்ஸ்ஸ்ப்பா... மூச்சு வாங்குதே!) அதோடு நிற்காமல், இந்த அற்ப  சந்தோஷத்தை எல்லா நண்பர்களுக்கும் SMS செய்து உசுப்பேத்தி அவர்கள் அனைவரும் தத்தம் கைபேசிகளை switch off செய்து கோமாவில் வைக்கத் தூண்டிவிட்டு, அவர்களையும்  உலகத் தொடர்பிலிருந்து துண்டிப்பது...தன் நண்பர்கள் என்ற ஒரே காரணத்துக்காக இப்படி அனாவசியமாகத் தண்டிப்பது!

வெற்றி பெறுவது: நல்ல விமர்சனம் என்பது, சம்பந்தப் பட்ட படைப்பை விட  மிக அழகாகவும், ஆழமாகவும், படைப்பாளியை, அவர் செய்திகளை நம்முன் நிறுத்தி, விளக்கி, மெருகேற்றி நமக்கும் அவருக்கும்  மன நிறைவைத் தருவது (நாம் பார்த்த  சினிமாவை விடவும் விமர்சனத்தை ரசித்தது எத்தனை முறை...அடடா!), அந்தப் படைப்பை விரைவில் தேடிப் பிடித்து உய்க்க நம்மை உந்தித் தள்ளுவது (எத்தனை ஆயிரம் புத்தகங்கள் விமர்சனத்துக்குப் பின்பே தேடி வாங்கப் பட்டன...அம்மாடி!)! படைப்பாளிக்கு உள்ள வரையறைகள், முட்டுக் கட்டைகள், கட்டுப்பாடுகள், தட்டுப்பாடுகள், நிர்ப்பந்தங்கள் இவற்றை எல்லாம் தாண்டிப் பயணிக்கக் கூடிய ஒரு அலாதி சுதந்திரம் விமர்சகருக்கு உண்டே!  இந்த வரப்பிரசாதம் வெற்றி வாயிலுக்கான, மிக அருமையான நுழைவுச்சீட்டு (முறையாகப் பயன் படுத்தினால்)!


பின் குறிப்பு: பதிவு நீண்டுவிட்டதோ? ஒரு இனிய நெடும் பயணத்தின் முதல் சுமைதாங்கி அதோ தெரிகிறது! சற்றே இளைப்பாறுவோம்...பிறகு தொடர்வோம்! [என் கன்னிப் பதிவு இங்கே நிறைவடைகிறது!]

- மனம் திறந்து...(மதி) 

23 comments:

Porkodi (பொற்கொடி) said...

அடேங்கப்பா முதல் இரண்டாவது பதிவே இப்படியா?! வர்றவங்க எல்லாம் இதை விமர்சனம் பண்ணாம ஓடிடுவாங்கன்னு ப்ளானோ.. இருங்க இன்னொருக்கா படிச்சுட்டு வர்றேன்.. மனம் திறந்து தான் மதியா??? அவ்வ்வ்வ்வ் எப்படிலாம் பன்னு தர்றாங்கப்பா..

Dubukku said...

நல்லா சொல்லியிருக்கீங்க...நீங்கள் சொன்னதில் பெரும்பாண்மையுடன் நானும் ஒத்துப் போகிறேன். கலக்குங்க...மேன் மேலும் எழுதி பெரிய ஆளாக மனமார்ந்த வாழ்த்துகள்!!

(காலையிலேயே எனக்கு வடை கிடைச்சிருக்கவேண்டியது ஆபிஸுல இந்த ப்ளாகர் கமெண்ட் லிங்க் தடை பண்ணியிருக்காங்க :((( )

மனம் திறந்து... (மதி) said...

(பொற்கொடி) கேடியக்கா: பிடிங்க வடை! நிதானமா படிச்சுட்டு வாங்க...வெய்ட் பண்றேன்! பன்னுன்னா சும்மாவா? ரெண்டு வாரம் ரூம் போட்டு யோசிச்சோம்ல?

டுபுக்கு, தலைவரே! மிக்க நன்றி. உங்கள் வருகையை எதிர்பார்த்து ஒரு திருப்பதி லட்டும், ஸ்பெஷல் வடையும் வைத்திருந்தேன், இதோ பிடிங்க! உங்கள் மனமார்ந்த பாராட்டுக்கு நன்றி தல! வாழ்த்துக்கு வணங்குகிறேன்! தற்சமயம், பெரிய ஆளாகும் எண்ணத்தை விட மூளைக்கு வேலை கொடுத்து வலையுலக நண்பர்களுடன் அளவளாவி மகிழ்வதே (அரட்டை அடிப்பதே) மேலோங்கி நிற்கிறது!

