Sunday, January 30, 2011

வாழ்க்கை... ஒரு பார்வை!


உலகமே உங்கள் கையில்! ஆனால் நீங்கள்...?

உலகை உங்கள் கையினில் இன்று
ஒரு கைபேசி தந்திடும் நன்று!

ஆனால்
...
உள்மனம் மட்டும்  வசப்பட வில்லை
உள்ளும் புறமும் ஆயிரம் தொல்லை!
                            
வளர்ந்தது விஞ்ஞானம் குறுகியது உலகம்
வறண்டது மெய்ஞ்ஞானம் குறுகியது உள்ளகம்!

முள்ளும்
மலரும் உறவின் முகங்கள்
முதிர்வும் நெகிழ்வும் உதவும் கரங்கள்!

உற்ற
 நண்பர்கள்  உறவினும்  மேலோர்
உணர்ந்து தெளிந்தவர் உலகை வென்றோர்!


பணமெது? மனமெது? வீடெது? நாடெது?
பொய்யெது? மெய்யெது? சுகமெது? வரமெது?

அன்று,
மனமெனும் தலைக்குப் பணம் வெறும் அடியாள்
இன்று, பணம் நாட்டாமை மனம் வெறும் ஆமை!


அன்று, நாட்டைத் தாங்கிப் பிடித்த வேர்  வீடு
இன்று, நாடுகள் அறைகள்...இது நாட்டார் வீடு!


என்னிடம் குறைகளா...!? பொய்! பொய்! இது பொய்!
மனிதர்கள் மோசம்...! இது மெய், இது மெய்!

அடுத்தவர் நம்மைப் புகழ்ந்தால்
அது சுகம்,
படுத்த உடனே உறங்கினால் அது வரம்!

செல்வமும்
சுகமும்  பயணச் சீட்டே
பயணமே  அதுவெனப் பார்த்தால்  வேட்டே!

வாழ்க்கை
என்பது வாய்ப்பது அன்று
வலிந்து தெரிந்து  சுவைப்பது இன்று!

உடல்
ஒரு கருவி, ஊடகம் தானே?
உள்ளம் சொல்லும்: எஜமான் நானே!

உடலை வளர்த்தோர் உயிர் வளர்த்தாரே,
 
உள்ளே வளர்ந்தோர் உலகளந்தாரே!


மனமும் மதியுமே ஆக்கும் கருவிகள்
மானுட நேயம் வார்க்கும் அருவிகள்!

உயிருடன்
இருப்பது மட்டுமே வாழ்க்கையா?
உவந்து  கலந்து  உயர்வது  நேர்த்தியா?

ஒவ்வொரு
நாளும் உறங்கும் முன்பு
ஒரே
 ஒரு  கேள்வி  உதயமாகட்டும்!

இன்று நாம் வாழ்ந்தோமா
?
எப்போ? எப்படி? எவ்வளவு நேரம்?

- மனம் திறந்து...(மதி)

பின் குறிப்பு:
  1. அவையடக்க அறிவிப்பு: நான் கவிஞன் அல்ல!
  2. அவையடக்கம்:- கொதித்து எழுகின்ற அவையினரை அடக்க முயற்சி செய்வது!?

Thursday, January 27, 2011

விமர்சனம்...ஒரு பார்வை!

செய்யும் முன் செய்ய வேண்டியது: எடுத்தாண்ட கருப்பொருளையும், தளத்தையும், களத்தையும், காலத்தையும், படைப்பாளியின் பின்புலனையும், படைப்பாளியின் நோக்கத்தையும் புரிந்து கொள்ள பலவாறான  கோணங்களில் மனமுவந்து முயற்சி செய்வது!

செய்யத் தகுதி: அந்தத் துறை அல்லது விஷயத்தில் போதுமான படிப்பறிவோ, அனுபவமோ, சுவைக்கும் திறனோ  இருப்பது (இருப்பதாக நாமே நினைத்துக் கொள்வது பத்தாது!).  சாப்பாட்டை  விமர்சிக்க நன்கு சமையல் செய்யத் தெரிந்திருக்க வேண்டியது அவசியம் இல்லைதானே?

செய்யும் நோக்கம்: சம்பந்தப் பட்ட கருப்பொருளைக் கையாண்ட விதம் குறித்த மகிழ்ச்சியை அல்லது மன வருத்தத்தை உரிய காரணங்களோடு, உகந்த வகையில் உலகுக்கு(ம்)  உணர்த்துவது! படைப்பாளியின் போக்கைத் திருத்த அல்லது அவரிடமிருந்து நன்மதிப்பைப் பெற முயல்வது!

