ஒரு ஞாயிறு பிற்பகல், வழக்கம் போல், அண்ணா நகர் சாந்தி காலனியில் உள்ள என் நண்பன் அரவிந்தனின் வீட்டில் பேசிக் கொண்டிருந்த போது, அவர் திடீரென்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார் பாருங்கள்: "லேனாவுக்கு உன்மேல் கோபம்" என்று, ரொம்பவும் கூலாக! கேட்ட நானோ அதிர்ந்து போனேன்! ஏன்? எதற்காக? எப்படி? எப்போது நடந்தது இது? என்று ஆயிரம் கேள்விகள் என் மண்டைக்குள் சுற்றிச் சுற்றி சூறாவளியாய் உருவெடுத்தன, சுனாமி போலவே தலைமுடி வேர்களில் வந்து மோதித் தாக்கின! தலையே வெடித்து விடும் போலிருந்தது எனக்கு!
"நீ என்னவோ அவரிடமிருந்து விலகிச் செல்கிறாயாமே, அவரைக் கண்டு கொள்வதில்லையாமே?" இது தான் அவர் கோபத்துக்குக் காரணம் என்றார் என் நண்பர். மேற்கொண்டு துருவிக் கேட்டதற்கு, இவ்வளவு தான் எனக்குத் தெரியும் இதற்குமேல் என்னைக் குடையாதே என்று அலுத்துக் கொண்டார் நண்பர். என்னடா இது நிலைமை இவ்வளவு மோசமாகி விட்டதே என்று நொந்து போன நான், சரி கிளம்பு, ஒரு எட்டு போய் அவரைப் பாத்துப் பேசிட்டு வந்திடலாம்னு சொன்னேன்! நண்பனின் வீட்டில் இருந்து கூப்பிடு தூரத்தில் தான் லேனாவின் வீடு. உடனே கிளம்பினோம்!
நல்ல காலம், நாங்கள் போன போது அவர் வீட்டில் இருந்தார்! அப்பாடா...என்று நானும் என் மனதைத் தேற்றிக் கொண்டேன்! விவரிக்க முடியாத ஒரு ஆச்சரியம் அவர் முகத்தில் தெரிந்தது! அப்போது, அங்கே எங்களை அவர் நிச்சயம் எதிர் பார்க்கவில்லை! ஆனாலும், அவருக்கே உரிய வாஞ்சையான, இன்முகத்துடன் எங்களை வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றார் லேனா!
முறையான முதல் அடுக்குப் பரிமாற்றங்கள் நடந்தேறின! குசல விசாரிப்புகள், நண்பர் நலன்கள் சினிமாப் பட டைட்டில்ஸ் மாதிரி ஓடி ஓய்ந்தன! அடர்த்தியான, அருமையான, சுவை நிரம்பிய பழச்சாறு மூன்று தடித்த கண்ணாடி தம்ளர்களில் வந்து இறங்கியது முக்காலியின் மேல் எங்களுக்காக!
நான் வீடு தேடி வந்ததையே மிகவும் ஆச்சரியமாகப் பார்த்தும், நினைத்தும் கொண்டிருக்கும் லேனாவிடம் மெதுவாகப் பேச்சை ஆரம்பித்தேன், பழச் சாற்றைப் பதம் பார்த்துக் கொண்டே! எதோ என்மேல் கோபமாக இருக்கிறீர்களாமே, அரவிந்தன் இன்று தான் சொன்னார் என்றேன், நண்பனைக் காட்டி. அடடே, அது ஒண்ணும் இல்லைங்க என்று முதலில் மழுப்பினார், லேனா.
நான் விடாமல் வற்புறுத்தியதின் பேரில் தொடர்ந்து பேசினார்: அது ஒண்ணும் பெரிசா இல்லீங்க....போன வாரம், கல்லூரியில் உங்களைப் பார்த்துக் கை அசைத்தேன், சிரித்தேன், நீங்கள் கண்டு கொள்ளாமலே போய்விட்டீர்கள், அது எனக்கு மிகவும் வருத்தத்தைத் தந்தது, என்றார்! மேலும் சற்று விவரங்கள் கேட்டறிந்த பிறகு நான் என் நிலையை விளக்கினேன்: நான் உங்களை உண்மையிலேயே கவனிக்கவில்லை! வேறு நண்பர்களோடு பேசிக் கொண்டு போனதில் உங்களைப் பார்க்காமலேயே சென்று விட்டிருக்கிறேன்! இது தான் உண்மை! இல்லா விட்டால் உங்களை நான் அலட்சியம் செய்ய வேண்டிய காரண காரியம் எதுவுமே இல்லையே, என்னை நம்புங்கள் நண்பரே என்றேன்! நானும் அப்படித்தான் நினைத்தேன், ஆனாலும் என்னவோ, நீங்கள் என்னிடமிருந்து விலகிப் போக விரும்பியதாக உணர்ந்து கவலைப் பட்டேன், ஆதாரமில்லாமல், என்றார் லேனா.