Paavai said...

Azhaga solli irukkeenga .. kalaaika vaipe kudukkala .. :) enakku enna thara poreenga, pudhu kadi pudu varusham pathu seinga ... please

மனம் திறந்து... (மதி) said...

தல, அக்கா: கடை போணி ஆன சந்தோசத்துல கை காலு ஓடல...இன்னா செய்யணுமோ அதை செய்யல பாருங்க! கொஞ்சம் கிட்ட வந்து ஒண்ணா நில்லுங்க...கடையத் தொறந்து வெச்ச பதிவுலக பெரும்புள்ளிங்க ரெண்டு பேருக்கும் "பொன்னாடை" போர்த்தறேங்க...(அட...தனித் தனியா தாங்க...தெரியாதா நமக்கு...உங்க ரங்குவும், தங்குவும் பாத்துகிட்டு இருக்காங்கன்னு!) ஹலோ...ஆடியன்ஸ்...கை தட்டுங்கப்பா...சும்மா "ஆ" ன்னு பாத்துகிட்டு இருக்கீங்க! (இந்தாப்பா...மைக்கை ஆப் பண்ணு... தல...அக்கா: உங்க ரெண்டு பேர் வீட்டுக்கும் ஒரு வருசத்துக்கு மளிகை சாமான் நம்ம கடைலேர்ந்து வந்துடுங்கோ...அட...ப்ரீயா தாங்க, இதை வேற நானு பப்ளிக்கா சொல்லணுமா என்ன?)

அக்கா...இன்னொரு முக்கியமான விஷயம் இப்ப சொல்லியே ஆகணும்(காதைக் குடுப்பீங்களா... சட்டுன்னு!) அகலிகைக்கு ராமர்...எனக்கு நீங்கள் (இது எப்டி இருக்கு?!). நெசமாத்தான் சொல்றேங்க...நம்புங்க!

மனம் திறந்து... (மதி) said...

பாவை வாங்க...நன்றி, வணக்கம்...இப்டி சொல்லி தப்பிச்சுட்டு ஓடினா எப்படி...உங்களுக்குள்ளே இருக்கிற விமர்சகரை உசுப்பி எழுப்பி கலாயுங்க..."அடிச்சி ஆடலேன்னா...ஆட்டமே ரசிக்காதே"(கொட்டேசன்: பிக்குணி மேடம்கிட்ட இருந்து சுட்டது!)
கடை போணி...அதனால வர்ற எல்லாருக்கும் வடை உண்டுங்க...இந்தாங்க பிடிங்க! அட...வீட்டுக்கு கொண்டு போக இன்னும் மூணு வடையா...சரி...சரி...உங்களுக்கு இல்லாததா...இந்தாங்க! (சற்று உள்ளே போய் மெதுவாக: டேய் பையா...இன்னும் கொஞ்சம் வடை வாங்கிட்டு வாடா... போ....சீக்கிரம்! வழக்கம் போல நம்ம கணக்கு தப்பாயிரும் போல!)

Porkodi (பொற்கொடி) said...

இப்ப இங்க யாரு அக்கா யாரு பெரும்புள்ளி ஒண்ணும் புரியலை. நீங்க 25க்கு கீழயா? அப்ப அக்கா. இல்லேன்னா சொக்கா. பிச்சிப்புடுவேன் பிச்சி.

மனம் திறந்து... (மதி) said...

கேடியக்கா: எங்க அண்ணாவுக்கு அப்பறம் தான் நான் பொறந்தேன்... 25 க்கு அப்புறம் தான் 35, 45 ல்லாம் பொறந்துது...அப்போ யாரு அக்கா?

சரி...சரி...கையை ஓங்காதீங்க....வழக்கம் போல "கேடியக்கா" ன்னே கூப்பிடுறேன்...ஓ.கே? இல்ல... இந்த வம்பெல்லாம் வேணாம் "பொற்கொடி"ன்னுதான் கூப்பிடணும்னு உத்தரவு போடுங்க, ஏத்துக்கிறேன்!

ஆதவா said...

கலக்கலுங்க... விமர்சனம் என்கிற போர்வையில் படைப்பை விட்டுவிட்டு படைப்பாளியை விமர்சிப்பவர்கள் இதைப் படிக்கலாம். உங்கள் முதல் பதிவே அர்த்தமுள்ளதாகவும், அனைவருக்கும் தேவைப்படுவதாகவும் இருக்கிறது.

வாழ்த்துக்கள்!

மனம் திறந்து... (மதி) said...

