Monday, March 28, 2011

நன்றாக வாழ வேண்டுமா? சரியாகச் சாப்பிடாதீர்கள்!

என்னங்க இது, தலைகீழாப் பேசறீங்களே, நேத்து வரைக்கும் நல்லாத்தானே இருந்தீங்கன்னு தானே கேக்கறீங்க! ஆமாங்க, இது ஒரு வித்தியாசமான சிந்தனை தாங்க! (அப்படி சிந்திச்சா தானேங்க "தரமான பதிவு" எழுத முடியும்? பின்னூட்டத்துக்கு  சூசகமா ஒரு "குறிப்பு" குடுத்துட்டேன்! எவ்வளவு தூரம் "வொர்க் அவுட்" ஆவுதுன்னு பாப்போமே :)) ) சரி, மொக்கை போதும்...  விஷயத்துக்கு வருவோம்! 

"சாப்பாடு கசக்குதே!"  என்று சொன்னதால்  அந்தக் காலத்தில்  குருகுலத்தை விட்டே  வெளியேற்றப்பட்ட  மாணவனின்  கதை உங்களுக்குத் தெரியுமல்லவா?! (தெரியாதவர்கள் கேட்டுத் தெரிந்து கொள்ளவும்!...என்னது? என்னோட மனைவியின் சமையலைப் பற்றி நானே குறை சொல்லாதபோது இவன் யார் சொல்வதற்கு என்ற கோபத்தில் தான் குரு அவனை விரட்டி அடித்தாரா...? அட...இந்தக் கோணம் கொஞ்சம் புதுசாத்தாங்க இருக்கு! ). இன்றைய கால கட்டத்தில், இதே நிபந்தனை இருந்தால், ஒரு பய கூட ஹாஸ்டல்லே தங்கிப் படிக்க முடியாதுங்களே! நல்ல வேளை, தப்பிச்சாங்க, பசங்க!

இன்று வரை, நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்று கூடத் தெரியாமல் சாப்பிட்டது,  சரியாகச் சாப்பிடாமலே  எழுந்து போனது அல்லது சாப்பாட்டையே    சுத்தமாக  மறந்து  போனது  எப்போது? எதற்காக? (கொசுவத்தி சுழலத் தொடங்கிவிட்டது...)

  • எல்லாம் ஒத்துப் போகிற இந்த வரனாவது, கடைசி நேரத்தில் எந்த வில்லங்கமும் வராமல், செட்டாகி, நம் பெண்ணின் திருமணம் நடந்தேறுமா என்ற ஆதங்கத்தை,  ஏக்கமிகு எதிர்பார்ப்பை  சற்று முன் வந்த கனிவான தொலைபேசி அழைப்பு  சற்றே தணித்து, மனதில் கொஞ்சம் பால் வார்த்து பசியைப் போக்கிவிட்டதே, அப்போதா?
  • பையனுக்கு Campus Placement மூலம் அகில உலகப் புகழ் பெற்ற (ஆனால் உள்ளே என்னவோ ஆண்டாள் பாடசாலை மாதிரியே இயங்கும்) நம்நாட்டு   top tier IT கம்பெனியில் வேலை கிடைத்து விட்டது அறிந்து, இரவு முழுவதும் தூங்காமல், மறுநாள் காலை 6 மணி முதல் மாலை 8 மணி வரை, வருவோர் போவோர்க்கெல்லாம் சொல்லி மகிழ்ந்து, லட்டை வாரிக் கையில் திணித்து, நீங்கள் என்னவோ பச்சைத் தண்ணிகூட வாயில் படாமல் கார்யசித்தி விரதம் இருந்து, உடலும் மனமும் லேசாகி, நிஜமாகவே காற்றில் (50000 அடி உயரத்தில்) பறப்பது போல் உணர்ந்து, துவண்டுபோய், ஏதாவது குடும்மா என்று ஈனஸ்வரத்தில் முனகிக்கொண்டு,  உங்கள் மனைவியின் தோளில் வந்து சரிந்தீர்களே... இரவு 9 மணிக்கு,  அப்போதா?
  • அலுவலகப் பிரச்சினையை மனதில் போட்டு உழப்பிக்கொண்டு, எப்படி மேலதிகாரியை இன்று சமாளிப்பது என்று குழம்பிப்போய் இரண்டாவது இட்லியைப் பாதி தின்றுவிட்டுத் தட்டிலேயே  (மீதமுள்ள  இரண்டரை இட்லிமேல்) கைகழுவியபோது, நிஜமாகவே பயந்துபோன உங்கள் மனைவி உங்களைப் பார்த்து மிரண்டு நின்றாரே,  அப்போதா?
  • பையனுக்குப் பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்து விட்டது...ஆனால் கட்ட வேண்டிய பணத்துக்கு இன்னும் வழி பிறக்கவில்லையே என்று இரண்டு நாள் பசியும், உறக்கமும் இன்றித் தவித்தீர்களே..., அப்போதா?
  • காதலி காத்துக் கொண்டிருப்பாள், ஏற்கெனவே நேரம் கடந்து விட்டது என்று  அம்மாவிடம் சொல்ல முடியாமல், அரைகுறையாய்ச் சாப்பிட்டு, அலறி அடித்துக் கொண்டு  ஓடினீர்களே,  அப்போதா?
  • உங்களுக்குப் பிடித்த கல்லூரியில் நீங்கள் விரும்பியபடியே ECE  கிடைத்த பேரானந்தத்தில் சாப்பிடாமலேகூட, கொஞ்சம் பயமும், நிறைய  சந்தோஷமும் மனதில் சுமந்துகொண்டு  முதல்நாள் கல்லூரிக்குப் பறந்து சென்றீர்களே, அப்போதா?
  • ஒருபிடி தயிர் சாதமும், அரை டம்ளர் மோரும் போதும் என்று சொல்லிப் புறந்தள்ளிவிட்டு, உலகத்தையே உங்கள் தலைமேல்  சுமப்பது போன்ற ஒரு கனமான உணர்வுடன், அது கருங்கல்லா, பிள்ளையாரா என்று கூடப் பார்க்காமல் வழியில் தென்படும்  எல்லாத்தையும் வேண்டியபடி,  "பிளஸ் டூ" பொதுத்தேர்வு எழுதப் புறப்பட்டுப் போனீர்களே, அப்போதா?
  • பள்ளிக்கூடத்திலிருந்து வந்ததும் வராததுமாய், பையை ஒரு மூலையில் வீசி விட்டு, சீருடையைப் படுவேகமாய்க் களைந்து எறிந்து,  கையில் கிடைத்ததை  எடுத்து மாட்டிக் கொண்டு (கொஞ்சூண்டு சாம்பார் சாதத்தை வாயில் வைத்துக்கொண்டே... "சாப்டுட்டுப் போயேண்டா..." என்ற அம்மாவின் கூக்குரலைக் காதில் போட்டுக் கொள்ளாமலே) நண்பர்களோடு விளையாட வீதிக்கு ஓடினீர்களே, அப்போதா?