செய்யும் விதம்: குறைகளைப் பேசும்போது, சம்பந்தப் பட்ட படைப்பாளியே படித்தாலும்(சோமாரி, கைக்கூலி என்றெல்லாம் அநாகரிகமாகத் திட்டாமல்,அவர் முழுதாய்ப் படிக்கக் கூடிய விதத்தில்  இருந்தால் தானே இது சாத்தியம்!), ஒட்டு மொத்தமாக இல்லாவிட்டாலும், வேறு கோணத்தில் பார்த்தால்  ஓரளவாவது உண்மை இருக்கத்தான் செய்கிறது என்று எண்ணும் அளவிற்கு இருத்தல் அவசியம்! நிறைகளைச் சொல்லும்போது நெருடல் இல்லாமல் படிக்கும் படியும் இருக்க வேண்டும்(அளவுக்கதிகமான, காரணமில்லாத புகழ்ச்சியாகி விடக் கூடாது)!

செய்யும் உந்துதல்(உள் நோக்கம்): கலையை வளர்க்க, இன்னும் பல பேரை இவ்வாறு (படைப்பு) செய்யத் தூண்ட, தனக்கு இவ்வளவு விஷயம் தெரியும் என்று காட்டிக் கொள்ள, இப்படி ஒரு படைப்பு உருவானதே என்ற உண்மையான மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள என்பதெல்லாம் சரியே!  [நிறைய பேர் பிரபலமான பெரியவர்களைக் கண்டபடி விமர்சித்தால் வெளிச்சம் நம் மீது விழும், சீக்கிரம் புகழ் கிட்டும்  என்று செய்கிறார்கள்...இது ஏற்புடையதல்ல!]

தேவையானவை: சுய சிந்தனை , போதுமான நேரம், சரியான ஊடகம், அடிப்படை அறிவு, முறையாக நம் கருத்தை வெளிப்படுத்த வேண்டும் என்ற நேர்மையான ஆர்வம், தன்னைத் தானே பண்படுத்திக் கொள்ளத் தணியாத தாகம் (அய்யோ, மெயின் அயிட்டம் மறந்தே போச்சே: ஆட்டோ நுழைய முடியாத குறுக்குச் சந்தில் நம் வீடு இருக்க வேண்டும்)... இவை தான் மிக முக்கியமானவை என்று நான் கருதுகிறேன். ஆற்றல், திறமை வேண்டும்  என்றெல்லாம் எண்ணி ஆரம்பிக்கவே தயங்க வேண்டியது இல்லை...அவையெல்லாம் பழகப் பழகத் தானே(!?) வரும் (இதோ... நான் கடை தொடங்கலியா!). ரோமாபுரி ஒரே நாளில் உருவாக்கப்பட்டதல்லவே? அமிதாப் பச்சன் முதலில் முகம் சரியே இல்லை என்று விரட்டப் பட்டவர் தானே!  

சுய சிந்தனை  மற்றும் தேடல்  துளிர்ப்பதின் முதல் அடையாளம் தான் விமர்சனப் பார்வை  என்பது என் கருத்து...உண்மை தானே? (இவ்வளவு பேசிட்டு நானே ஒரு சொந்தக் கருத்தைக் கூட சொல்லாம போயிட்டா நல்லா இருக்காது பாருங்க...அதான்! இது...இது... சொந்தக் கருத்தா(?)ன்னு கேட்டு அடிக்க வராதீங்க அப்பு...கடை இப்பத்தான் தொறந்திருக்கு....இன்னைக்கே இழுத்து மூடற மாதிரி பண்ணிடாதீங்க! வேணாம்... அழுதிருவேன்... அவ்வ்வ்வவ்வ்வ்! சின்னப் பயல யாவாரம் பண்ண உடுங்கப்பா!)

தவிர்க்க வேண்டியது: தகுதி இல்லாத,மிகவும் தரம் தாழ்ந்த, தவறான உள்நோக்கத்துடன் உருவாக்கப் பட்ட படைப்புகளை விமர்சனம் செய்யாமல் புறக்கணிப்பதே  ஒரு விதத்தில் நல்லது என நான் நினைக்கிறேன்! இல்லையெனில், நம் விமர்சனத்தாலேயே அத்தகைய படைப்புகளுக்கு, அருகதையில்லாத விளம்பரத்தையும், அங்கீகாரத்தையும், நம்மை அறியாமல், நாமே கொடுத்த குற்ற உணர்வுக்கு ஆளாவோம் (அப்படீன்னா இந்தப் பதிவுக்குப் பின்னூட்டம் போட வேண்டியதில்லை என்று நீங்கள் நினைப்பது எனக்குப் புரிகிறது! நுணலும் தன் வாயால் கெடும்னு சும்மாவா சொன்னாங்க பெரியவங்க?)!