ஆதவா: வாங்க, வணக்கம், பாராட்டுக்கு நன்றி. உங்கள் முதல் கருத்து நான் சொல்ல நினைத்தது...(தானே வெளி வரும் என்று எண்ணி) சொல்லாமல் விட்டது. இரண்டாவது கருத்து பின்னூட்டத்தில் நான் எதிர் பார்த்தது...நீங்கள் சொல்லி விட்டது! என்ன ஒரு ஒற்றுமை பாருங்கள்!
வலைத் தளங்களில் கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக நான் கண்ட வாத எதிர் வாதங்கள், சண்டைகள், கலாய்ப்புகள், மிகக் குறைந்த அளவிலேயான நிஜமான, தரம் வாய்ந்த விமர்சனங்கள், கருத்துப் பரிவர்த்தனைகள் ... இன்ன பிறவெல்லாம் தான் என்னை இந்தத் தலைப்பில் எழுதத் தூண்டின என்பதென்னவோ உண்மை தான்! இந்த வரவேற்பும், அங்கீகாரமும் உண்மையில் மகிழ்ச்சி தருகின்றன!

நன்றி, உங்களுக்கும் என் வாழ்த்துகள் உரித்தாகுக!

மனம் திறந்து... (மதி) said...

ஆதவா : உங்கள் முதல் கருத்தை முன் வைத்து கொஞ்சம் விரிவாக "செய்யக் கூடாதது" என்று ஒரு புதிய பத்தி சேர்த்து விட்டேன். உங்களுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி!

Sh... said...

மதி, நல்லா பேரு செலெக்ட் பண்ணியிருக்கீங்க. தலைவர் டுபுக்கோட பெயர்க்காரணம் படிச்சுட்டு தானே இந்த பேர் வெச்சுக்கிட்டீங்க, எனக்கு அதுக்கு ஏதாவது கமிஷன் குடுத்துடுங்க (வேற என்னங்க பண்றது வீட்டுல உக்காந்தபடி வேற எப்படி காசு பாக்கறது?)

நல்லா எழுதி இருக்கீங்க - வாழ்த்துக்கள்.

தெய்வசுகந்தி said...

//ரெண்டு வாரம் ரூம் போட்டு யோசிச்சோம்ல?// கொஞ்சம் toooooo muchஆ தெரியல்? :-)!!

மனம் திறந்து... (மதி) said...

Sh...: வாங்க. "மதி" யைப் பிடித்துப் போனது மிக்க மகிழ்ச்சி. தல தாக்கம் இல்லாமலா?! யாவாரம் இன்னும் ஆரம்பிக்கவே இல்லை...இதுக்குள்ள கமிஷன் கேட்டா எப்பூடி? வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி...நன்றி!

தெய்வசுகந்தி: வணக்கம்...வாங்க, வாங்க! ஒரு வருஷம்னு சொன்னா ஒதைப்பாங்க மக்கள்னு ரெண்டு வாரம்னு பிட் போட்டேன்! இதுக்கும் எதிர்ப்பா? சரிங்க...பெரும்பாலான ப்ளாகர்கள் போலவே நானும் கொஞ்சம் கூட யோசிக்காம தான் செஞ்சேன், போதுமா? அடடே...நீங்க விட்டுட்டீங்க ...மத்த எல்லாரும் இப்ப அடிக்க வராங்களே... ஐயோ... இது மூட்டைப் பூச்சிக்கிப் பயந்து (அட! உங்களைச் சொல்லலீங்க...நீங்க வேற!) வீட்டைக் கொளுத்தின கதையாப் போச்சே...ஆளை விடுங்கப்பா...பதிவுலகில் இதெல்லாம் சகஜமப்பா! மீ எஸ்கேப்பு!

மனம் திறந்து... (மதி) said...

sh...: அது சரி... தல தாக்கத்துல நான் பேரு வைச்சுகிட்டேன்னே வைங்க...! அதுக்காக உங்களுக்கு எதுக்கு கமிஷன் குடுக்கணும்???? இது இன்னாபா அநியாயமா கீது??? கடைத் தேங்காய எடுத்து வழிப் பிள்ளையாருக்கு ஒடைக்கிற ஜகஜாலக் கில்லாடியா இருக்கீங்களே?!

தக்குடு said...

விமர்சனத்துக்கே விமர்சனமா, பிரமாதம் தான்..:) பெரிய பெரிய ஆட்கள் எல்லாம் வந்து காபி குடிச்சிட்டு வாழ்த்திட்டு போயாச்சு போலருக்கு! இந்த சின்னப்பயலோட வாழ்த்துக்கள்!