இவையெல்லாம்  நீங்கள் வாழ்க்கையின் அடிநாதத்தோடு   இரண்டறக் கலந்த தருணங்கள்...! உண்மையில் சொல்லப் போனால் நீங்கள் மகிழ்ந்தும், குழம்பியும், மயங்கியும், மலைத்தும், வருந்தியும், பயந்தும், லயித்தும் வாழ்ந்த தருணங்கள்!  

இப்போது சொல்லுங்கள்...நான் சொன்னது சரிதானே? 

அன்புத் தாய்மார்களே! சாப்பிடுவதற்காகவே வாழ்பவர்களுக்குச் சமைத்துப் போடுவதை விடவும், இப்படிச் சரியாகக்கூடச்  சாப்பிடாமல், வாழ்வதற்காகவே சாப்பிடுகிற இவர்கள் (வலைப்பூக்கள் எழுதுபவர்களும் இதில் அடக்கம்தானே!), அலைபாயும் பிறவிப் பெருங்கடலின்  கரையோரம்,  வாழ்க்கைப் படகிலிருந்து மெல்ல இறங்கி, அடுத்த வேளை அமைதியாகச் சாப்பிட  வரும் போது முகம் கோணாமல், ருசியாய் சமைத்துப் போடுங்கள், அன்பாய்ப் பரிமாறுங்கள்...!  உங்களுக்கு சொர்க்கம் நிச்சயம்... இங்கேயும், அங்கேயும்!

அம்மாடியோவ் ... தாய்மார்கள் கரண்டி, அன்னக்குத்தி, கண்ணைக்குத்தி, பிடியில்லாத கல்கத்தா  கடாய், அண்டான், குண்டான், என்று  கையில் கிடைத்ததை  எல்லாம்  எடுத்துக் கொண்டு அடிக்க வருகிறார்களே! சரி  சரி...மிகுமின்காந்த விசையின் உதவியுடன் "எந்திரன்" ரஜினியின் "சிட்டியாண்டவர்" அவதாரம் எடுக்கவேண்டியதுதான்! ஹப்பாடா! தப்பித்தோம்!

அடடே...எல்லாரும் விழுந்து கும்பிட ஆரம்பிச்சுட்டாங்களே...ஐயோ கடவுளே! இது என்ன கலாட்டா? எழுந்திருங்கம்மா...நீங்களோ, நானோ எந்தத் தப்பும் பண்ணலை! இந்தாங்க, அவங்க அவங்க பொருளைப் பார்த்து எடுத்துகிட்டு வீடு போய்ச் சேருங்க, போதும்! ஆளை விடுங்க தாயீ! நான் சொன்னது ஒரு சின்னக் கருத்து தானே, வேதவாக்கு இல்லையே! பிடிச்சா சந்தோஷப் படுங்க! இல்லையா... மறந்துடுங்க, அவ்வளவுதான்....! இதுக்கெல்லாம் உணர்ச்சிவசப்பட்டா வேலைக்கு ஆகுமா...?!

- மனம் திறந்து ...(மதி).

பின் குறிப்பு: 
  1. நான் இன்னும் பிரபல பதிவர் ஆகலை! அதனால, கட்டாயம் ஓட்டுப் போடணும், template கமெண்டாவது போடணும், ஏன் அடிக்கடி இந்தப் பக்கம் வரமுடியலை என்று ஒப்புக்குச் சப்பாணியா ஒரு விளக்கம் சொல்லணும்கிற நிர்ப்பந்தமெல்லாம் இங்கே இல்லை உங்களுக்கு ...! 
  2. நீங்க பாட்டுக்கு சும்மா ஜாலியாப் படிச்சிட்டுப் போயிட்டே இருக்கலாமுங்கோ!
  3. என் தரப்பிலிருந்து நான் மட்டும் உங்களுக்கு நன்றி சொல்றேங்க...! இந்தப் பக்கம் எட்டிப் பார்த்ததுமில்லாம, இந்தப் பதிவையும்    பொறுமையாப் படிச்சிட்டுப் போறீங்களே, அதுக்காக! விருந்தோம்பல் தலைசிறந்த தமிழ்ப் பண்பாடு இல்லீங்களா?