செய்யக் கூடாதது: படைப்பை ஒரு சாக்காக வைத்துக்கொண்டு படைப்பாளியில் தொடங்கி, வருவோர், போவோர், உழைப்போர், நடப்போர், தூங்குவோர், ஆளும் கட்சி, எதிர்க் கட்சி, ஊர் பேர் தெரியாத கட்சி மற்றும் மகாத்மாவிலிருந்து மம்தா பானர்ஜி வரை  எல்லோரையும்  சகட்டு மேனிக்குத் தாக்கு தாக்கு என்று தாக்கி, தனது  (தற்)கொலை வெறியை எல்லா ஜீவராசிகளுக்கும் பரப்பி விட்டு, இப்படியே போனால் இந்த மனித வர்க்கம் முழுவதும் அடுத்த  மாதமே அழிந்து போகும் என்பது போல, உலகெங்கும் ஒரு மரண பயத்தையும்,  (ஊரடங்கு உத்தரவு போட்ட மாதிரி) வெறிச்சோடிக் கிடக்கும் தெருக்களையும் உருவாக்கி விட்டு பாதுகாப்பாக ஒரு ஹெலிகாப்டர் மீது ஏறி உட்கார்ந்து கொண்டு, ஹிட்லரைப் போல ஒரு குரூரப் புன்னகையுடன் உலகை வலம் வருவது! (ஸ்ஸ்ஸ்ப்பா... மூச்சு வாங்குதே!) அதோடு நிற்காமல், இந்த அற்ப  சந்தோஷத்தை எல்லா நண்பர்களுக்கும் SMS செய்து உசுப்பேத்தி அவர்கள் அனைவரும் தத்தம் கைபேசிகளை switch off செய்து கோமாவில் வைக்கத் தூண்டிவிட்டு, அவர்களையும்  உலகத் தொடர்பிலிருந்து துண்டிப்பது...தன் நண்பர்கள் என்ற ஒரே காரணத்துக்காக இப்படி அனாவசியமாகத் தண்டிப்பது!

வெற்றி பெறுவது: நல்ல விமர்சனம் என்பது, சம்பந்தப் பட்ட படைப்பை விட  மிக அழகாகவும், ஆழமாகவும், படைப்பாளியை, அவர் செய்திகளை நம்முன் நிறுத்தி, விளக்கி, மெருகேற்றி நமக்கும் அவருக்கும்  மன நிறைவைத் தருவது (நாம் பார்த்த  சினிமாவை விடவும் விமர்சனத்தை ரசித்தது எத்தனை முறை...அடடா!), அந்தப் படைப்பை விரைவில் தேடிப் பிடித்து உய்க்க நம்மை உந்தித் தள்ளுவது (எத்தனை ஆயிரம் புத்தகங்கள் விமர்சனத்துக்குப் பின்பே தேடி வாங்கப் பட்டன...அம்மாடி!)! படைப்பாளிக்கு உள்ள வரையறைகள், முட்டுக் கட்டைகள், கட்டுப்பாடுகள், தட்டுப்பாடுகள், நிர்ப்பந்தங்கள் இவற்றை எல்லாம் தாண்டிப் பயணிக்கக் கூடிய ஒரு அலாதி சுதந்திரம் விமர்சகருக்கு உண்டே!  இந்த வரப்பிரசாதம் வெற்றி வாயிலுக்கான, மிக அருமையான நுழைவுச்சீட்டு (முறையாகப் பயன் படுத்தினால்)!


பின் குறிப்பு: பதிவு நீண்டுவிட்டதோ? ஒரு இனிய நெடும் பயணத்தின் முதல் சுமைதாங்கி அதோ தெரிகிறது! சற்றே இளைப்பாறுவோம்...பிறகு தொடர்வோம்! [என் கன்னிப் பதிவு இங்கே நிறைவடைகிறது!]

- மனம் திறந்து...(மதி) 

பொது மன்னிப்பு!


கோவிச்சுக்காதீங்க ப்ளீஸ்! கடை இன்னும் திறக்கலே! சாமான் வாங்க ஆள் அனுப்பி இம்புட்டு நேரமாச்சு...அந்தப் பயலுக எங்க போய் தொலைஞ்சாங்க தெரியலையே!