உண்மையைப் புரிந்து கொண்ட பின் அவர் தூக்கிப் போட்டது தான் மிகப் பெரிய குண்டு! நான் ஏதோ அரவிந்தனிடம் இப்படிச் சொன்னதை நீங்கள் இவ்வளவு சீரியசாக எடுத்துக் கொண்டு, என் வீடு தேடி வந்து நிலைமையை விளக்கி நட்பை நிலை நாட்டுவீர்கள் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை...நீங்கள் உண்மையிலேயே மிக உயர்ந்த மனிதர் தான்.... A True Gentleman! என்றாரே பார்க்கலாம்! எனக்கோ கையும் ஓட வில்லை, காலும் ஓடவில்லை! நண்பரே, ஏன் இதை இவ்வளவு பெரிசு படுத்துகிறீர் என்று அவரைச் செல்லமாய்க் கடிந்து கொண்டு, மேலும் கொஞ்ச நேரம் அளவளாவி மகிழ்ந்து பின் லேனாவிடமிருந்து பிரியா விடை பெற்றோம், நானும் அரவிந்தனும்!
இது நடந்தது: நாங்கள் பச்சையப்பன் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது, எழுபதுகளில்! அவர் தமிழ் இலக்கியமும், நான் ஆங்கில இலக்கியமும் படித்துக் கொண்டிருந்த காலம்! பசுமையான, நெஞ்சை விட்டு நீங்காத இனிய நினைவுகள், என் பிரிய வாசகர் ஒருவர் உபயத்தில் இன்று மேலே வந்தன நீர்க்குமிழிகள் போல!
லேனா இன்று எழுதுவது எல்லாம் இவ்வாறு வாழ்ந்தும், உணர்ந்தும், சுவைத்தும், தெளிந்தும் பதப்படுத்தப்பட்ட வாழ்க்கை நெறிகளும், வாழும் வழிகளும், வெற்றிப் படிகளும் தானேயன்றி வியாபாரத்துக்காக அச்சிடப்படும் வெறும் வார்த்தைகள் அல்ல என்பதை அவரை அறிந்தவர்கள் அறிவார்கள்!
Lena is a True Gentleman to the Core in every sense of the term!
- மனம் திறந்து... (மதி).
இலவச இணைப்பு:
- என் வாசக நண்பர் ஒருவர், மின்னஞ்சல் மூலம் எதேச்சையாகப் பேசிக்கொண்டிருக்கும் போது, லேனாவை ஒரு நிகழ்ச்சியில் பேச அழைக்கப் போவதாகச் சொன்னார். அவருக்கு எழுதிய பதிலாக ஆரம்பித்தது தான் இந்தப் பதிவு.
- மிகப் பெரிய விஷயம் ஒன்றும் இல்லை! ஆனால் சுவையான அனுபவம் தானே, நிறையப் பேர் ஆவலோடு படிப்பார்களே என்று தான் இங்கேயே பகிர்ந்து விட்டேன்!
- தான் தமிழ்வாணன் மகன் என்பதை மறந்தும், மறைத்தும், லக்ஷ்மணன் ஆகவே எங்களுடன் இயல்பாகப் பழகினார் லேனா என்பதே இப்பதிவின் அடிநாதம்! வேறு எந்த விதமான உள்நோக்கமும் இல்லை, இல்லை, இல்லவே இல்லை!
- ஒரு சிறிய முடிச்சை வைத்து ஒரு சுவையான பதிவை(?!) எழுதுவது எப்படி என்று நான் கற்றுக் கொள்ள உறுதுணையான முயற்சி என்று வேண்டுமானால் சொல்லலாம்!
- பொதுவான செய்தி: வாழ்க்கையில் உயர்பவர்கள் பெரும்பாலும் திடீரென்று முளைப்பதில்லை! ஒரு நீண்ட நெடும் பயணத்தில், தங்களைத் தயார் செய்து கொண்டு, பலவாறான இடர்களையும், பரிசோதனைகளையும், தனிமனித வாழ்வின் சுக, துக்கங்களையும் கடந்து, பல்வேறு நிலைகளிலும், வகைகளிலும் சமுதாயம் இவர்களைப் பதம் பார்த்துப் பரீட்சை செய்த பிறகு, இவர்கள் நமக்குத் தேவையானவர்கள் என்று உணர்ந்து, தட்டிக் கொடுத்துத் தளமும், தடமும் அமைத்துக் கொடுக்கும் வரையிலும் பொறுத்திருந்து, தம் தேடலை அணையா விளக்காக அடைகாத்து, உயிரூட்டி வளர்ப்பதால் மட்டுமே இது சாத்தியமாகிறது என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை!
- Lena's Photo, courtesy: http://www.tamilvanan.com/