Thursday, March 17, 2011

தலைப்பு, மேட்டரு... தனிக்குடித்தனம்! (PASSWORD புதையல்: பாகம் - 2 )

 
நான் ஏற்கெனவே சொல்லியிருந்தபடி ,  PASSWORD புதையல் பற்றிய பரபரப்பான, சுவாரஸ்யமான  இரண்டாவது பதிவு இது.  பிரபலங்களும், சமுதாயத்தில் பலதரப்பட்ட மக்களும் எப்படியெல்லாம் ரகசியப் புதையல் தேர்ந்து எடுக்கலாம், எடுப்பார்கள் என்று ஒரு அழகான கற்பனை இங்கே விரிகிறது, உங்கள் முன்னால், உங்களுக்காக!

Software Developer (Debugging பிடிக்காதவர்)
ஆணிய , நானே  புடுங்கணுமா ? எங்கே  வச்சேன்னே தெரியலையே!
 
அலுவலக சுகவாசி
சம்பளம் வாங்கறேல்ல, வேலையைப்பாருண்றானே! இன்னாய்யா இது புதுக்கதை?

வேலைக்காகவா ஆபீசுக்கு வர்றோம்? நம்ம சந்தோசத்துக்கும், பிகருக்காகவும்தானே!

நம்ம கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்டாங்களா! ஒலகம் உருப்படாதுய்யா!

வேலைக்குப்  போகும்  பெண்மணி  
அடிச்சிப்பிடிச்சி ஆபீசுக்கு வந்தாச்சு! ஸ்ஸ்ஸ்...இனிமேத்தான் ரெஸ்டு !!

வரவர இந்த மேனேஜர் பார்வையே சரி இல்லையே!

இவங்க குடுக்கற சம்பளத்துக்கு... டயத்துக்கு வரணுமாமே? ஜோக்குப்பா!!

புது மணப்பெண்
சொர்க்கமும் (கணவன்) நரகமும் (மாமியார்)  ரொம்ப கிட்டகிட்டே  இருக்கே! அதெப்படி?

புது மாப்பிள்ளை 
முப்பது நாளுக்குள்ளேயே,  நல்லவன் வேஷம் உசிர வாங்குதேய்யா!

பழம்"பெரும்" நடிகையின் பரம ரசிகன் 
உச்சியிலே இருந்தப்ப நச்சுன்னு இருந்தீங்க! இப்ப, கேப்பாரில்லாத பீப்பாயா!? :((((

சினிமா இயக்குனர் 
நடுநிசி: தியேட்டரில் தலைப் பிரட்டை, பதிவுலகில் சுறா!

மைனா: பட்ஜெட் வெங்காய வெடி, பாதிப்பு அணுகுண்டு!

சினிமாப் பைத்தியம் 
நாலு நாளாச்சு சாப்பிட்டு! நாப்பது வாட்டி எந்திரன் பாத்தாச்சி!

பிரபல  கவிஞர் 
உடைச்சி மடிச்சி எழுதினாலே,  உயிரை விடறாங்களே கவிதைன்னு!

விக்கல்  முனகல் சேக்கலன்னா , விக்க முடியாதே ஊருக்குள்ளே!

அம்மா ஒப்பாரியை சுத்தமா எழுதினா, அமர்க்களமான கவிதைங்கறாங்க?!

சங்கத் தமிழையும் சென்னைத் தமிழாய் சரிபண்ணாத்தான் சினிமாக் கவிஞன்?!

பிரபல பாடகி 
கீச்சுக்குரலாலேயே பிரபலமாயிட்டமே, குரல் நல்லாருந்தா... கல்யாணமே ஆயிருக்குமோ?

பள்ளி ஆசிரியர்
நீ  ஜென்மத்துக்கும் உருப்படமாட்ட ; பன்றி  மேய்க்கத்தான் லாயக்கு!
(அவிங்க  வாத்தி  அவரைத் திட்டுனது, மனதில் இன்றும் பசுமையாய்! என்னா ஒரு தீர்க்கதரிசனம் பாருங்க!?)

மனைவி (சமைச்சுப் போட்டே சலித்துப் போனவர்)
உங்களுக்கு சாப்பாடு தான் முக்கியம்னா, சமையல்காரியைக்  கட்டிக்கிட்டுருக்கணும்!
 
புதிய பதிவர்
சரக்கில்லாமலே பிரபலமாயிட்டாங்களே?  லேட்டா வந்தது நம்ம தப்புய்யா!

இப்படியெல்லாம் எழுதறாங்களே, மக்காஸ் ரூம் போட்டு யோசிப்பாங்களோ?

தமிழ்திரட்டி 'வெப்மாஸ்டரை'   சிங்கப்பூர் அனுப்பலாமா ? பணத்துக்கு  வழியென்ன ?! 

போட்டோ, மொபைல், முகவரிகூட  போட்டாச்சு! ஆத்தா நான் பிரபலமாயிட்டேன் !!!!!!
  