என்றும் வம்புடன்,
தக்குடு

மனம் திறந்து... (மதி) said...

தக்குடு: வாங்க...வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி. ஆமாங்க...வந்து போனாங்க.நீங்க கொஞ்சம் லேட்டு அவ்ளோதான். ஆனாலும், இன்னைக்கு முதல் விசிட்டு உங்களோடது தான்...பிடிங்க வடை...பயப்படாதீங்க...! இது இன்னைக்குப் போட்ட வடை தாங்க!

Sh... said...

ஆஹா..தலைவர் கிட்ட நான் தாங்க கடைசியா பெயர்க்காரணம் கேட்டேன். அத தான் mean பண்ணினேன். அதுக்கு போயி இவ்ளோ கோவிச்சுக்கறீங்க.

சரி அது என்னங்க வடை - ஒண்ணும் புரியலையே. (கமிஷன் இதுல அட்ஜச்ட் பண்ணிக்கலாம்)

Prabu Krishna said...

இதுக்குதாங்க விமர்சனமே பண்றது இல்ல(பண்ண தெரியாதுங்கறது வேற).

பதிவுக்கு வாழ்த்துகள்!!!

word verification எடுத்து விடவும்.

(Dashboard-->settings--> comments-->word verification --"NO")

Philosophy Prabhakaran said...

நீங்கள் என்னுடைய "இனி, எனது சினி விமர்சனங்கள்" பதிவை படித்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்... இந்தப்பதிவு எனது பதிவிற்கு பதில் சொல்லும் விதமாக தோன்றுகிறது... ஒருவேளை எதேச்சையாக அமைந்ததோ என்னவோ...

மனம் திறந்து... (மதி) said...

Sh...: ஓ அப்படியா சேதி! சரீங்க...! கமிஷன் விஷயம் வருஷக் கடசீல பாத்துக்கலாங்கோ!


பலே பிரபு: வாங்க...வணக்கம். வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி! நீங்க சொன்னதை செஞ்சுட்டேங்க...நன்றி!


PP: //இந்தப்பதிவு எனது "இனி, எனது சினி விமர்சனங்கள்" பதிவிற்கு பதில் சொல்லும் விதமாக தோன்றுகிறது... ஒருவேளை எதேச்சையாக அமைந்ததோ என்னவோ...//

அடடா...உங்கள் பதிவைப் படிக்கவில்லையே நான்...உடனே படிக்க வேண்டுமே...சுட்டியைத் தருவீர்களா?

Arul Kumar P அருள் குமார் P said...

வாங்க மதி...! முதலில் வாழ்த்துக்கள். உங்கள் "விமர்சனம்...ஒரு பார்வை!" பதிவு நொம்ப நல்லா இருக்குங்க. எப்படி இப்படி ஆழமா சிந்தித்து எழுதுனிங்க...! //தவிர்க்க வேண்டியது,செய்யக் கூடாதது// தலைப்புல சொன்னா விஷயம் நொம்ப கரைகிட்டுங்க. ஆட்டோ வர முடியாத குறுக்கு சந்துல நாம வீடு இருக்கணும்னு சொன்னது நொம்ப வாஸ்தவம்...! உங்கள பின் தொடரலாம்னு இருக்கேன். கடைல நெறைய மேட்டர் இருக்கும்னு நம்புறோம். (தெலுங்குல மட்டலாடுவின்களா மதி...)

மனம் திறந்து... (மதி) said...

அருள் குமார்: வாங்க! வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி! நான் சொன்னதும், சொன்ன விதமும் உங்களுக்குப் பிடித்துப் போனது மகிழ்ச்சியே! மற்றவர்களிடம் இப்படிப்பட்ட தளங்களில் நம் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளும் போது, கொஞ்சம் ஆழமான சிந்தனை வெளிப்படுவது அவசியம் என்று நான் நினைக்கிறேன்!
//கடைல நெறைய மேட்டர் இருக்கும்னு நம்புறோம்//... நானும் உங்க கூட சேர்ந்து நம்புறேங்க...நம்பிக்கை தானேங்க வாழ்க்கையின் ஆணிவேர்!
தெலுங்கு ஓரளவுக்குப் பேசுவேங்க...கொஞ்சம் நல்லாவே புரிஞ்சுப்பேங்க...ஆனாலும், மனம், மதி, உடல், உயிர், ஆத்மா, நரம்பு, ரத்தம், மூச்சு எல்லாமே தமிழ் தாங்க!

Post a Comment

ஆஹா! நீங்க மனம் திறந்து பேசவேண்டிய கட்டம் வந்தாச்சு!