பிரபல பதிவர்
வாரத்துக்கு மூணு பதிவுக்கு ஒப்பேத்தலாம், மீதிக்கு எங்கய்யா போறது?
(சரக்கு, சரக்குன்னு கூவற கூட்டத்துக்குச் சவுக்கடி!)

உருப்படியா ஒண்ணும்  தெரியாதவனெல்லாம்  பதிவெழுத ஆரம்பிச்சிட்டான்? வெளங்கிடும்*@!

துட்டுதான் இல்ல, புத்தியுமா...?  'வெப்மாஸ்டரை' கவனிச்சா வேலைக்காகுமா?!

வலைச்சரமே  சீந்தலையாம், தமிழ்மணத்துல தாதா ஆவணுமாம்?  உட்ருவமா?

ரசிகர்கள் மாநாடா!? இருக்கறது ஒருத்தன்,  மீதியெல்லாம் பினாமி (நானேதான்)!
(போடாங்...#$!@&*! ஐடியா குடுத்த அல்லக்கையை அடித்து நொறுக்குகிறார்)!

நம்ம ஜால்ராக் கூட்டத்துக்கு இலவசமா மொபைல் குடுத்துட்டோமில்ல?

ஓட்டு கம்மியாவுதே! talktime  காலின்னு சொல்றாங்க பசங்க!?
(யோவ், கணக்கு...! எல்லாத்துக்கும் ரீசார்ஜ்  பண்ணித்தொலைய்யா! பேசனது,  மாசத்துக்கு முன்னூறு ரூவா, இப்ப ஐநூறுக்கு அடிபோடறானுவளே...? இது கட்டுப்படியாகாது... புதுப் பசங்கள புடிக்கணும்! அடுத்த வாரம் Campus Recruitment  ஏற்பாடு பண்ணுய்யா !!!)

ஹூம்! சரக்குக்குத் தலைப்பு தேடின காலமெல்லாம் போச்சே!

கார சாரமான பதிவு(ன்னு தெரியாமல்) போட்டவர்?!
பின்னூட்டம் போடுங்கண்ணா,  பின்னை  உருவிட்டுக்  கைக்குண்டை  வீசுறாங்களேய்யா !

{போன வாரம் (11/03/2011), இப்படித்தான், வீதியிலே (தன் பதிவிலேயே) நடக்கற ரணகளத்தை எட்டா(வ)து மாடியிலிருந்து பயந்து பயந்து எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார், ஒரு பிரபல பதிவர்!}

பதிவுலக நோக்கர் (பெரியவர் சீனா மாதிரி!) 
மெட்டுக்குப் பாட்டு, ஹிட்டுக்குத் தலைப்பு! மேட்டரா!? அப்படீண்ணா?

தலைப்பும் மேட்டரும் ஒத்துப் போகலை, தனிக்குடித்தனம்,  நிர்ப்பந்தம்!

பெயரில் மட்டுமே அப்பாவா, கூடவே வச்சுக்கப் பாருங்கய்யா!

அப்பாடா! நான் நிறுத்திட்டேங்க, இனி நீங்க கோதாவிலே இறங்கலாம்! தட்டி உடுங்க கற்பனைக் குதிரையை!  எனக்கும் சொல்லுங்க...கேக்கறேன்!

அது சரி, ஜோக்கெல்லாம் நல்லாத்தான் இருக்கு (நீங்க சொல்றீங்களோ இல்லியோ, நம்பளே நைசா ஒரு பிட்டைப் போட்டு வைப்போம்...)! ஆனா, இந்தப் "PASSWORD புதையல்" என்னது? ஒண்ணும்  புரியலியேண்ணு   கேக்கறவங்க,   இந்தப் பதிவின் முன்னோடியான (முதல் பகுதி) PASSWORD புதையல்! வாங்க... வாங்க... அள்ளிட்டுப் போங்க!  படிங்க, எல்லாம்  விளங்கும்!

- மனம் திறந்து ...(மதி).


பின் குறிப்பு:
  1. உறுதிமொழி: இந்தப் பதிவு முழுக்க முழுக்க நகைச்சுவைக்காகவே பகிரப் பட்டது. யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதியது இல்லை, இல்லை, இல்லவே இல்லை!  இந்தப் பதிவில்  உண்மை இருக்க வாய்ப்பே இல்லை! அப்படி என்னையும் மீறி {இப்பத்தான் எல்லாத்துலயும் கலப்படம் ஜாஸ்தியாப் போச்சுங்களே, சுத்தமான பொய் கூட எல்லா எடத்துலயும் கிடைக்கறதில்லீங்க :(((  நல்ல காலம் தேர்தல் வந்துடுச்சி, இப்பக் கொஞ்சம் சுலபமாக்  கிடைக்கலாம் ! :))) எங்க, அவங்க கூட இப்பல்லாம் ஒருத்தரை ஒருத்தர் சகட்டுமேனிக்குத் திட்டி உண்மை பேசறதுலேயே நேரத்தை வீணாக்கிடறாங்க! :))) } எங்காவது உண்மை தென்பட்டால் அதுக்கு நான் நிச்சயமா பொறுப்பு இல்லீங்கோ!! இது நான் வணங்கும் தமிழ்மணம் மீது சத்தியம்!!!
  2. உதற(ல்)மொழி : இவ்வளவு சொல்லியும் நம்பாம, யாராவது நம்பளை மிரட்டவோ, பயமுறுத்தவோ, துன்புறுத்தவோ, வருந்த வைக்கவோ  முயற்சி பண்ணா, அப்புறம் நான் சும்மா இருக்க மாட்டேன்!! இந்த வலைத்தளத்தையே மூடிட்டு, பழையபடி மாடு மேய்க்கப் போயிடுவேன்! ஆமா...சொல்லிப்புட்டேன்!!  ஜாக்ரதை!!!
  3. மறைமொழி : (ரகசியம்...) அப்புறம் பொழைப்புக்கு என்ன பண்ணுவேனா? ஹையோ, ஹையோ! நம்பளை யாருன்னு நெனச்சீங்க? தனிக்கட்சி ஆரம்பிச்சி, பத்து சீட்டு கேக்கப்போறேங்க! இப்ப உட்டுட்டா, இன்னும் அஞ்சு வருஷம் வயித்தைக் கழுவறது எப்பிடி? 

Monday, March 14, 2011

PASSWORD புதையல்! வாங்க... வாங்க... அள்ளிட்டுப் போங்க!


வாங்க, வணக்கம்! என்னது? பிரபல "கத்தரிக்காய்" பதிவரோட  கடவுச் சொல் (PASSWORD) வேணுமா? அட இருங்க,  இப்படி ஒரேயடியா அவசரப் பட்டா எப்படி? மொதல்ல இதக் கேளுங்க! மத்தவங்க கடவுச் சொல்லைத் தெரிஞ்சிக்கறதுக்கு முன்னாலே, உங்க கடவுச் சொல் எப்படிப் பட்டது, உங்களையும், உங்க ரகசியங்களையும், சொத்தையும், சுதந்திரத்தையும்  அது காப்பாற்றுமா என்று  பார்க்க வேண்டாமா? கணினி மயமான இன்றைய உலகத்திலே, கடவுச் சொல் பலமானதாக இல்லேன்னா, அந்தக் கடவுளே வந்தாக்கூட உங்களைக் காப்பாத்த முடியாதுங்களே!  நிறையப் பேர்  இதுக்காக மெனக்கெட்டு, முறையான கடவுச் சொல் உருவாக்கப் பெரிய புதையலே  சேர்த்து வச்சிருக்காங்க! அதைப் பத்தித்தான் பேசப் போறோம் இப்போ! அப்புறமா உங்க மேட்டருக்கு வருவோம்! சரியா?

வந்தவர்: "ஹூம்! சரி சார்! சொல்லித் தொலைங்க! (மனதுக்குள்: நான்  இன்னைக்கி முழிச்ச முகம்  சுத்தமா சரியில்ல...அதுமட்டும் நல்லாத் தெரியுது!)"

(எச்சரிக்கை: கொஞ்சம் நீளமான பதிவு இது.  நிதானமாகப் படிக்க வேண்டியது! அவசரமான வேலை  இருந்தா, போயிட்டு  அப்புறமா  வாங்க! ஆனா, மறக்காம  வாங்க !)

சரி,  "கடவுச் சொல்" நல்லாவே தெரியும் உங்களுக்கு. ஆனா, உங்கள் கடவுச் சொல் உங்களுக்கு மட்டுமே தெரிந்ததாகவும், மற்றவர்களால் வெகு எளிதில் கண்டு பிடிக்க முடியாத அளவுக்குக் கடினமானதாகவும், மறைபொருள் உள்ளதாகவும் இருக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியுமா?! தெரிந்திருந்தாலும் கூட, அப்படிப் பட்ட கடவுச் சொற்களைத் தான் நீங்கள் பயன் படுத்துகிறீர்களா? இந்தக் கேள்விகளுக்குப்  பெரும்பாலோர் ( >80%) அளிக்கும் பதில் கொஞ்சம் கூடத் திருப்திகரமானதாக இருக்காது என்பதே உண்மை! abc123, abc123$, gopal123, sheela234, ram@home,  password, nopassword, iloveyou, ihatehim, surya143, 243katrina போன்றவை தான் பரவலாக வழக்கிலிருக்கும் கடவுச் சொற்கள் என்று ஆராய்ச்சியாளர்கள்   கூரை மேல் ஏறிக் கூவிக்கொண்டு இருக்கிறார்கள், உலகெங்கும்! இப்படிப்பட்ட கடவுச் சொற்கள் எளிதில் தகர்க்கப்பட்டு, உங்கள் வங்கிக் கணக்குகள்,  மின்னஞ்சல் பெட்டிகள், பதிவுலகப் பட்டறை  போன்றவை,  சூறையாடப்படும்  சாத்தியக்கூறுகள்  மிக, மிக, மிக  அதிகம் என்பதே நிதர்சனமான, ஆனால் வயிற்றில் புளியைக் கரைக்கும் உண்மை! இந்தச் சமுதாய சேவையைச் செய்பவர்கள், பெரும்பாலும், வேறு யாருமல்ல! உங்களை நன்றாக  அறிந்தவர்கள்  அல்லது உங்கள் எதிரிகள் தான் என்பது மேலும் அதிர்ச்சி தரும் தகவல் மட்டுமல்ல, சுடும் நிஜம் கூட!

அச்சச்சோ! என்னங்க இது!  உங்களுக்கு ஏன் இப்படி ஒரேயடியா வேர்த்துக் கொட்டுது? உடம்பெல்லாம் நடுங்குது!? அடடே, இந்தாங்க கொஞ்சம் 'ஐஸ்வாட்டர்' குடிங்க, அதுலயே முகத்தையும் கொஞ்சம் கழுவிக்கோங்க... அதோ இருக்கு பாருங்க 'வாஷ்பேசின்', (நான் கைத்தாங்கலா பிடிச்சிக்கிட்டு வர்றேன்) வாங்க... வாங்க! இந்தாங்க  டவல்...தொடைச்சுக்குங்க! பக்கத்து ரூம்ல "ஏசி" போட்டிருக்கு, அங்கே போய் உக்காந்து ஆசுவாசம் பண்ணிக்கிட்டு அப்புறமா பேசலாம்! வாங்க....மெதுவா... மெதுவா ... பாத்து வாங்க! 

(பத்து நிமிடம் கழித்து...) இப்பப் பரவால்லியா? மேல பேசலாமா...? சரி! அப்படியானால், முறையான, வலுவான மற்றும் பாதுகாப்பான கடவுச் சொல் எப்படி இருக்க வேண்டும்? இதோ, சம்பந்தப்பட்ட  வல்லுனர்கள்  சொன்ன சில விதி முறைகள்:
  1. போதுமான நீளம் வேண்டும் :  குறைந்தது 8 குறியீடுகள் இருக்க வேண்டும்.
  2. பெயர்/கள் (தன், உற்றார், உறவினர், நண்பர்கள், எதிரிகள்  பெயர்/கள் ) அதில் இருக்கக் கூடாது.
  3. அர்த்தமுள்ள முழு வார்த்தைகள் அடங்கியிருக்கக் கூடாது.
  4. எண்களும் எழுத்துக்களும் கலந்திருக்க வேண்டும். 
  5. பெரிய மற்றும் சிறிய எழுத்துக்கள் கலந்து இருக்க வேண்டும் (Upper and Lower Case, in English: A, a, B, b போல)
  6. சிறப்புக்  குறியீடுகள் (Special characters: ^ < @  #  :  *  $ ! ; போன்றவை)  இடம் பெற்றிருக்க வேண்டும்.
வந்தவர்(மீண்டும் கொதிப்படைந்து...): "யோவ், உமக்கென்ன  பைத்தியமா பிடிச்சிருக்கு? இப்பேர்ப்பட்ட கடவுச் சொல்லை கண்டு பிடிப்பது அவ்வளவு சுலபமா என்ன? அப்படியே, ராப்பகலா தூங்காம,  மண்டையப் போட்டு உருட்டி,  கசக்கிப் பிழிந்து  கண்டு பிடிச்சாலும்,  அதை ஞாபகம் வைச்சுக்க  ஒரு முழுநேர உதவியாளரை   வேலைக்கு  வைக்கணுமே, அவருக்குச் சம்பளம் நீங்கதானே  குடுக்கப் போறீங்க?" என்று (உடம்பில் தெம்பில்லாவிட்டாலும் கூட) குரலில் அனல்பறக்கக்  கேட்கிறார்!

அதான் இல்லே! நீங்க நினைக்கிற மாதிரி இது ஒண்ணும் பெரிய கம்ப சூத்திரம் இல்லை என்று அடித்துச் சொல்லத்தான் வந்தேன்! அதுக்குள்ள அவசரப் பட்டுட்டீங்களே! அட, நீங்க  வேற, பாவம் உங்களை இல்லீங்க, மேசையைத்தான் அடித்துச் சொல்றேன்! ஆனா, நீங்க மட்டும் பதட்டப்படாம, கொஞ்சம்... பொறுமையாக் கேக்கணும் !  புரிஞ்சுதா ...?

சரி, இப்போ  ரகசியப் புதையலைக் (அதாங்க, கடவுச் சொல் புதைந்து கிடக்கும் சொற்குவியல்!) கண்டுபிடிக்கறது எப்படி, பிறகு அதிலேர்ந்து நல்ல கடவுச் சொல்லைத் தோண்டி எடுக்கிறது எப்படீன்னும் பார்ப்போம்! நாம் தேடும் இந்தப் புதையல் ஏறக்குறைய கடவுள் மாதிரி தாங்க! தூணிலும் இருக்கும்,  துரும்பிலும் இருக்கும் :)))). அதனாலே, கண்டு பிடிக்கறது ரொம்ப சுலபங்க! நமக்குப் பிடித்த, எளிதில்  மறக்க  முடியாத, கவர்ச்சிகரமான சொற்றொடர்கள், பழமொழிகள், பொன்மொழிகள்,   பாடல் வரிகள், நீண்ட தலைப்புகள்  போன்றவை தான்  இந்தப் புதையல்கள் !
  1.  தங்கமாளிகையில்  பார்த்த  வெங்காயம் இப்போ நடைபாதையிலேயே  கிடைக்குதே ! - இது ஒரு ரகசியப் புதையல் (நல்ல உதாரணம்... இல்லே! ஆமாம்...! நானேதான் சொல்லிக்கணும்...! வேற வழி?! நீங்கதான்  shock  அடிச்சா  மாதிரி பாக்கறீங்களே!  சரி, சரி... போனாப் போறது, விட்டுத் தள்ளுங்க! இப்படி வித்தியாசமா சிந்திக்கிறது நல்லதுங்க! ஆனா நல்லா கவனிங்க... இப்பத்தான் கதையே சூடுபிடிக்கப் போவுது! ). 
  2. இந்தப் புதையலில் உள்ள  வார்த்தைகளின் முதல் எழுத்துக்களை மட்டும் எடுத்துக் கொள்வோம்: Tpvink (எல்லா  நுழைவாயில்களிலும் ஆங்கிலக் கடவுச் சொற்களை உபயோகிப்பது எளிது என்பதால் வார்த்தைகளின் ஒலிவழி மொழி மாற்றம் செய்து கொள்வது அவசியமாகிறது)!
  3. அடுத்ததாக,  எண்ணைச் சேர்க்க வேண்டும். வெங்காயம் 65 ரூபாய் வரை விற்றதால் அதையே கூட எடுத்துக் கொள்ளலாமே! ஆக: 6Tpvink5
  4. இந்தப் புதையல் ஆச்சரியக்  குறியில்  முடிவதால் அதையே  நமக்குத்  தேவையான  சிறப்புக்  குறியீடாகச்  சேர்த்துக்  கொள்ளலாமே! அதை  எங்கே  சேர்க்க  வேண்டும்  என்பதும்  நாமே  தீர்மானிக்க  வேண்டிய விஷயம் தானே! அவ்வளவுதான்!  நமக்குத் தேவையான வலுவான கடவுச் சொல் கிடைத்து விட்டது பாருங்கள்: 6Tpvi!nk5 (ink என்ற முழு வார்த்தையை சிதைக்க அதன் இடையில் ! சேர்த்து விட்டேன், சரிதானே!)
  5. நாம் கண்டுபிடித்த  கடவுச் சொல் - 6Tpvi!nk5 - சட்டதிட்டத்துக்கு உட்பட்டதுதானா என்று நீங்களே பாருங்களேன்! (சட்டதிட்டமா, அப்படீன்னா...?! போச்சுடா...துக்குள்ள மறந்துட்டீங்களா... மொதல்ல சொன்ன ஆறு விதிகள் தாங்க அது! ஹூம்! ஆண்டவா...! இப்படியே போச்சுன்னா,   கிழிஞ்சுடும் லம்பாடி லுங்கி! ) 
ஆக, எளிதில் நினைவில் வைத்துக் கொண்டு பயன்படுத்தக் கூடிய, முறையான, வலுவான, பாதுகாப்பான   கடவுச் சொல் தயாரிக்க, நீங்கள் செய்ய வேண்டியது (தெரிந்து கொண்டது) இவ்வளவு  தான்: 

  1. முதல் வேலை: உங்களுக்கு எளிதில் நினைவில் நிற்கக் கூடிய, வித்தியாசமான, ரகசியப் புதையலைக் (கடவுச் சொல் புதைந்து கிடக்கும் சொற்குவியல்) கண்டு பிடிப்பது .
  2. அந்தப் புதையலில் இருந்து  கடவுச் சொல்லை வெளிக்கொணர   நீங்கள் கைப்பிடிக்கும் தெளிவா விதிமுறை  வகுப்பது. எல்லா வார்த்தைகளிலிருந்தும் முதல் எழுத்து அல்லது, முதல் வார்த்தையிலிருந்து முதல் எழுத்து, இரண்டாம்  வார்த்தையிலிருந்து  இரண்டாம் எழுத்து, கடைசி வார்த்தையிலிருந்து கடைசி எழுத்து... என்று எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்! உங்களுக்குப் புரியும்படியும், நினைவில் நிற்கும்படியும் இருந்தால் போதும் (இருப்பது அவசியம்)!
  3. கடவுச் சொல்லில் கலப்பதற்கான எண்ணை  / எண்களைத்  தேர்ந்தெடுப்பது! எவ்வாறு? ஏன்? எப்படி நினைவில் வைத்துக் கொள்வது? (மாதம், வருடம், தேதி, விலை, 63 இடங்கள், கதவிலக்கம், ஆழ்வார்கள், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு, திருக்குறள்....கணக்கிலடங்காது!)
  4. கடவுச் சொல்லில் சேர்க்க வேண்டிய சிறப்புக் குறியீடு/கள் பற்றி முடிவு செய்வது! எது?  எவை? எத்தனை? ஏன்? எதனால்? எங்கே, எதற்காக? என்ன பொருள்? ( ? ! * ^ < # $ @ & ) 
அவ்வளவு தான்! பயன் தரும், பயம் போக்கும், பலத்த,  மனம் குளிரும்  கடவுச் சொல் தயார்! 

இனிமேல், அடடா! கடவுச் சொல் மறந்து போச்சே என்கிற கவலையே வராது உங்களுக்கு! அப்படியே வந்தாலும், புதையலைத் தோண்டினால் புன்முறுவல் எட்டிப் பார்க்குமே! ஐயோ...ஐயய்யோ,  புதையலையே மறந்து விட்டால் என்ன செய்வது என்றா கேட்கிறீர்கள்? பூதத்தின் உதவியைத் தான் நாட வேண்டியிருக்கும், தயாராக இருங்கள்!  அப்படீன்னா கவலையே இல்லையா?! ஏன்?  ஓ! உங்கள் மாமனார் பெயர் மாத்ருபூதமா?....அய்யா, சாமி! ஆளை விடுங்க! இப்பேர்ப்பட்ட மருமகனை/ளை அலாவுதீன் பூதம் வந்து,  அலாக்காய்த் தூக்கிக் கொண்டு போய்  (தசாவதாரம் பாணியில்) பெரிய்ய கல்லுடன் கட்டி,  நடுக்கடலில் தான் போட வேண்டும்...! நான் அம்பேல்! 

மத்தவங்க  யாரும்  அனாவசியமா பயப்பட வேண்டாம்! "கடவுச் சொல்லை மறந்து விட்டீர்களா? இங்கே சொடுக்குங்கள்!"  என்று கூவுமே ஒரு சுட்டி, அதன் தலைமேல  ஒரு கல்லைத் தூக்கிப் போடுங்க, தானா வழி பிறக்கும்!!!

- மனம் திறந்து ...(மதி).

பின் குறிப்பு (குட்டிப் பதிவு!?):
  1.  இந்தப் பதிவு ஒரு குட்டி "Coaching Class" மட்டுமே. நீங்கள்  தேர்விலே வெற்றி  பெற ஆசைப்பட்டால் இங்கே செல்லவும்:  www.passwordmeter.com
  2. நாம்  உயிரைக் குடுத்துக் கண்டுபிடிச்ச 6Tpvi!nk5 அவங்ககிட்ட வாங்கின மதிப்பெண்  80% தாங்க !  :(((
  3. அதை 100% ஆக மாத்தறது எப்படீன்னு நீங்களே கண்டு பிடிச்சிடுவீங்க, நான் சொல்லித்தர வேண்டியதில்லை! :)))) 
  4. இந்தப் பதிவும் , வழக்கம் போல, கொஞ்சம் நீண்டு போச்சுங்க! குறைப்பது எப்படீன்னு தெரியலை! தெரிஞ்சா சொல்லுங்க!
  5. இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்ததா ? பயனுள்ளதா?  இன்னும் நிறையப் பேர் இதைப் படிக்கணும்னு நீங்க விரும்பறீங்களா? அப்போ, என்னவெல்லாம் பண்ணனும்னு உங்களுக்கே தெரியுமே! தவறாம பண்ணுங்க!
  6. எச்சரிக்கை: இந்தப் பதிவின் தொடர்ச்சி, மிகவும் பரபரப்பானது, சுவாரஸ்யமானது அப்படீன்னு ஏன் சொல்லலைன்னு நீங்க கேக்கக் கூடாது பாருங்க, அதான் சொல்லிப்புட்டேன்! நேரமும், மனசும் ஒத்துழைச்சா அதையும் படிங்களேன்:   தலைப்பு, மேட்டரு... தனிக்குடித்தனம்!

    Friday, March 4, 2011

    தாத்தா, பாட்டி...நிலை என்ன ?

     
    ஒரு விதத்தில் பார்த்தால், Abraham Maslow  சொன்ன Hierarchy of Needs லே Self Actualization Needs பூர்த்தி ஆகிற நிலை தான் தாத்தா, பாட்டி


    (Image Courtesy: http://en.wikipedia.org)

    என்னை நானே அறியாத என் குழந்தைப் பருவம்

    உலகை நான் புரிந்து கொள்ளவில்லை என்று உணராமல் உலகையே எதிர்க்கும், பழிக்கும், உதாசீனப் படுத்தும் இளமைப் பருவம்!

    எதற்காக வாழ்கிறேன், எங்கே போகிறேன், ஏன் இப்படி எதன் பின்னாடியோ எப்போதும் ஓடிக்கொண்டிருக்கிறேன் என்று நினைத்துக்கூடப் பார்க்க நேரமில்லாமலே முடிந்து விடுகின்ற குடும்பத் தலைவன், தலைவி வாழ்க்கை!  
     

    என் பிள்ளைகளே கூட என்னைப் புரிந்து கொள்ளாமல் உதாசீனப் படுத்தி, ஒதுக்கி வைத்த போதும்

    அக்கம் பக்கத்தாரும் கூட ‘நச்சரிக்கும் பெருசுகள்’  என்று தவிர்த்து விடும் போதும்,  
     
    என் வலிவின்மை, வனப்பின்மை, பொருளின்மை எல்லாவற்றையும் துச்சமாக்கித் தூரத் தள்ளிவைத்து, எல்லாம் தெரிந்த குழந்தையாய் என்னை மாற்றி விட்டு, எதுவும் தெரியாத என் பேரக் குழந்தை என்னிடம் அளவு கடந்த அன்பு காட்டுகிறதே

    சொர்க்கம் என்பது எப்படி இருக்கும் என்று, அதன் வாயிலை எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கும் எனக்கு, இங்கேயே ஒரு "virtual reality show" வாக வழங்கி, வாழ்வின் சுமையான இறுதிக் காலத்தை சுவைக்க வைக்கிறதே அந்தப் பிஞ்சு உள்ளம்;  


    இது வரை இல்லாத அளவுக்கு, எனக்கே ஆச்சர்யம் தரும் வகையில், நான் எவ்வளவு நல்லவனாக இருக்க முடியும் என்று சொல்லாமல் சொல்லி என்னையே மாற்றி விடுகிறதே அந்தப் பேரக் குழந்தை

    அதனால் தான் (மீண்டும்) சொல்கிறேன், தாத்தா பாட்டி நிலை "உச்சக்கட்ட தேவைகள்" பூர்த்தி அடையும் நிலை என்று!

    - மனம் திறந்து... (மதி).


    பின் குறிப்பு: இந்தப் பதிவு உருவாகக் காரணமான டுபுக்காரின் பதிவை நீங்கள் அவசியம் படிக்க வேண்டும்!